என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கடையின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் செல்போன்களை திருடி சென்றனர்.
    • இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரப்பகுதிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதி, பிருந்தாவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 செல்போன் கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலை தங்களது கடையை திறக்க சென்றனர். அப்போது கடையின் ஷட்டர் கதவின் பூட்டை உடைக்க மர்ம ஆசாமி முயற்சி செய்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் பிருந்தாவனம் பகுதியில் நிஜாம் காலனியை சேர்ந்த அசாருதீன் என்பவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் திருட்டு போயிருந்தது.

    அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்ட போது மா்ம ஆசாமி ஒருவர் கடையின் உள்ளே புகுந்து செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்களை திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் தான் மற்ற 3 கடைகளிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல்-தொழில் நுட்பக்கல்லூரியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடபட்டது
    • இதில் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை,

    மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நு ட்பக்கல்லூரி யில் சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டது. மவுன்ட்சியோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜெய்சன் ஜெய பரதன் வழிகாட்டுதலின் கீழ், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் ஜெயசீலன் மேற்பார்வையின் கீழ் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியம் மற்றும் சுய முன்னே ற்றத்திற்கான அர்ப்ப ணிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களை ஒன்றி ணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த சர்வதேச யோகாதினம் அமைந்தது. வாழ்க்கையை நேர்மறை யாக மாற்றுவதற்கும் ஆரோக்கியமான மற்றும் இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கும் யோகாவின் ஆற்றலை நினைவூட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்தது. உடற்கல்வி இயக்குனர், செல்வகண்ணன் நன்றி தெரிவித்தார்.

    • ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழந்தார்
    • ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவத்தன்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பர விடுதியை சேர்ந்தவர் கோபு. இவரது மனைவி வித்யா (வயது 27). இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கோபு வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பவத்தன்று திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் போது வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த பொருட்களை வித்யா எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வித்யா மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதே ஆன பெண் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கீரமங்கலம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை:

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று கீரமங்கலம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


    • கோவிணிகிடங்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா கோவிணிகிடங்கு கிராமத்தில் உள்ள மகாலிங்கமூர்த்தி, ஜெகதாம்பாள், விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 28-ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2 நாட்களாக 3 கால யாக பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து லோகநாத அய்யங்கார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • புதுக்கோட்டையில் 10 நாட்கள் நடைபெற உள்ள கம்பன் பெருவிழா அழைப்பிதழ் வெளியிடபட்டுள்ளது
    • இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற ஜூலை மாதம் 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 10 நாட்கள் நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. இப் பெருவிழாவின் தொடக்க நாளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாட்சியர் டாக்டர் ராஜன் நடராஜன் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எழுச்சி உரையாற்றுகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.சென்னை பாரதி பாஸ்கர் பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பு ஏற்கிறார்.

    தமிழ்நாடு  ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு நிறைவு விழாப் பேருரை ஆற்றுகிறார். இந்த விழாவுக்கான அழைப்பிதழை கம்பன் கழகத் தலைவர் ச.ராமச்சந்திரன் வெளியிட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கம்பன் கழகச் செயலாளர் ரா சம்பத்குமார், துணைத் தலைவர் எம் ஆர் எம் முருகப்பன், துணைப் பொருளாளர் கறு. ராமசாமி, கூடுதல் செயலாளர் பாரதி, இணைச் செயலாளர்கள் முனைவர் முருகையன், காடுவெட்டி குமார் மற்றும் விழாக் குழு உறுப்பின ர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன், முனைவர் மாரியப்பன், கவிஞர் நிலவை பழனியப்பன் , அனுராதா சீனிவாசன், காசி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல், தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள கற்பக விநாயகா கலையரங்கத்தில் மாநில சட்டஅமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மவுண்ட் சீயோன் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    மவுன்ட்சீயோன் கல்லூரியின் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் சிறப்பான திறன்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர். மாணவர்கள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி ஒவ்வொரு விளையாட்டுகளிலும் 2-ம் பரிசைப் பெற்றனர். இறகுபந்து விளையாட்டில் மாவட்ட அளவில் முதல் மற்றும் 3-ம் பரிசுகளை தட்டிச்சென்றனர். இந்த ஆண்டு மவுண்ட்சீயோன் கல்லூரி மாணவர்கள் 7 விளையாட்டு பிரிவுகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மவுண்ட்சீயோன் கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ஜெய்சன் ஜெயபாரதன், கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினர். மாணவர்களின் விடாமுயற்சி, குழுப்பணி மற்றும் விளையாட்டில் அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பாராட்டினர். மேலும் மாணவர்களின் முழுத்திறனையும் அடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலில் அயராது முயற்சி செய்து வரும் உடற்கல்வி இயக்குநர் டாக்டர் செல்வகண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

    • கந்தர்வகோட்டை அருகே நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
    • விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளின் பாதுகாப்புக்காக கொள்முதல் நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பருக்கை விடுதி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை விற்று தங்களது வங்கி கணக்கில் அதற்கான தொகையை பெற்று வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை அரசு கிட்டங்கிகளுக்கு அனுப்பாமல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் மழையிலும் வெயிலிலும் தற்போது அடிக்கும் சூறைக்காற்றிலும் நெல்மணிகள் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்மணிகளின் பாதுகாப்புக்காக கொள்முதல் நிலையத்திலேயே காத்துக் கிடக்கின்றனர். பல்வேறு காரணங்களைச் சொல்லி கொள்முதல் செய்வதை தாமதப்படுத்தாமல் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல்மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்தர்வகோட்டை அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த கணபதிபுரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலை அமைத்து கடந்த 3 நாட்களாக நான்கு கால யாக பூஜைகள் சிவாச்சாரியார்கள் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்ட கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் மேற்கொண்டனர்

    • புதுக்கோட்டை மாவட்ட அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கபட்டுள்ளது
    • 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை,

    2023-2024ம் நிதியாண்டிற்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில், 26ந்தேதி முதல் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்து, அரசிதழ் பெற்றிட கட்டணத்தினை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்பங்கள் கட்டணம் ஏதும் இல்லை. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளி மாணவிகள் ரோபோ உருவாக்கினர்
    • இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் பணிமனை மூலம் 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டன. குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம், சுமை தூக்கும் ரோபோ, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.



    • திருவேங்கைவாசல் ஊராட்சியில் சொந்த நிதியில் 6 மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சைக்கிள் வழங்கினார்
    • மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி திருவேங்கைவாசல் ஊராட்சியை சேர்ந்த வளையன்வயல் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 6 பேருக்கு சைக்கிள்களை தனது சொந்த நிதியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களுக்கு சென்றார். அப்போது, வளையன்வயல் பகுதியில் பள்ளி மாணவர்கள் சிலர் வடமலாப்பூர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நாங்கள் பள்ளியில் இருந்து 2 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கும், வீட்டுக்கும் செல்கிறோம்.

    பத்தாம் வகுப்பு என்பதால் நடந்து சென்று படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது, சைக்கிள் வாங்கி தருமாறு கோரிக்கை விடுத்தனர். உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட டாக்டர் சி.விஜயபாஸ்கர், பள்ளி சென்று படிக்க ஏதுவாக பத்தாம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களூக்கு தனது சொந்த நிதியிலிருந்து சி.வி.பி. பவுண்டேசன் மூலமாக 6 சைக்கிள்களை வழங்கினார். மேலும் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இருசக்கர வாகனம் வழங்குவதாக தெரிவித்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ×