search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக 100-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்
    X

    சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக 100-க்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி- பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்

    • பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
    • பணத்தை கொடுத்து நாங்கள் ஏமாந்து உள்ளோம். பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் வேட்டவலம் சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.

    இவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, சென்னை, அரியலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவர் பணம் வாங்கி சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர், ஒரத்தநாடு, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அவரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர்.

    அப்போது கடையில் இருந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் திடீரென வேட்டவலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டதால் போலீசார் பணத்தை ஏமாற்றியதாக கூறப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக எங்களிடம் திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஒருவர் ஏமாற்றி விட்டார்.

    அவரிடம் பணத்தை கொடுத்து நாங்கள் ஏமாந்து உள்ளோம். பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே அவரிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×