என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் ஆய்வு
    • அங்கன்வாடி உணவை சாப்பிட்டு பார்த்தார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் பெரியார் நினைவு சமத்துவபுரம் புணரமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான நிதியிணை ஒதுக்கினார்.

    அதன் அடிப்படையில் அம்மூர் பேரூராட்சி 17 வது வார்டு பகுதியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்புகளை சீரமைத்திட ஒரு குடியிருப்புக்கு அதிகபட்சமாக தலா ரூ.50 ஆயிரம் வீட்டின் உரிமையாளரிடம் வழங்கப்பட்டு வீட்டின் சுவர் வர்ணம் பூசுதல் கழிப்பறை கட்டுதல் போன்ற அடிப்படை தேவைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இப்பணிகள் சரியான முறையில் நடைபெற்றுள்ளதா என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சமுதாயக் கூடம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    இதை புணரமைக்க நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். இதில் உள்ள சமையலறை, கழிப்பறை ஆகியவை பழுதடைந்து செடிகள் வளர்ந்து இருப்பதை பார்த்து ஆய்வு செய்தார்.

    பின்னர் மையத்தை சீரமைத்திட பேரூராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை சாப்பிட்டு பார்த்து உணவின் ருசி சரியாக இல்லை குழந்தைகள் ருசியோடு சாப்பிடும் வகையில் சமையல் செய்யுங்கள் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த அங்கன்வாடி மையத்தினையும் பேரூராட்சி பொது நிதியிலிருந்து சீரமைத்திட கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் சமத்துவபுரத்தில் சாலை வசதிகள் பூங்காக்கள் சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கட்டம் கட்ட பூமிபூஜை
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டத்தின் படி ஆற்காடு நகரில் ஒன்று முதல் 5 வகுப்பு வரை நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான சமையல் கூடம் ரூ.24 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிடப்பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், இளநிலை பொறியாளர், நகர மன்ற உறுப்பினர் குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்

    • ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    தாசில்தார் அலுவலகம் எதிரே 400 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.ஏழுமலை தலைமையில், ராணிப்பேட்டை மாவட்ட (கிழக்கு) மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளரும், கைனூர் பஞ்சாயத்து தலைவருமான உமா மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட அவைத் தலைவர் ஜெகநாதன், கவுதம் அரிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அடிக்கல் நாட்டினர்
    • ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில், குடிநீர் பிரச்சினையை போக்க பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, ஊராட்சி ஒன்றியத்தின் 15வது நிதிக்குழு மான்ய நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு, செங்கல் எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் ஆட்டுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் நித்யா ராமதாஸ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், அரிக்கிருஷ்ணன், ஒப்பந்ததாரர் வசந்தகுமார், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1 கிலோ 250 கிராம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு அருகே மேல்விஷாரம் புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
    • பொதுமக்கள் பாராட்டு

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுவளையம் கிராமத்தில் இன்று காலை சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த மனுநீதி முகாமில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் குறைகளை மனுவாக மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர்.

    பின்னர் மனுநீதி நாளை முடித்துவிட்டு வெளியே வந்த கலெக்டர் அருகே இருந்த அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த போது கிராமத்தில் உள்ள ஏராளமான கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக வந்து அங்கன்வாடி மையத்தை சுற்றி கருவேலம் மரம் இருப்பதை அவரிடம் கோரிக்கையாக வைத்தனர்.

    பின்னர் அந்த இடத்திற்கு சென்ற ஆட்சியர் அங்கிருந்த கருவேல மரங்களை முழுவதும் தானே முன்வந்து கத்தியால் கருவேல மரங்களை வெட்டி உள்ளார் மேலும் அங்குள்ள ஊராட்சி அதிகாரிகளிடம் பேசிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இது போன்ற ஒரு அரசு அங்கன்வாடி மையம் அருகே புதார் மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் இருக்கக் கூடாது என்றும் இதை தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்

    பிறகு கிராம மக்கள் கோரிக்கை வைத்த அடுத்த நொடியே கலெக்டர் இந்த செயலால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் கலெக்டரை வெகுவாக பாராட்டினார்.

    • மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து மனித உயிர்களை காப்பாற்றிய நபர்கள் தகுதியானவர்கள்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மத்திய அரசின் உள்துறை சார்பில் தைரியமான மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை செய்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டு மனித உயிர்களைக் காத்த நபர்களுக்கு சர்வோதம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய தொடர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

    தைரியம் மிகுந்த மற்றும் மனிதாபிமானம் மிக்க பணிகளை தாமதம் இன்றி உடனடியாக செய்து தனது அசாத்திய திறமைகளால் நீரில் மூழ்கியவர்கள், நிலச்சரிவு, விபத்து மற்றும் நெருப்பில் சிக்கி காயம் அடைந்தவர்கள், மின்சார சாதனங்களால் தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டவர்கள், விலங்கினால் தாக்கப்படுபவர்கள் மற்றும் சுரங்கத்தில் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களை உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் விதிமுறைகள் 1.10.2020 முதல் தற்போது வரையிலான காலத்திற்குள் ஆற்றிய வீர சேவையை தெளிவுபடுத்தி உள்ளடக்கிய கருத்துக்கள், நாளிதழ்களில் வெளிவந்த செய்தி குறிப்புகள் போன்ற சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். 1.10.20-க்கு முந்தைய வீர தீர சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

    விபத்துக்கள், ஆபத்து காலங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற தருணங்களில் மனித உயிர்க்காத்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகையான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.ஆயுத ப்படை பிரிவு, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சேவை துறையினர் ஆகியோர் தம்முடைய பணி நேரத்தின்போது அல்லாமல் இத்தகைய சேவை புரிந்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    மத்திய அரசின் உள்துறை சார்பில் தரப்படும் இவ்விருது பெற தகுதியானவர்களைபாரதப் பிரதமர் மற்றும் பாரத தேசத்தின் ஜனாதிபதி ஆகியோருக்கு உயர் விருதுக்கு குழு பரிந்துரைக்கும்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் 10.8.22.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கும் விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்களுக்கு கண்டனம்
    • 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துகடையில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாவட்ட ஊராட்சி குழு, அரசு ஊழியர்கள், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை கண்டித்து மகாத்மா காந்தி வழியில் உண்ணாவிரத போராட்டம் இன்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பா ளர்சசிகுமார் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்எல்ஏ வாலாஜா அசேன், மாவட்ட கவுன்சிலர் பவித்ரா சசிகுமார், மேற்கு ஒன்றிய தலைவர் ஜானகிராமன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் நியாஸ், நிர்வாகிகள் பிரசணகுமார், மோகன், வசிகரன், உத்தமன், நரேஷ், காந்தி உள்பட 70க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • 5 பேர் மீது வழக்கு பதிவு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் ராசாபாளையம் பகுதியில் இருந்து 30 பனை மரங்களை வெட்டி லாரியில் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மனோன்மணி அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வெட்டிய 30 பனைமரத்துடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பனை மரங்களை வெட்டிய 3 பேர் மற்றும் லாரி டிரைவர், உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 29-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வே ளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கள பிரச்சனைகளை களைத்திட கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நடத்தப்படுகிறது
    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய த்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04172-291400 வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை செல்போன் எண்ணுடன் தெரிவிக்கலாம். மேலும் ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் மத்திய மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்தியேக https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மென் பாட குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×