என் மலர்
புதுக்கோட்டை
வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆண்ரூஸ் செல்வின் (வயது 21). இவர் கடந்த 8-ந் தேதியன்று விராலிமலையில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை தனது பெரியம்மா வீட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆண்ரூஸ்செல்வின் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் அவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.
விராலிமலை அருண்கார்டன் அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்தவர் ராமன் மனைவி லலிதா(வயது33). ராமன் வெளிநாட்டில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று லலிதா வீட்டை பூட்டி விட்டு ஜாதகம் பார்ப்பதற்காக ஊத்துக்குளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லலிதா, உடனே வீட்டினுள் சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது, அறையில் இருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
உடனே லலிதா விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை அஞ்சலகத்தில் பார்சல் கட்டும் மையம் இன்று திறக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளார் கு. தங்கமணி மையத்தைத் திறந்து வைத்தார். இம்மையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் வாடிக்கையாளார்கள் தங்களது பொருட்களை எடுத்து வந்து பார்சல் செய்து அனுப்பலாம்.
இந்நிகழ்வில் உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் (வடக்கு) பாலசுப்பிரமணியன், தலைமை அஞ்சல் அதிகாரி சத்தியமூர்த்தி, அஞ்சல் ஆய்வாளர் (தெற்கு) ராதை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மின்சார பாரமரிப்பு பணி காரணமாக ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மனவிடுதி,
சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, வீரடிபட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, துருசுபட்டி, வெல்லாலவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு
நாளை 12&ந்தேதி சனிக் கிழமைகாலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டி கிராமத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடை பெற்றது.
கோவில் உற்சவ மூர்த்தியை கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் கை பல்லாக்காக வேம்பன்பட்டி கோவிலுக்கு சுமந்து வந்தனர்.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரமும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் உற்சவமூர்த்திக்கு பக்திப் பெருக்குடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உற்சவமூர்த்தி கோயிலை சென்றடைந்தவுடன், விழா தொடங்குவதை குறிக்கும் வகையில் கோவிலின் முன்புறம் கொடி ஏற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா மற்றும் தேரோட்டம் வரும் 18&ந்தேதியன்று நடைபெறுகிறது. அடுத்த நாள் காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்,மண்டகப் படிதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை கந்தர்வ கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) பிரகாஷ், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி,
ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதி தாசன், ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் பாக்கியராஜ்,சாந்தி, மாலா, மைவிழி, சிறப்பாசிரியர்கள் சரண்யா, ரம்யா, ராணி, அறிவழகன், பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை நடுநிலைப்பள்ளியில் பேரணி தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பேரணியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவேண்டி வாசகங்கள் உள்ளபதாகை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பேரணி ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கிலிமுத்து செய்திருந்தார்.
கந்தர்வக்கோட்டை அருகே சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகையில் சிறப்பு கால் நடை மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
முகாமில் வேலாடிப்பட்டி அரசு கால்நடை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் வளர்க்கக் கூடிய செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் 1071 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சிறப்பாக முறையில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நூலகம் வந்த பெண்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சர்வதேச மகளிர்தினத்தன்று வருகை தந்து நூல்களை வாசித்த பெண்களை கவுரவித்து பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.
காலை முதலே நூலகத்திற்கு வந்த பெண்களை வரவேற்று வாசகர் வட்ட தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மையத்தின் நூலகர் சசிகலா, நூலகர் கண்ணன், மகாத்மா பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், ரோட்டரி துணை ஆளுநர் கருணாகரன், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் துரை மணி ஆகியோரும் கலந்து கொண்டு மகளிருக்கு பாராட் டுதல்களை தெரிவித்தனர்.
வாசகர் வட்டம் சார்பில் நூலக அலுவலக பணியாளர் களான பெண்கள் அனைவரும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இந்த பாராட்டு விழா தங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிப்பதாக பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.
டிரைவர் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 35). இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.
கோயமுத்தூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ராமராஜன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கிராமமான மாங்கோட்டைக்கு வந்தவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ராமராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ராமராஜனின் அண்ணன் பிரபு கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
60 அடி ஆழ கிணற்றில் விழுந்த 2 நாய்கள் உயிருடன் மீட்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்ககுறிச்சி வடத் தெருவை சேர்ந்த விவசாயி வீராசாமி க்கு சொந்தமான 60அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் 2 நாய்கள் தவறி விழுந்துவிட்டது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே கறம்பக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த குழந்தைராசு தலைமையிலான தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றிலிருந்து இரண்டு நாய்களை பத்திரமாக உயிருடன் மீட்டு,
அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். நாய்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த கிளீனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பைங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). இவர், பேராவூரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேனில் கிளீனராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரம்பக்காடு கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு சென்ற போது, ஒரு வளைவில் வேன் திரும்பிய போது, முருகேசன் வேனில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாய மடைந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித் து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் குண்டர் சட்டத்தின் கீழ் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அண்மையில் அஜித் குமார் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், காமராஜபுரத்தைச் சேர்ந்த குருமூர்த்தி (25), ஆகாஷ் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமயம் காவல் நிலைய எல்லையில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய பாப்பாத்தி ஊரணியைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்திருந்தார்.
அதன்படி, மூவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மூவரும், புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






