search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழுது நீக்குவதற்கு முதல் முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகம் வந்தது
    X

    காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்.


    பழுது நீக்குவதற்கு முதல் முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகம் வந்தது

    • காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தில் எல் அண்டு டி கப்பல் கட்டும் தளம் உள்ளது.
    • இந்தியா, கப்பல் கட்டும் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தில் , 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளது.

    அதன் பழுதுகளை சரி செய்ய சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு நேற்று வந்தடைந்தது. முதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்தடைந்த இந்த கப்பலை பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் நேரில் வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா, கப்பல் கட்டும் துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்க கடற்படை கப்பல் முதன்முறையாக பழுது நீக்குவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இது, இந்தியா- அமெரிக்கா இடையே உள்ள நெருங்கிய உறவு வளர்ந்து வருவதையும், விரிவடைவதையும் காட்டுகிறது. கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

    இந்தியா, ராணுவ தளவாட பொருட்கள் ஏற்று மதியில் அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. கப்பல் கட்டுமான துறையில் வளர்ந்து வரும் இந்தியா, முதல்முறையாக ஆறு மெகாவாட் திறன் உடைய டீசல் என்ஜின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட அனுமதி மற்றும் நிதி வழங்கப்பட்டுள்ளது. நவீன மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள், இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பழுதுநீக்கம் செய்ய வந்திருக்கும் இந்த அமெரிக்க கடற்படை கப்பல், 689 அடி நீளம் கொண்டது. இந்த கப்பலில் 41 ஆயிரம் டன் பொருட்களை ஒரே சமயத்தில் எடுத்து செல்ல முடியும். இதில் 63 கப்பல் சிப்பந்திகள் இருப்பார்கள்.

    இந்திய பசுபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பல் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு தளவாட உதவிகள் செய்து வருகிறது. குறிப்பாக உணவு, எரிபொருள், கப்பல் பாகங்கள், உள்ளிட்ட சேவைகள் வழங்கும் கப்பலாக செயல்பட்டது.

    மேலும் அமெரிக்க படைகளுக்கு மட்டு மல்லாமல், இந்திய பசுபிக் பகுதியில் உள்ள பிற நட்பு நாட்டின் கப்பல்களுக்கும் இது போன்ற உதவிகளை செய்து வந்தது.

    காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள இந்த கப்பலில் பழுது நீக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் பழுது நீக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, கப்பல் மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×