என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கூழ் வார்க்கும் விழாவையொட்டி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 17-ந் தேதி மாரியம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. பிற்பகலில் கொப்பரையில் கூழ் ஊற்றி, ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை காலை மாரியம்மன் தேர் உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நாடகம் நடந்தது.இதேபோல் கண்ணமங்கலம் அருகே உள்ள வாழியூர் கிராமத்தில் மோகமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.பிற்பகல் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. சனிக்கிழமை இரவு நாடகம் நடந்தது.

    • போஸ்டரில் அ.தி.மு.க.வை வழி நடத்த வாருங்கள் என வாசகம்.
    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம்.

    திருவண்ணாமலை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பு சென்று கொண்டிருக்கும் வேளையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

    சேலத்தில் இருந்து வந்த அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியான காட்டாம்பூண்டியில் இருந்து ஆரணி வரை அவருக்கு அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் செல்லும் வழியெங்கும் போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது.

    இதில் திருவண்ணாமலையில் வைத்திருந்த பெரும்பாலான பேனர்களில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படமும், பெயரும் இடம் பெரவில்லை.

    மேலும் சில பேனர்களில் ஒற்றை தலைமையே, ஒற்றை தலைமை நாயகரே, பொதுச்செயலாளரே என்று எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு வைத்திருந்தனர்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பேனர்களால் திருவண்ணாமலை நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று திருவண்ணாமலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    அந்த போஸ்டரில் கழகத்தின் பாதுகாவலரே ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்த வாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் யார் ஒட்டியது என்று தெரியாத வகையில் தங்கமகன் ஓ.பி.எஸ். டீம் என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தது.

    திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனி, தனியாக ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வரதராஜுலு, தனலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிக்கும் தனது இளைய மகள் ஷர்மிளா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர்.
    • அறுவை சிகிச்சை செய்து ஏதாவது ஏற்பட்டால் எப்படி தனியாக வாழ்வது என கண்கலங்கி மகளிடமும் மருமகனிடம் கூறியுள்ளனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சட்டுவந்தங்கள் கிராமத்தை சேர்ந்தவர். வரதராஜுலு (வயது 82), இவரது மனைவி தனலட்சுமி (71), இவர்களுக்கு சசிகலா, ஷர்மிளா என்ற 2 மகளும் வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    வெங்கடேசன் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தனலட்சுமிக்கு கடந்த 10-ந்தேதி கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதனால் வரதராஜுலு, தனலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிக்கும் தனது இளைய மகள் ஷர்மிளா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர்.

    அறுவை சிகிச்சை செய்து ஏதாவது ஏற்பட்டால் எப்படி தனியாக வாழ்வது என கண்கலங்கி மகளிடமும் மருமகனிடம் கூறியுள்ளனர். நேற்று இரவு 10 மணிக்கு படுக்க சென்றனர்.

    இரவு சுமார் ஒரு மணி அளவில் ஷர்மிளா சென்று அம்மா, அப்பாவை பார்த்தபோது வரதராஜுலு, தனலட்சுமி விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

    உடனடியாக இருவரையும் ஆட்டோவில் செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து 2 பேரும் இறந்து விட்டதாக கூறினார்.

    இது சம்பந்தமாக ஷர்மிளாவின் கணவர் ரவி செய்யாறு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செய்யாறு தாலுகா அலுவலகம் அருகே நடந்தது.
    • அரசை கண்டித்து கோஷம் போட்டனர்.

    செய்யாறு :

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தியை நேஷனல் ஹெரால்டு பொய்வழக்கில் அமலாக்கத் துறையினர் விசாரணை செய்வதை கண்டித்து செய்யாறு தாலுகா அலுவலகம் அருகில் ஆற்காடு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வழக்கறிஞர் கலையரசன், தில்லை, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்எல்ஏ ராஜா பாபு, டாக்டர் வாசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் அமலாக்கத் துறையினர் செயலை கண்டித்தும் கோஷம் போட்டனர்.

    • வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் மனு அளித்தனர்

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் வந்தவாசி வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாற்றம் நத்தம் பட்டா நகல் இலவச வீட்டு மனை பட்டா வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி உழவர் பாதுகாப்பு அட்டை குடும்ப அட்டை வேளாண்மைத்துறை திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    விழாவில் முருகானந்தம் சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ்சந்தர், மருத்துவ அலுவலர் சிவப்பிரியா, வேளாண்மை அலுவலர் குமரன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெய்வசிகாமணி, உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தனது குடும்ப சூழ்நிலை காரணம் என கடிதம்
    • வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் வழங்கினார்

    சேத்துப்பட்டு :

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மண்டகொளத்தூர், ஈயகொளத்தூர், வம்பலூர், ஆகிய 5-வது வார்டு தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வகுமாரி செந்தில் இவர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஒன்றிய குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தியிடம் வழங்கினார்.

    அப்போது ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், ஒன்றியக்குழு துணை தலைவர் முருகையன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் எழில்மாறன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரேமலதா ராஜசிம்மன், சம்பத், சாமுண்டீஸ்வரி குமார், கோவிந்தசாமி, உள்பட உடனிருந்தனர்.

    • ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு விருது
    • கலெக்டர் வழங்கினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுவின் 13-வது சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி வரவேற்றார்.

    கூட்டத்தில் இந்திய அரசின் 75-வது வெள்ளிவிழா சுதந்திர தினவிழாவை போற்றும் வகையில் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சியின் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி, சமூக சேவையை பாராட்டி தேசிய அளவில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கு தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சசக்திகரன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

    இந்த மத்திய அரசின் விருது பெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும், அலுவலக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தும்,

    இவ்விருதினை பெற்றதற்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதோடு திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்தனர்.

    தமிழக அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மற்றும் நலத்திட்டங்கள் வழங்க திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி சமூக சேவையை பாராட்டி தேசிய அளவில் விருது பெற ஒத்துழைப்பு அளித்த திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்களை கவுரவிக்கம் வகையில் விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

    • வந்தவாசி இளங்காடு கிராமத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மருதாடு மற்றும் இளங்காடு கிராமங்களில் ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடத்தினர்.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    பின்னர் அந்த புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருவண்ணாமலையில் பரபரப்பு
    • பால் முறைகேடு குறித்து விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் நேற்று ஆவின் துறையை சார்ந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இங்கு உள்ள அதிகாரி ஒருவர் லிட்டர் கணக்கில் பால் முறைகேடு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் 2 நாட்களாக சோதனை செய்ததாக தகவல்கள் பரவியது.

    இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஆவின் துறையில் உள்ள லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மூலம் அவ்வப்போது ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் அதிகாரிகள் இங்கு வந்து ஆவணங்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இது வழக்கமாக நடைபெறும் சோதனை தான்.

    எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். அதிகாரிகள் சோதனை செய்த தகவல் பரவியதால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள சுண்டி பாக்கம் கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இவரது அக்காவின் மகள் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். தனது அக்காள் மகளை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிறுமியை வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்யாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    மெக்கானிக் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும வளாகத்தில் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் தன்னுடைய சொந்த செலவில் 95 அடி உயர ராஜ கோபுரத்துடன் புதியதாக ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகம் விழா புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் இன்று நடந்தது. ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீ பெரிய ஜீயர் சின்ன ஜீயர் சுவாமிகள் ஸ்ரீபெரும்புத்துர் ஸ்ரீமத் பரமஹம்ஸ ஸ்ரீ அப்பர் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமி முன்னிலையில் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை செய்து கங்கை, யமுனா, கோதாவரி, காவிரி, கமண்டலநாகநதி உள்ளிட்ட புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு வெங்கடாஜலபதி கோவில் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    அ.தி.மு.க. இணை ஒருங்கினைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தா.ம.க.தலைவர் ஜி.கே.வாசன், இந்துமக்கள் கட்சி தலைவர் சம்பத், ரத்னகிரி பாலமுருகனடிமை சாமிகள் கலவை சச்சிதானந்தா சாமிகள் கலந்து கொகொண்டனர்.

    இந்த கும்பாபிஷேகம் விழாவிற்கு வந்த அனைவரையும் புதிய நீதி கட்சி நிறுவனரும் ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவருமான ஏ.சி.சண்முகம் லலிதா சண்முகம் அருண்குமார் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் ஏ.சி.பாபு ஏ.சி.எஸ். கல்வி குழும நிர்வாகிகள் வரவேற்றனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

    • இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதியில் சாலையின் இருபுறமும் கடைகள்ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதி நகரின் முதன்மை தெருவாகும். இந்த தெருவில் கடைகள், வங்கி உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. ராஜவீதி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நூலகம், பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் செல்லும் முதன்மை வழியாக உள்ளது.

    இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் முதல் செங்கம் பேரூராட்சி அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை அலுவலக நேரம் உள்பட அவ்வபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் பள்ளிப் பஸ், கல்லூரி பஸ்கள், சரக்கு வாகனங்கள் அடிக்கடி இந்த தெருவை பயன்படுத்தி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுபோன்ற சமயங்களில் சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகள் மற்றும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சார்பதிவாளர் அலுவலக சந்திப்பு முதல் ராஜவீதி பேரூராட்சி அலுவலகம் வரை சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி வாசிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு, காவல்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×