என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    முறையாக வேலை வழங்க கோரி 100 நாள் திட்ட பணியாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்காமல் வார்டு வாரியாக பிரித்து வழங்குவதால் குளறுபடி ஏற்படுவதாகும் ஏற்கனவே வழங்கிய பழைய முறைப்படியே இந்த வேலை இத்திட்டத்தை வழங்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சீட்டம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

    தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் நேரில் சென்று சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார் அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
    ஆரணியில் டெங்கு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கு டெங்கு கொசு பணிக்கு தனியார் நிறுவனம் மூலம் ஓப்பந்த தொழிலாளர்களாக 32பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    மேலும் டெங்கு பணியாளர்கள் 33 வார்டுகளில் டெங்கு சம்மந்தபட்ட பணியை மேற்கொண்டு வருகிறன்றனர். இது மட்டுமின்றி கடந்த கொரோனா காலத்தில் முன்களபணியாளர்களாக கொரோனா சம்மந்தபட்ட பணிகளும் மேற்கொண்டு பணி செய்துள்ளனர்.

    ஆனால் டெங்கு பணியாளர்களுக்கு கடந்த 2 மாத காலமாக பணியையும் வழங்கவில்லை. கடந்த 4 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை தினகூலியாக ரூ.326 வழங்குவதற்கு பதிலாக வெறும் 260 ரூபாய் வழங்கவதாகவும் டெங்கு பணியாளர்கள் குற்றசாட்டுகின்றனர்.

    இதனையொடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஓப்பந்ததாரர் ஆகியோரிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆத்திரமடைந்த டெங்கு பணியாளர்கள் ஓன்றுணைந்து ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் திடிரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1வார காலத்தில் சம்பளம் வழங்குவதாக கூறியதன் பேரில் டெங்கு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

    கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய டெங்கு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
    கீழ்பென்னாத்தூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    வட்டார தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். துணை தகலவர்கள் பால் தங்கம், பாபு, மரியசூசை, துணைசெயலாளர்கள் நடராஜன், குமார், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    வட்டார செயலாளர் அய்யாசாமி அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை கல்வி மாவட்ட செயலாளர் பா. கரீம் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தின் விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். 

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், குலசேகரன், கலைவாணி ஆர்ப்பாட்டம் செய்தனர், வட்டார பொருளாளர் ஜானகி, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கற்பகம் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    திருவண்ணாமலை, போளூர் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
    திருவண்ணாமலை:

    சாலை விரிவாக்கம், வாகன நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    இந்த கணக்கெடுப்பு பணியின் மூலம் எந்தெந்த சாலையில் எவ்வளவு வாகனங்கள் செல்கின்றன என்று வாகனங்களில் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதன் அடிப்படையாக கொண்டு சாலை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை கோட்டத்திலும் இப்பணி தொடங்கியது. 

    திருவண்ணாமலை கோட்டத்தில் 44 இடங்களில் இப்பணி நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் நடைபெற்ற பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    அதேபோல் இப்பணியை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர்கள் கலைமணி, தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    இப்பணியானது தொடர்ந்து நேற்று முதல் 7 நாட்கள் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவண்ணாமலை கோட்டத்திற்கு உட்பட்ட போளூர் உட்கோட்டம் போக்குவரத்து செரிவு (வாகனங்கள்) வருடாந்திர கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    போளூரில் 4 இடங்களில் நடைபெற்ற கணக்கு எடுக்கும் பணிகளை போளூர் உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார் வெங்கடேசன் மற்றும் உதவியாளர் வேலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ராஜந்தாங்கல், கருத்துவாம்பாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகில் ராஜந்தாங்கல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றி வந்த ஒருவர் விவசாயி ஒருவரிடம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது. 

    இந்த நிலையில் ராஜந்தாங்கல் மற்றும் கருத்துவாம்பாடி பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று சுமார் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மாலை முதல் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு சுமார் 8 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது விவசாயிகள் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து விவசாயிகள் பிரதிநிதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    இதில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி ஆகியோர் இருந்தனர். 

    தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பாக காணப்பட்டது.
    சேத்துப்பட்டு, போளூரில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, செஞ்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பச்சையப்பன், நடராஜன், ஜான், ராகினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஏழுமலை, வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் 40 ஆண்டு காலமாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குறைந்த பட்ச பென்சன் ரூ.7850 மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் அண்ணா மலை, குழந்தைவேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கிளை தலைவர் பாபு, மாவட்ட கிளை செயலாளர் முத்துமாரி, மற்றும் சேத்துப்பட்டு, ஒன்றியத்தில் ஓய்வூதியர் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் போளூர் தாலுகா அலுவலகம் முன் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குறைந்தபட்ச பென்ஷன் தொகையை வழங்க வேண்டுமென்றும், அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜவ்வாதுமலை கோடை விழா குறித்து ஆலோசனை நடந்தது.
    திருவண்ணாமலை:

    ஜவ்வாது மலை கோடை விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது வரும் ஜூன் மாதம் மிக சிறப்பாக நடத்துவது குறித்து கலெக்டர் முருகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் மிகு அழகிய தோற்றத்துடன் உள்ள ஜவ்வாது மலையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம்.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடை விழாவில் கலந்துகொண்டு கண்டு களிப்பார்கள். 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக கோடை விழா நடைபெறாமல் இருந்து வந்தது. 

    இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் கோடை விழா நடத்துவது குறித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் கோடை விழா முன்னேற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ஜவ்வாதுமலை கோடை விழாவில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது மிக விமரிசையாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பல்வேறு துறை சார்பில் கண்காட்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் படகு சவாரி, சாகச நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
    திருவண்ணாமலையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 13-ந்தேதி நடக்கிறது என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    தனியார் துறை நிறுவனங்களும்- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

    அதன்படி வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

    இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

    முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்டு சைஸ் புகைப்படம், ரேஷன் கார்டு, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். 

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
    சேத்துப்பட்டு அருகே பைக் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    சேத்துப்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் கீழ்செவலாம்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி, இவரது மனைவி இமாகுலேட், (வயது 25).கனவன் மனைவி இருவரும் ைபக்கில்  சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது சேத்துப்பட்டு அருகே உள்ள இந்திரா நகர் பகுதி அருகே வந்தபோது நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். 

    இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு இமாகுலேட்வை அனுப்பி வைத்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி இமாகுலேட் பரிதாபமாக இறந்தார்.இவரது உறவினர்  சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம் அருகே லாரி மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 70) விவசாயம் செய்து வருகிறார்.

    பாகவளியில் இருக்கும் தனது சொந்த நிலத்திற்கு சென்று விட்டு பிறகு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது திருச்சி மாவட்டம் முசிறி வடுகபட்டி கிராமத்தை சார்ந்த பாலச்சந்தர் (30) என்பவர் டிப்பர் லாரியில் எம்சென்ட் மணலை ஏற்றிக்கொண்டு மிக அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். 

    அப்போது சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த முதியவர் ராதாகிருஷ்ணன் மீது லாரி மோதியது. இதில் முதியவர் உடல் தலை ஆகிய பாகங்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி சுற்றி ரூ.15 கோடியில் சிமெண்டு சாலை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி, காந்தி சிலை அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் மாட வீதியினை ரூ.15 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். 

    அவர் பேசியதாவது:- 

    திருவண்ணாமலைக்கு புகழ்சேர்த்து கொண்டிருப்பது அண்ணா மலையார் கோவில், முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை போல், ஆட்சிபொறுப்பேற்றவுடன் தேரோடும் வீதியில் சிமெண்ட் சாலை அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணிகள் இனி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபடியான நிதி ஒதுக்கீடு செய்து, சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 சாலை பணிகளை எடுத்துள்ளோம். அதில் கடலூர் - சித்தூர் சாலை 19.50 கி.மீ தொலைவில் ரூ.140.கோடி மதிப்பீட்டிலும், தானிப்பாடி வழியாக தருமபுரி முதல் திருவண்ணாமலையை இணைக்கிற அருர் சாலை, தருமபுரி – அருர் சாலை ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் நடைபெற உள்ளது. 

    மேலும், நபார்டு கிராம சாலை திட்டம் மூலம் ஒன்றிய சாலை, ஊராட்சி சாலைகளை தரம் உயர்த்துவது போன்ற 1465 கி.மீ ரூ.168 கோடி மதிப்பீட்டில் சாலைகள் எல்லாம் சீரமைக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சட்ட ப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், திருவண்ணாமலை  எம்.பி. சி.என்.அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி.

    திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்திக்வேல்மாறன், நகர மன்ற துணைத்தலைவர் எஸ்.ராஜாங்கம், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத்தலைவர்கள் கலைவாணி பரிமளா கலையரசன் (தண்டராம்பட்டு), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் –சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை அருகே விளை நிலத்தில் காட்டு பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி 5 வயது குழந்தை மற்றும் காப்பற்ற சென்ற தந்தையும் காயம் அைடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் காட்டு பன்றிக்கு அமைத்த மின்சார வேலியில் சிக்கி 5 வயது குழந்தை படுகாயம்  அடைந்தது.

    திருவண்ணாமலை அடுத்த காஞ்சி ரோடு சின்னபுனல் காடு பகுதியில் பாலகிருஷ்ணன்  என்பவர் தனது விளை நிலத்தில் மணிலா பயிர் செய்திருந்தார். அருகில் உள்ள காட்டிலிருந்து பன்றிகள் வந்து மணிலா பயிரை நாசம் செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

    இதனை கட்டுப்படுத்த அவர் நிலத்தை சுத்தி மின்சார வேலி அமைத்தார். இரவில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இருந்தது. தினமும் காலை நேரத்தில் அந்த மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று அந்த மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்துள்ளது. 

    அப்போது பக்கத்து நிலத்த சேர்ந்த சேர்ந்த பிரகாஷ் மகள் கோமதி (வயது 5) அவரது நிலத்தில் மிளகாய் பறிப்பதற்காக சென்றார்.

    அப்போது செல்லும் வழியில் மணிலா பயிருக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் அவரது கால் தெரியாமல் சிக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் ேகட்டு தந்தை பிரகாஷ் ஓடிவந்தார். அவரும் மின்வேலியில் சிக்கி காயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. 

    காயமடைந்த 2 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணா மலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×