என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • உறுப்பினர்கள் பங்கேற்றனர்

    போளூர்:

    போளூர் காமராஜர் கூட்டுறவு நகர வங்கியில் பொது பேரவை கூட்டம் நேற்று மாலை வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி செயலாளர் சார் பதிவாளர் சித்திக் அலி தலைமை வகித்தார். பொது மேலாளர் பி. ராமு முன்னிலை வகித்தார். காசாளர் மோகன் வரவேற்றார். உதவி பொது மேலாளர் பி.கேசவன் தணிக்கை அறிக்கை வாசித்தார்.

    இதைத்தொடர்ந்து துணை விதி திருத்தம், பணியாளர்கள் ஓய்வு வயது 58 இல் இருந்து 60ஆக உயர்த்துவது வங்கியின் உத்தேச வரவு செலவு திட்டம் புதிய அங்கத்தினர் சேர்ந்துள்ளதை அங்கீகரித்தல், என பல தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    அங்கத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு பொது மேலாளர் ராமு தகுந்த பதில் அளித்தார். முடிவில் அங்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
    • சாலை மற்றும் கால்வாய் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக புகார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் காய்கறி, பழ கடைகளுக்காக ரூ.30 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும் என்று நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நகரமன்ற கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நகரமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாங்கம், பொறியாளர் நீலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் நகரமன்ற வார்டு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் கூறுகையில்:-

    39 வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டுகளில் எந்த குறைகள் இருந்தாலும் உறுப்பினர்கள் என்னிடம் தெரிவித்தால் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் கால்வாய் பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

    தொடர்ந்து வார்டு உறுப்பினர் தாங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.

    வணிக வளாகம் கூட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான காந்தி நகரில் உள்ள காலியிடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரைத்தளத்தில் காய்கறி மற்றும் பழக்கடைகளும், முதல் தளத்தில் 121 பூக்கடைகளும் என 249 கடைகள் கொண்ட வணிக வளாகம் ரூ.30 கோடியே 10 லட்சத்தில் கட்டுவதற்கு திட்ட அறிக்கை அனுப்புவது என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சிறப்பு யாகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வன்னியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நல்லாத்தூர் அம்மன் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    முன்னதாக சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

    பின்னர் யாக வளர்த்த இடத்தில் இருந்து கலசங்கள் புறப்பாடு மேள தாள வாத்தியங்களுடன் வானவேடிக்கையுடன் பம்பை உடுக்கை அடித்து சாமியாடி சிவாச்சா ரியார்கள் கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்து கோவில் கோபுர கலசத்திற்கு உள்ள சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாரதனை காட்டி கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    பக்தர்கள் தரிசனம்

    வன்னியந் தாங்கல், கிளியாத்தூர் நெடும்பிறை, பெரிய கோயில் வடங்கம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் மகா கும்பாபிஷேக விழவில் கலந்து கொண்டணர்.

    • யானை லட்சுமிக்கு சிறப்பு பூஜை நடந்தது
    • 5-ந்தேதி காலையில் தீர்த்தவாரி நடக்கிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலுடன் இணைந்த யோகராமச்சந்திரசுவாமி கோயிலில் ராமநவமி பிரமோற்சவம் நேற்று தொடங்கியது. 6-ந் ்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு நேற்று 27ம்தேதி மாலை கோவில் யானை லட்சுமிக்கு் ரேணுகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அங்குரார்ப்பணத்துடன், இன்று காலை 6 மணிக்குள் கொடியேற்றப்பட்டது.

    அதையடுத்து சாமி ஊர்வலம் நடந்தது. தினமும் மாலையில் ஊஞ்சல் சேவை நடக்கிறது. தொடர்ந்து 5-ந்தேதி காலையில் தீர்த்தவாரியுடன், பகல் 10.30 மணிமுதல் 12மணிக்குள் சாமி திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    பகல் 1 மணியளவில் பக்தர்கள் சார்பில் திருமண விழா அன்னதானம் உற்சவ மண்டபத்தில் நடக்கிறது. 6-ந் தேதி காலை அன்னக்கூடை, திருப்பாவாடை உற்சவமும், மாலை 7.15 மணிக்கு த்வஜா அவரோகணம் விடைசாதித்தல் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை படவேடு யோகராமர் கோவில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
    • பணத்தை கொடுத்து நாங்கள் ஏமாந்து உள்ளோம். பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் வேட்டவலம் சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.

    இவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, சென்னை, அரியலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவர் பணம் வாங்கி சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர், ஒரத்தநாடு, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர்.

    அப்போது கடையில் இருந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் திடீரென வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டதால் போலீசார் பணத்தை ஏமாற்றியதாக கூறப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக எங்களிடம் திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஒருவர் ஏமாற்றி விட்டார்.

    அவரிடம் பணத்தை கொடுத்து நாங்கள் ஏமாந்து உள்ளோம். பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே அவரிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிணற்றில் குளிக்கும்போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி களம்பூர் பகுதியில் மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே செல்வம் என்பவருடைய நிலத்தில் உள்ள தரை கிணற்றில் கிருஷ்ணமூர்த்தி குளிக்க சென்றார். மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணெதிரே குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

    நீண்ட நேரம் அவர் வராததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தியை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து வள்ளியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யார் ஒன்றியம், கடுகனூர் கிராமத்திலும், அனக்காவூர் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து 2 இடங்களிலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    திறந்து வைத்து பேசுகையில்:-

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்தாண்டை போலவே தற்போது முதல் கட்டமாக செய்யாறு தொகுதி முழுவதும் 20 இடங்களிலும், அடுத்த வாரத்தில் இன்னும் கூடுதலாக 10 இடங்களிலும் என 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

    இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி அரசின் நியாயமான விலையை பெற்று பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்று பேசினார். 

    • கலெக்டர் உத்தரவு
    • பதவி உயர்வு பெற்றுள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாபு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த லட்சுமி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா திருவண்ணா மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வீடுகள்), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும்.

    அதேபோல் திருவண்ணாமலை மாநில ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பாண்டியன் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கோபு புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு போளூர் வட்டார வளர்ச்சி அலுவல ராகவும், திருவண்ணாமலை வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரிதிவிராஜன் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    • சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்தது
    • பொதுமக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பணியாளர்கள் சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டும் போது வேப்பமரத்தடியில் இருந்த மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

    மேலும் அந்த சிவலிங்கம் பிரம்ம சூத்திர குறியீடுடன் காணப்பட்டது இந்த வகை சிவலிங்கம் மிகவும் பழமையானதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவலிங்கத்திற்கு வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை செய்து வழிபட்டனர்.

    சிவலிங்கத்திற்கு கிராம மக்கள் கோவில் கட்டப் போவதாக தெரிவித்தனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அப்பகுதி மக்கள் பார்த்து வழிபட்டுச் சென்றனர்.

    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
    • மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீப நாட்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று தாிசனம் செய்தனர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    • விரைந்து முடிக்க உத்தரவு
    • டோலித்தொழிலாளர்கள் அரசுப்பணி கேட்டு மனு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் சுவாமி கோவிலில் ரோப்கார் அடிப்படை வசதிகள் ரூ.11 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட டோலித்தொழிலாளர்கள் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு முதியோர்களை டோலி மூலம் தூக்கி சென்று வருகிறோம் அதில் கிடைக்கும் வருவாய் தான் எங்களுக்கு வாழ்வாதாரம்.

    ரோப்கார் இயங்கும் போது தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே அரசுப்பணி வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    கோவில் உதவியாளர் ஜெயா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்க டேசன், கொண்டபாளையம் ஆனந்தன், கோபி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • பா.ஜ.க. நிர்வாகி உள்பட 5 பேர் கைது
    • குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் ஆத்திரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 30), ராஜா (37) ஆகியோர் நேற்று மாலை அல்லப்பனூர் செல்லும் சாலையில் குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் காவலில் வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர்களின் உறவினரான தென் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட துணைத் தலைவரும் அம்பேத்கர் சமூகப் புரட்சி படை நிறுவனமான குபேந்திரன் (55) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி சாந்தி, வெங்கடேசன் மனைவி நிஷாந்தி, தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, தங்கராஜ், தங்கராஜ் மகன் லோகேஷ், சுந்தர், தங்கராஜ் மனைவி உஷா, முத்துவேல், சத்தியசீலன் மற்றும் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசாரை அவர்கள் தரக்குறைவாக பேசி உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் வெளியே விடவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி அரசு பணி செய்ய விடாமல் தடுப்பது, தரக்குறைவாக பேசியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி குபேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஏழுமலை, முத்துவேல், தங்கராஜ், பிரகாஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×