என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருகே தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் பெருமணம் கிராமத்தில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
இதையட்டி கடந்த 12-ந்தேதி காலை விநாயகர் அனுக்ஞை ஸ்ரீகணபதி ஹோமம் ஸ்ரீநவக்கிரக ஹோமம் ஸ்ரீமகலட்சுமிஹோமம் வாஸ்து ஹோமம் பிரவேச பலி மிருத்ஸல் கரணம், அங்குரார்ப்பணம், ஆகியவை நடந்தது. மாலை 2ம் கால யாகசாலை பூஜை சஹஸ்ரநாம அர்ச்சனை வேதபாராயணம் மற்றும் தீபாராதனை வானவேடிக்கைகள் ஆகியவை நடந்தது.
மறுநாள் காலை கோபூஜை பிரம்மகத்தி மூன்றாம்கால யாகசாலை அம்மன் கோபுரத்திற்கு மகாகும்பாபிஷேகம் தேவாங்கு குல மக்கள் அமைப்பை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் டி.மூர்த்தி தலைமையில் வெகுவிமரிசையாக நடந்தது.
அதனை தொடர்ந்து குளக்கரையில் அம்மனுக்கு அபிஷேகம் காப்பு கட்டுதல் சக்தி, பண்டாரி, வீரபத்திரசுவாமி, கத்திவிளையாட்டு மற்றும் அழகுசேனைகளுடன் கோவிலுக்கு அழைத்து வருதல் ஜோதிதீபம் ஸ்தாபித்தல் மாவு இடித்தல் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கத்திநிறுத்துதல் ஆகியவை நடைபெற்றது.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கிராம தேவாங்கு குல மக்கள் அமைப்பை சேர்ந்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி ஊர் பிரமுகர் சுந்தரம் மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னின்று நடத்தினர்.
செய்யாறு நகர வளர்ச்சிக்கு நகராட்சி தலைவர், உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நகர மன்ற தலைவர் ஆ. மோகனவேல், துணைத் தலைவர் குல்சார் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டுவிழா நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பாராட்டு விழா இந்நிகழ்ச்சிக்கு ஓ.ஜோதி எல்.எல்.ஏ. தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கீ.ரகுராமன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், செங்கம் எம்.எல்.ஏ. மு.பெ. கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது,
நகரமன்ற உறுப்பினர் பதவி மிகவும் சிரமமான பொறுப்பாகும். ஒருவர் 5 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் வெற்றி பெற்றார். அந்த உறுப்பினர் சிறப்பாக பணியாற்றியவர் என்று பொருள்.
தொண்டு செய்தால் மட்டுமே அடுத்த முறை வெற்றி பெற முடியும். மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் தான் நிலைத்து நிற்க முடியும். புதியதாக பொறுப்பேற்றுள்ள உறுப்பினர்கள் சுயநலம் பார்க்காமல் மக்கள் நலம் தான் முக்கியம் என்று செயல்பட வேண்டும். மக்கள் பாராட்டும் அளவிற்கு நகரமன்ற தலைவர் மோகனவேல் செயல்படவேண்டும்.
நகர மன்ற தலைவர் போட்டி மனப்பான்மையோடு தன் காலத்தில் அரசின் பணிகள் என்ன கொண்டு வந்து சேர்த்து இருக்கிறோம் என்ற நோக்கத்தோடு அரசின் நிதி உதவி பெற்று நகரமன்ற வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்.
மக்கள் செலுத்தும் வரி பணத்தை மட்டும் வைத்து நகரத்தை வளர்ச்சி பெறச் செய்ய முடியாது. அரசின் ஒத்துழைப்பு தேவை.
செய்யாறு வளர்ச்சி
நகரின் வளர்ச்சிக்கு நகர்மன்றத் தலைவருக்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்து திட்ட பணிகளுக்கு நீங்கள் உந்துசக்தியாக இருக்க வேண்டும்.
செய்யாறு நகரம் எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி பெற வேண்டும். நகரமன்ற தலைவர் மோகன் நகராட்சிக்கு தேவையான பணிகளை பெற்று மக்களின் பாராட்டுக்களை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர்கள் பாபு, வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் ராஜு, திலகவதி ராஜ்குமார், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் எ.ம்எஸ். தரணி வேந்தன், நகர செயலாளர் வழக்கறிஞர் கே விசுவநாதன் ஒன்றிய செயலாளர்கள் ஆர் வி பாஸ்கரன், எம்தி.னகரன், தி.மு.க. நிர்வாகிகள் லோகநாதன், வேல்முருகன் முன்னாள் எல்.எல்.ஏ.க்கள் எதிரொலி மணியன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம் பஜார் வீதியில் ரூ.1.75 கோடியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் பஜார் வீதியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக போடப்பட்டு வரும் தார்சாலை பணியை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலசபாக்கத்தில் இருந்து பூண்டி செல்லும் சாலை அகலப்படுத்தி தார் சாலை போடும் பணி நடக்கிறது.
இதில் கலசப்பாக்கம் மெயின்ரோட்டில் இருந்து பஜார் வீதியில் செல்லும் போது அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளது.
இதனை சாலை போடுவதற்கு முன்பே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சாலை பணி தொடங்கி இருக்க வேண்டும் மேலும் கல்வெட்டு கட்டப்பட்டு வரும் இடத்தில் கல்வெட்டின் நீளம் அகலம் பெரிதாகவும் கால்வாயின் அகலம் குறுகியும் உள்ளதை பார்வையிட்டு கால்வாயின் அகலம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது 9 மீட்டர் அகலம் கால்வாய் உள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஒன்றை மீட்டர் அகலம் மட்டுமே இருந்தால் எப்படி தண்ணீர் செல்லும் எந்த பக்கத்தில் பார்த்தாலும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இன்னும் 2 நாட்களில் இந்த கால்வாயின் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றுங்கள் என்று வருவாய் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் சாலை போடும் பணி ஆக்கிரமிப்பை அகற்றி செய்ய வேண்டுமெனவும் பேசினார் பின்னர் கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப் கோட்ட பொறியாளர் முரளி உட்பட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போளூர் அருகே மரம் விழுந்து பெண் பணியாளர் பரிதாபமாக இறந்தார்.
போளூர்:
போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏரி கால்வாய்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏரிக்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள ஒரு தென்னை மரம் அடியோடு பெயர்ந்து கால்வாயில் விழுந்தது.
அப்போது ஏரி கால்வாயில் வேலை செய்துகொண்டிருந்த பூங் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி சுதா (வயது 38) பார்த்திபன் மனைவி மஞ்சுளா (35) ஆகியோர் மீது தென்னைமரம் விழுந்ததில் இருவருமே படுகாயமடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுதா வரும் வழியிலே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். மஞ்சுளா மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து சுதாவின் கணவர் சங்கர் போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.95 லட்சத்தில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.95 லட்சம் ஓதுகீடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் அருகே கொளத்தூர் ஏரி உள்ளதால் தண்ணீர் நிரம்பிய நிலையில் பணிகள் காலதாமதம் ஆனது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என கோயில் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
பெரணமல்லூரில் பாலீஸ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் செயின் திருடி சென்றனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியை சேர்ந்தவர் பழனி, இவரது தாயார் குப்பம்மாள் (வயது 75). பழனி மற்றும் அவரது மனைவி இருவரும் ஆசிரியர்கள்.
இவர்கள் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் குப்பம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.அப்போது சுமார் நேற்று மதியம் 1.30 மணி அளவில் பழனியின் வீட்டின் கதவை 2 பேர் தட்டி உள்ளனர்.
அப்போது உள்ளே இருந்து வெளியே வந்த குப்பம்மாள், என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு 2 வாலிபர்கள் நாங்கள் நகைக்கு பாலீஷ் போடுகிறோம். உங்கள் நகையை கொடுத்தால் பாலீஸ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளார்.
இதற்கு குப்பம்மாள் எங்களுக்கு பாலீஷ் எதுவும் போட தேவையில்லை என்றும் நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு அந்த 2 வாலிபர்கள் தாகமாக உள்ளது தண்ணீர் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.குப்பம்மாள் உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
அப்போது ஏதோ ஒரு பவுடரை தண்ணீரில் கலந்து உள்ளனர். இந்த பவுடரின் வாசனையால் மயக்கமடைந்த குப்பம்மாள், மயங்கினார்.உடனே குப்பம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் மயக்கம் தெளிந்த குப்பம்மாள், தான் அணிந்திருந்த நகைகள் திருடு போனது குறித்து கூச்சலிட்டார், உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்தபோது. அந்த நபர்கள் அங்கு இல்லை.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் பழனி புகார் அளித்தார். அதன்பேரில் பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
செய்யூர் தொழிற் வழித்தட சாலையை அதிகாரி ஆய்வு செய்தார்.
வந்தவாசி:
சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்டத்தின் மூலம் செய்யூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைப்பு சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கே.செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை எவ்வாறு தரமாக போடப்பட்டுள்ளது என்று சோதனை செய்தார். மேலும் சிறு பாலங்கள் ரயில்வே கீழ் பாலங்கள் வடிகால் கால்வாய்கள் உள்ளிட்டவை பார்வையிட்டார்.
மேலும் இச்சாலையில் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சாலைப் பணியை ஒப்பந்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டுமென்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நாளை இரவு நடக்கிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு மன்மத தகனம் நிகழ்ச்சி நாளை இரவு நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இது பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 5-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழாவையொட்டி தினமும் காலையில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
மேலும் இரவு சுமார் 7 மணியளவில் கோவில் 3-ம் பிரகாரத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அதன் பின்னர் சேடி பெண் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று 8-ம் நாள் விழாவை முன்னிட்டு இரவு உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்கள் காட்சி அளித்தார்.
தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க பொம்மை வடிவிலான சேடிப்பெண் சாமி மீது பூச் சொரியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் இரவு சுமார் 10 மணியளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மர தகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல ரூ.1¼ கோடியில் பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் தடையின்றி செல்ல ரூ.1 ¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் தொடக்க பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அப்போது வேங்கிக்கால் நிரம்பி மழை நீரில் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடித்து ஓடியது.
இதுமட்டுமின்றி இந்த வேங்கிக்கால் ஏரியில் வெளியேறிய உபரி நீர் மூலம் அவலூர் பேட்டை சாலை வழியாக சென்று திண்டிவனம் சாலையில் உள்ள நொச்சிமலை ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
அப்போது உபரி நீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதியில்லாததால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்தது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதைதொடர்ந்து வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையிலும் ஏரியின் எதிரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி நீர் கோடி போகும் பகுதியில் பாலம் அமைக்கும் இடத்தில் பள்ளம் எடுக்கும் பணி நடைபெற்றது. அதுமட்டுமின்றி வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் வழி தடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது.
நேற்று மாலை வேங்கிக்கால் ஏரி அருகில் சிறுபாலம் அமைக்கும் தொடக்க பணியை திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் தடையின்றி செல்லும் வகையில் சிறு பாலம், கல்வெட்டு அகலப்படுத்தி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் சுமார் 2 மாதங்களில் நிறைவு பெறும் வகையில் என்றனர். மேலும் வேங்கிக்கால் ஏரி உபரி நீர் செல்லும் நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட பகுதியை தவிர மற்ற பகுதியில் உள்ள கால்வாய்களையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆரணி பஸ் நிலையத்தில் 85 பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரணி:
ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதியில் உள்ள சுமார் 206 தனியார் மற்றும் அரசு பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதாக புகார் வந்தது.
ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் இன்று அனைத்து பஸ்களிலும் ஆய்வு செய்தனர்.
விதிகளுக்கு புறம்பாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 85 பஸ்களில் உள்ள ஏர்ஹாரன் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து இதே போன்று ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் கணினி நிறுவன வாகனத்திற்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வட்டாரத்தில் உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வட்டாரத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுபாட்டு) விஜயகுமார், உதவி இயக்குனர் அன்பழகன், வேளாண்மை அலுவலர்கள் அற்புதசெல்வி, சத்தியநாராயணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுதல், தகவல் பலகையில் உரங்களின் விலை விவரங்கள் விவசாயிகள் பார்வைக்கு தெரியும் படி வைக்கபட்டிருத்தல், உண்மை இருப்பு மற்றும் விற்பனை முனையக் கருவில் உள்ள இருப்பு வேறுபாடு இல்லாமல் இருத்தல், அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்கள் விற்பனை செய்தல், உர விற்பனை நிலையங்களில் உர உரிமங்களின் காலாவதி நாள், கொள்முதல் செய்யப்பட்ட உரங்களின் உரிய ஆவணங்கள் ஆகியவை குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்வது, விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உர கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ மீறிய செயல்களுக்காக சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்களின் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கலசப்பாக்கம் பகுதியில் சூறாவளி காற்றால் 70-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து நாசமானது.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம், கெங்கநல்லூர், கணேஷபுரம், கோவூர், சீட்டம்பட்டு, அணியாலைகாம்பட்டு உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பனை, தென்னை, வாழை மரங்கள் காற்றில் முறிந்து கீழே விழுந்து நாசம் அடைந்துள்ளன. மேலும் விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல் வயல்கள், கரும்பு ஆகியவையும் காற்றில் சாய்ந்து நாசம் அடைந்து உள்ளன.
மின்கம்பங்கள் முறிந்து கீழே விழுந்து உள்ள காரணத்தால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குடிநீருக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது 10-ம் வகுப்பு, பிளஸ் 1 பிளஸ் 2 அரசு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் இரவு நேரத்தில் படிப்பதற்கு அவதி படுகின்றனர்.
இதனால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறை அதிகாரிகளும் சேதம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






