என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    அரக்கோணத்தில் 10, 12 ம் வகுப்பு வினாத்தாள் வைக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கல்வி மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்தில் உள்ள 16 உயர்நிலை மற்றும் 15 மேல்நிலை அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் நடைபெற உள்ள 10-வது மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான அரசு பொது தேர்வு வினாத்தாள்கள் அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    வினாத்தாள் காப்பாளர்களான அரக்கோணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சுஜாதேவி, சித்தேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ரகு, உதவி தலைமையாசிரியர்கள் அருட்செல்வன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். 

    வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள பள்ளியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பொதுக்கூட்டத்தின்போது மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை நவல்பூர் எம்.பி.டி. சாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நவல்பூர் பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட அண்ணா தொழிற்சங்க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்க ப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் மின்சாரம் வரவில்லை.

    இதனால் மேடையில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆவேசமடைந்தனர். அவர்கள் மின்வெட்டை கண்டித்து நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ சம்பத், மாவட்ட எம்ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஏழுமலை மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும் மின்சாரம் துண்டித்தை கண்டித்தும் தமிழகத்தில் தினசரி 5 மணி நேரம் மின்வெட்டு நடைபெறுவதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சென்னை பெங்களுர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    அப்போது அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலை கைவிட்டனர்.

    இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடர்ந்து நடந்தது. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். 
    நெமிலி பனப்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் இடியுடன் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவேரிப்பாக்கம் மற்றும் பல பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 

    இதனால் கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து ஓரளவிற்கு வெப்பக்காற்று மற்றும் சூடான சூழல் மாறி இருக்கிறது.

    இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த காரை புதுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது62) இவர் அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி(50) இவரது மகன்கள் விக்னேஷ், ரமேஷ்.

    இதில் விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ரமேசுக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவி ஒரு குழந்தை உள்ளது.

    ரமேசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் பாகாயம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.ரமேஷ் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் ரமேஷின் மனைவி காயத்ரி குழந்தையுடன் கண்ணமங்கலத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதால் ரமேஷ் விரக்தியுடன் இருந்து வந்தார்.

    இது சம்பந்தமாக இன்று அதிகாலை ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனையடைந்த ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனின் பிணத்தை பார்த்து தந்தை பன்னீர்செல்வமும், தாய் குணசுந்தரியும் கதறி அழுதனர். மகனை இழந்த துக்கம் தாங்காமல் அவர்கள் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று வீட்டிற்கு வந்த உறவினர்கள் 3 பேரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து 3 பேர் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தி அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அதைத் தொடர்ந்து போலீசார் 3 பேர் உடல்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

    ராணிப்பேட்டை மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகராட்சி மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்தார். 

    அனைத்து கடைக்காரர் களும் இலைகளைப் பயன்படுத்தி இறைச்சிகளை அடைத்து பொது மக்களுக்கு வழங்கி வருவதை பார்வையிட்டார். 

    பொதுமக்கள் ஒரு சிலர் வீட்டில் இருந்து சாமான்களைக் கொண்டு வந்து இறைச்சியை வாங்கி செல்வதை பார்த்து அவர்களை பாராட்டினார். அனைவரும் முழுமையாக இதை கடைபிடிக்க கேட்டுக் கொண்டார்.
    அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட துணை ஆட்சியர் பங்கேற்றார்.
    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் பாரதி தலைமை தாங்கினார். ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார். கூட்ட நிகழ்ச்சிகளை ஆசிரியை மீனா தொகுத்து வழங்கினார். 

    கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட துணை ஆட்சியர் சத்திய பிரசாந்த் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் பள்ளி ஆசிரியைகள் ராஜேஸ்வரி, அமுதராணி, நிர்மலா, காஞ்சனா, மீகால், ஜெயபாரதி ஆகியோர் கூட்டத்திற்கு வருகை புரிந்த பள்ளி பெற்றோர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றனர். கூட்ட முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை கேத்தரின் நன்றி கூறினார்.
    ராணிப்பேட்டையில் ரசாயன வாகன விபத்துகளை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மங்களூர் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளால், பென்சீன் போன்ற ரசாயனங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளானால் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்டது.

    பென்சீன் என்ற ரசாயனம் தண்ணீரைவிட அடர்த்திக் குறைவானதாகவும், எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மையுடன் இருக்கின்ற காரணத்தினால் விபத்து ஏற்பட்டவுடனேயே இந்த ரசாயனத்தை உடனடியாக பம்ப்செய்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

    தீ விபத்து நேரிடும்பட்சத்தில் இதனை அணைக்க 3 வகையான தீயணைப்பான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீரினை பயன்படுத்தக்கூடாது.

    இந்த சூழ்நிலையைக் கையாள்வதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    ரசாயனங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் எந்த வகையான ரசாயனம் உள்ளது என தெரியப்ப டுத்தும் விபரங்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 

    விபத்து நேரிடும்போது 100 மீட்டர் தொலைவிற்கு முன்பாக தடுப்பரண் அமைக்கப்பட வேண்டும்.நீர்நிலைகளில் இந்தரசாயனம் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர்.குமரேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பாணாவரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கிராமத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் என்ற சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதலி் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 750 நபர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

    மேலும் முகாமில் பாணாவரம் லயன்ஸ் கிளப் மூலம் தன்னார்வலர்கள் சிலர் ரத்ததானம் செய்தனர். பின்னர் அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சத்துணவு குறித்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அப்போது முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் பிரவீன் ராஜ்குமார், காவேரிப்பாக்கம் சேர்மன் அனிதா குப்புசாமி உள்ளிட்ட செவிலியர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த நாளை முதல் தடை செய்யப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி இறைச்சிகள் பொது மக்களுக்கு வழங்குவது நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடை செய்யப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லா ராணிப்பேட்டை மாவட்டம் என்ற நிலையை அடைய ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் அனைத்து தெரு ஓரங்களில் இறைச்சி கடைகள் வைத்து விற்பனை செய்யும் இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் பொதுமக்களுக்கு இறைச்சிகளை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கேரிபேக், பிளாஸ்டிக் பேப்பர்களில் அடைத்து பொதுமக்களுக்கு வழங்கி விற்பனை செய்யப்படுவது முற்றிலுமாக நாளை முதல் தடை செய்யப் படுகிறது. 

    ஆகவே அனைத்து வகையான இறைச்சி கடை உரிமையாளர்கள் கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் முழுமையாக அதனை தவிர்த்து அதற்கு மாற்று பொருளான வாழை இலை, மந்தாரை இலை மற்றும் இரும்புச் சாமான்கள் கொண்டு அதனை அடைத்து வழங்க வேண்டும். 

    இதனை மீறுபவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இனிமேல் கடை வைத்து வியாபாரம் செய்வதை முற்றிலும் தடை செய்யப்படும்.அதேபோல இறைச்சிகளை வாங்க வரும் பொது மக்கள் கட்டாயமாக வீட்டிலிருந்து அதற்கான சாமான்களை கொண்டு வந்து இறைச்சிகளை வாங்கிச் செல்ல வேண்டும். 

    இதனை கண்காணிக்க நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கலவை ஏரிக்கரை படிக்கட்டு அமைக்க வேண்டும், காப்பீடு தொகை வழங்குவதில் தெளிவு இல்லை, தெங்கால் பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும், நவ்லாக், புளியங்கண்ணு ஆகிய பகுதிகளில் நிலம் பட்டா வழங்க வேண்டும், 

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காலை 6 மணி முதல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவு செய்யவும் வேண்டும், நவல்லாக் அரசு பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 2020-21 -ம் ஆண்டின் பயிர் இன்சூரன்ஸ் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

     கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பிணை இல்லா கடன் வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் வேளாண் இடு பொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும், உற்பத்திக்குத் தேவையான நிதி உதவி பெறவும் முடியும். விவசாய கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்க் கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், 

    மேலும் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும்.

    விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெரும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்பச் செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இத்திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம் பொருத்து மாறுபடும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, துணை இயக்குனர் விஸ்வநாதன் மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடையை மூடி வைக்க வேண்டும். 

    அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந் தப்பட்ட மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
    ராணிப்பேட்டையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. 

    இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, பட்டபடிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 

    இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    ×