என் மலர்
திருவள்ளூர்
- பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று அப்பகுதி 200-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் கூடியிருந்தனர்.
- கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் சென்று ஆறுதல் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் உள்ள 7 -வது வார்டுக்குட்பட்ட கள்ளுகடை மேடு பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுப் பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி உள்ளதாக நீதிமன்ற உத்தரவில் அளவீடு செய்து அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
பொன்னேரி நகராட்சிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வரிகளையும் கட்டி வரும் நிலையில் திடீரென வீடுகளை அகற்ற கூறுவதாகவும் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் வசிப்பதற்கும் வேறு வழி இல்லை எனக் கூறி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தங்கள் வீடுகளை அகற்றக் கூடாது எனக்கூறி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று அப்பகுதி 200-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் கூடியிருந்தனர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் சென்று ஆறுதல் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் அப்போது தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார் நகர மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
- காலையில் வந்து பார்த்த போது கோவில் பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு நிர்வாகி அதிர்ச்சி அடைந்தார்.
- கோவில் உள்ளே சென்று பார்த்தபோது 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டு தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு அம்மன் கோவில் இரும்பு கேட்டை கோவில் நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றார். காலையில் வந்து பார்த்த போது பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 7அடி நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது.
இதில் சிலை முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவில் நிர்வாகி புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்மன் சிலை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே மூன்றாவது மாடியில் இருந்து ராயப்பன் குதித்துள்ளார்.
- ஆவடியில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்ற நபரை 48 கிலோ மெத்த பெட்டமைன் என்கிற தடை செய்யப்பட்ட போதைப் பொருளுடன் சோழவரம் அருகே மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்து அயப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுதே மூன்றாவது மாடியில் இருந்து ராயப்பன் குதித்துள்ளார். இதனையடுத்து அவரை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் காவல் விசாரணையில் மரணம் அடைந்ததாக வழக்கு பதிவு செய்தனர், முதல் கட்ட விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடமும் உறவினிடமும் தெரிவித்துவிட்டு ராயப்பன் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இவர் மீது தெலுங்கானாவில் ஏற்கனவே ஒரு வழக்கு இருந்துள்ளது, இந்த நிலையில் சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்த நிலையில் தனது குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என்கிற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை போது கைதி உயிரிழந்தால் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்படும் என உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
- கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
- வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கோமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவர் அதே பகுதியை சேர்ந்த கோமதி (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கோமதி 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் கிஷோர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மது போதையில் தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
கடந்த 17-ந் தேதி மீண்டும் கிஷோர் மது போதையில் வீட்டுக்கு வந்து தன் மனைவியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கோமதி தன் வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதி நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
- மக்களை அச்சுறுத்தும் வகையில் டிரைவர் இல்லாமல் கிளீனரை வைத்து லாரிகளை அதிவேகமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
- கல்குவாரியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர்:
திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தில் அரசு அனுமதியுடன் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டும் கல்குவாரி செயல்பட வேண்டும். ஆனால் கல்குவாரியில் போலியாக ரசீதுகளில் தேதி மற்றும் நேரத்தை மாற்றிக் கொண்டு அரசு முத்திரையை பதித்து தவறாக பயன்படுத்தி இரவு நேரங்களில் குவாரி செயல்பட்டு வருகிறது. மேலும் ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரிகள் இரவு நேரங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் டிரைவர் இல்லாமல் கிளீனரை வைத்து லாரிகளை அதிவேகமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் 5 லாரிகளை சிறை பிடித்து டிரைவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினார்கள். இரவு நேரங்களில் வாகனங்களை இயக்க அனுமதி வழங்கியது யார்? குவாரி செயல்பட வேண்டிய நேரம் என்ன என்று சரமாரி கேள்விகளை எழுப்பி லாரி மற்றும் வாகன டிரைவர்களை சிறைபிடித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க வேண்டும்.
- சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சிபாஸ் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தகுந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் வெடிக்க வேண்டும்.
மேலும் சீன தயாரிப்பு வெடிகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதும் அருகில் இல்லாதவாறு பார்த்து பட்டாசு வெடிக்க வேண்டும். குடிசைகள் பக்கத்திலோ, ஓலைகூரைகள் உள்ள இடங்களிலோ வாண வேடிக்கை பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
குழந்தைகள் தனியாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக பெரியவர்கள் இருக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 41 கடைகளின் உரிமைதாரர்கள் இந்த வருடம் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் கோரி மனு செய்ததில் 25 கடைகளுக்கு பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 16 கடைகளில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 150 உதவி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 400 காவலர்களும், 100 ஆயுதப் படை காவலர்களும் 140 பயிற்சி காவலர்களும் மற்றும் 200 ஊர்க்காவல் படையினரும் இன்று முதல் 25-ந்தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாட்களில் அசம்பாவிதங்களை தடுக்கவும், கையாளவும், விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கவும் திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற துறைகளான தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவசர ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எளிதில் தீப்பற்ற கூடிய பெட்ரோல் நிறுவனங்கள் அருகில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள், பெட்ரோலிய நிறுவனங்கள், கெமிக்கல், கேஸ் நிரப்பும் ஆலை, எளிதில் தீப்பற்ற கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிராமங்களை சுற்றி காணப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு கிராமங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோலிய நிறுவனங்கள் அருகில் இருப்பதால் பேராபத்திலிருந்து தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக பெட்ரோலிய நிறுவனம் சார்பில் அப்பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதிக தூரம் சென்று வெடிக்கக்கூடிய வெடிகள், ராக்கெட் பட்டாசு, வாணவெடிகள், அதிக புகை, நச்சு தரும் வெடிகள் உள்ளிட்ட வெடிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தனர். இதில் சேர்மன் ரவி, ரிலையன்ஸ் டெர்மினல் மேனேஜர் திருச்சி விஸ்வநாதன் மற்றும் நாகராஜ், நரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 16 பேரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த முருகன் (வயது 34), கீழ்முதலம்பேடு குமார் (49), ரமேஷ் (46), சிந்தலகுப்பம் பிரபு (22), பரணம்பேடு ஏசு (50), பிரித்வி நகர் முருகன் (36), அப்பாவரம் பிரகாசம் (40), ராக்கம்பாளையம் காசி (37), தாணிப்பூண்டி ரகு (50), காட்டுகொல்லைத்தெரு மோகன் (49), எளாவூர் தொம்பரை (63), காரனோடை அன்பழகன் (40), தபால் தெரு முகமது யாசர் அரபாத் (31), கொண்டமநல்லூர் பூபாலன் (56), நாயுடுகுப்பம் புஜ்ஜி அய்யா (59), சின்னவழுதிலம்பேடு ரமேஷ் (46) ஆகிய 16 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 16 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 205 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சீபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
திருவள்ளூர்:
அக்டோபர் 21-ம் நாளை ஆண்டு தோறும் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர். அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 264 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு எஸ்.பி. சீபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜேசுராஜ், மீனாட்சி உதவி போலீஸ் சூப்பிரண்ட் விவேகானந்த சுக்லா துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூபாய் 51 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
- கொள்ளை குறித்து ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள வீரராகவர் திருக்கோவில் அருகே குளக்கரை சாலையில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்தில் சன்னதி தெருவை சேர்ந்த ராகவன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்து மடத்தை மூடி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை மடத்திற்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 5 கிலோ எடை கொண்ட பிரகலாத ஐம்பொன் சிலை, 30 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகை, ரூபாய் 51 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராகவன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை வருகின்றனர்.
- சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
- சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் வருகிறது. அப்போது முக்கிய கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவிலிலும் கிரகணத்தை முன்னிட்டு 25-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்படுகிறது.
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவிலின் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
- வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ, மாணவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தி கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அம்பத்தூர்:
விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அம்பத்தூர் தீயணைப்பு மீட்புப்பணி வீரர்கள் மற்றும் சேது பாஸ்கரா பள்ளியின் மாணவ, மாணவிகள் 750-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரமாண்ட விழிப்புணர்வு பேரணியை அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் துவக்கி வைத்தார். சுமார் 5 கி.மீ.தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தி கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சென்னை புறநகர் உதவி மாவட்ட அலுவலர்கள் பொன் மாரியப்பன், திருமுருகன், சேது பாஸ்கரா பள்ளியின் முதல்வர் செல்வகுமார் மற்றும் அம்பத்தூர் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன், பக்தவச்சலம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக வில்லிவாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நிலைய அலுவலர் செல்வன் தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என 300-க்கும் மேற்பட்டோருக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்போடு கையாள்வது என்பதை செய்முறை மூலம் விலக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.






