என் மலர்
திருவள்ளூர்
திருவள்ளூர்:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்பதை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் டில்லி பாபு தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பார்வையாளர் லோகநாதன், ஓபிசி அணி மாநில செயலாளர் ராஜ்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், மாவட்டச் செயலாளர்கள் பாலாஜி, பன்னீர்செல்வம், சங்கீதா, நகரத் தலைவர் சதீஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சென்னையை அடுத்த மாதவரம் சீதாபதி 16-வது தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மதன்குமார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்த மாதவரம் சீதாபதி 16-வது தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மதன்குமார் (வயது 35). இவர் சோழவரம் ஜி.என்.டி சாலை அருகே தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள லாரிகள் நிறுத்துமிடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யார்டு பெறுப்பாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு 11 மணி அளவில் பணியில் இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் மதன்குமாரை சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்து விட்டு அங்குஇருந்து தப்பி சென்று உள்ளனர்.
இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக் கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். குற்றவாளகள் கைது செய்யப்படும் போதே கொலைக்கான காரணம் குறித்து விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- திருத்தணி, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்.
- தி.மு.க.பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி:
திருத்தணி, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(வயது38). தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று இரவு 10 மணியளவில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். பின்னர் அவர் வீட்டின் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
அதிர்ச்சி அடைந்த மோகன் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
ஆனாலும் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் தலை, மார்பு, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட மோகனுக்கு கல்பனா என்ற மனைவியும் 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். மோகன் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் இருப்பதாக தெரிகிறது. அவர் ரியல்எஸ்டேட், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.
மேலும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்று வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சிலருடன் மோகனுக்கு மோதல் இருந்துள்ளது.
இதில் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திட்டமிட்டு மோகனை தீர்த்து கட்டிஉள்ளனர். இது தொடர்பாக மோகனுடன் கடைசியாக செல்போனில் பேசியவர்கள் யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க.பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கும்மிடிப்பூண்டிைய அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள கெட்டனமல்லியை சேர்ந்தவர் வடுவம்மாள்.
- வடமாநில கொள்ளையன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டிைய அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள கெட்டனமல்லியை சேர்ந்தவர் வடுவம்மாள் (வயது 80).இவருடன் மகள்கள் செல்லம்மாள், சாந்தி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் தூங்கினர். மூதாட்டி வடுவம்மாள் விட்டில் உள்ள முன்பக்க அறையில் தனியாக தூங்கினார். அவரது மகள்கள் உள்பக்க அறையில் இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் 3 வாலிபர்கள் திடீரென வடுவம்மாளின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம்கேட்டு எழுந்த வடுவம்மாள் கொள்ளையர்கள் வீட்டுக்குள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மூதாட்டி வடுவம்மாளை சரமாரியாக தாக்கி கிழே தள்ளிவிட்டு அறைக்குள் புகுந்து நகை-பணத்தை தேடினர். இதற்குள் சத்தம்கேட்டு எழுந்த செல்லம்மாள், சாந்தி ஆகியோரும் கொள்ளையர்கள் வீட்டுக்குள் நிற்பதை கண்டு கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். உடனே கொள்ளையர்கள் 3பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை கிராம மக்கள் விரட்டிச் சென்றனர்.
அப்போது கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் அங்குள்ள பள்ளத்தில் விழுந்தான். அவனை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடிகொடுத்தனர். அவனது கூட்டாளிகள் மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே பொதுமக்களிடம் சிக்கிய கொள்ளையனை சரமாரியாக தாக்கியதில் அவன் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடினான். தகவல் அறிந்ததும் கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையனை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தாக்குதலில் காயம் அடைந்த கொள்ளையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. கொலையுண்ட கொள்ளையன் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. அவனுடன் வந்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டியை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பலர் அப்பகுதியிலேயே வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு வடமாநிலங்களில் இருந்து தப்பி வரும் நபர்கள் இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி கைவரிசை காட்டி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். தொழிற்சாலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய முழுவிபரம் இல்லாமல் உள்ளது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடும் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீடுபுகுந்து திருட முயன்ற வடமாநில கொள்ளையன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொன்னேரி அடுத்த பூவாமி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஆண்டி.
- வேனை ஓட்டி வந்த டிரைவர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பூவாமி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் ஆண்டி (வயது55). ஆண்டியப்பன் (40). கூலித் தொழிலாளர்கள்.
நேற்றுமாலை இருவரும் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு காய்கறிகள் வாங்க அருகில் உள்ள மெதூர் கிராமத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
மெதுர் துணை மின் நிலைய அலுவலகம் அருகில் சென்ற போது கும்மிடிப்பூண்டியில் இருந்து பழவேற்காடு நோக்கி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆண்டி மற்றும் ஆண்டியப்பன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானர்கள். தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேனை ஓட்டி வந்த டிரைவர் திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷால்(21) என்பது தெரிய வந்தது.
பொன்னேர:
மீஞ்சூர் அடுத்த அரியவன் வாயல் பகுதியில் பொது மக்களை கத்தி மிரட்டிய வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் மடக்கி பிடத்து கைது செய்தனர். அவர் மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷால்(21) என்பது தெரிய வந்தது.
- பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிபேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பாலகுமார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிபேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பாலகுமார் (வயது 38). இவர் வெளியகரம் கிராம அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, கர்லம்பாக்கம் கிராமம் அருகே வந்த நிலையில், நிலைத்தடுமாறிய அவரது வாகனம் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மார்பு மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த பாலகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி அளித்தனர்.
மேலும், மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வலசை வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். நேற்று முன்தினம் தேவேந்திரன் தன் வீட்டிற்கு தண்ணீர் எடுத்துச் சென்ற போது, குழாயை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தேவி, விஜய், விக்கி, நாராயணன், மாரியப்பன் தரப்பினர் மிதித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட தேவேந்திரனின் மனைவி கலைவாணி தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரையும் ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கியுள்ளனர். இந்த கோஷ்டி மோதல் குறித்து இரு தரப்பினரும் மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த தேவி, விஜய், விக்கி, நாராயணன், மாரியப்பன், சந்திரன், கலைவாணி தேவேந்திரன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- மணிமாறன் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
- கடந்த வாரம் மைதிலி திடீரென மாயமானார்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், பூங்கா வனபுரம், 1-வது தெருவில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மனைவி மைதிலி (வயது 34). திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மணிமாறன் தேனாம்பேட்டையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வாரம் மைதிலி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து அவரது கணவர் மணிமாறன் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மணலி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே மைதிலி பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
கடந்த வாரம் மைதிலி, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கியதாக தெரிகிறது. இதனை கவனித்த கணவர் மணிமாறன் மனைவியை கண்டித்து உள்ளார்.
இதன் பிறகே மைதிலி காணாமல் போனது தெரிய வந்தது. இதனால் கணவர் மணிமாறன் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது மணிமாறன், மனைவி மைதிலியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- இளம்பெண்ணுக்கும் வாலிபருக்கும் கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
- கருத்து வேறுபாட்டால் இளம்பெண் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் எம்.ஜி.எம். நகரைச் சேர்ந்த 35 வயதான இளம்பெண்ணுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் இளம்பெண் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்காக இளம்பெண் கோர்ட்டுக்கு வந்த போது திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
- சேகரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில் சேகர், காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40). இவர் தனது தம்பி மற்றும் தாயுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கு பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே ஸ்வீட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்தார். இதனால் நல்ல வருமானம் கிடைத்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது பீரோவில் வைத்துச்சென்ற அவரது 300 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதேபோல் சேகரின் தாயின் 200 பவுன் நகை மற்றும் 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நகை மாயமானது குறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். பீரோ உடைக்கப்படாமல் 550 பவுன் நகை திருடு போய் இருந்ததால் வெளியில் இருந்து வந்து மர்ம நபர்கள் திருட வாய்ப்பு இல்லை என்பதை போலீசார் முதலில் உறுதி செய்தனர்.
இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சேகர் வீட்டில் இருந்த 550 நகைகளை சிறுக சிறுக, திருடி தனது கள்ளக்காதலியான வேளச்சேரி கேசரிபுரம் பகுதியை சேர்ந்த சுவாதி என்பவரிடம் பரிசாக கொடுத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சேகரின் தம்பி கொடுத்த புகாரின் பேரில் சேகர், காதலி சுவாதி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சேகருக்கு தனது மனைவி பிரிந்து சென்ற பின்னர் நண்பர் ஒருவரது மூலம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இதனை பயன்படுத்தி தனது வலையில் சேகரை அவர் வீழ்த்தி உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது சேகரிடம் இருந்து நகைகளை சுவாதி வாங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் நகைகேட்டு அவர் அன்பு தொல்லை கொடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சேகர் வீட்டில் இருந்த மனைவி மற்றும் தாயின் நகைகளை யாருக்கும் தெரியாமல் திருடி காதலிக்கு பரிசாக கொடுத்து மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.
வீட்டில் எப்போதும் போல் சேகர் வந்து சென்றதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. மேலும் பீரோவில் இருந்த நகைகளை அவர்கள் சரிபார்க்காததும் சேகருக்கு வசதியாக இருந்தது. மொத்தம் 550 பவுன் நகையை வீட்டில் இருந்து திருடி சேகர் கொடுத்து இருக்கிறார்.
இதேபோல் லட்சக்கணக்கில் சுவாதி பணம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேகர், காதலி சுவாதி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தில் எல் அண்டு டி கப்பல் கட்டும் தளம் உள்ளது.
- இந்தியா, கப்பல் கட்டும் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
பொன்னேரி:
காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தில் , 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளது.
அதன் பழுதுகளை சரி செய்ய சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு நேற்று வந்தடைந்தது. முதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்தடைந்த இந்த கப்பலை பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் நேரில் வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா, கப்பல் கட்டும் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்க கடற்படை கப்பல் முதன்முறையாக பழுது நீக்குவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இது, இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும், விரிவடைவதையும் காட்டுகிறது. கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
இந்தியா, ராணுவ தளவாட பொருட்கள் ஏற்று மதியில் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. கப்பல் கட்டுமான துறையில் வளர்ந்து வரும் இந்தியா, முதல்முறையாக ஆறு மெகாவாட் திறன் உடைய டீசல் என்ஜின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட அனுமதி மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது. நவீன மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள், இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பழுதுநீக்கம் செய்ய வந்திருக்கும் இந்த அமெரிக்க கடற்படை கப்பல், 689 அடி நீளம் கொண்டது. இந்த கப்பலில் 41 ஆயிரம் டன் பொருட்களை ஒரே சமயத்தில் எடுத்து செல்ல முடியும். இதில் 63 கப்பல் சிப்பந்திகள் இருப்பார்கள்.
இந்திய பசுபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பல் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு தளவாட உதவிகள் செய்து வருகிறது. குறிப்பாக உணவு, எரிபொருள், கப்பல் பாகங்கள், உள்ளிட்ட சேவைகள் வழங்கும் கப்பலாக செயல்பட்டது.
மேலும் அமெரிக்க படைகளுக்கு மட்டு மல்லாமல், இந்திய பசுபிக் பகுதியில் உள்ள பிற நட்பு நாட்டின் கப்பல்களுக்கும் இது போன்ற உதவிகளை செய்து வந்தது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள இந்த கப்பலில் பழுது நீக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் பழுது நீக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, கப்பல் மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






