என் மலர்
பெரம்பலூர்
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டு இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 5,077 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதன் முறையாக மத்திய மண்டலத்தில் தினசரி தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே போன்று நேற்றைய தினம் மத்திய மண்டலத்தில் 59 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
இதில் அதிக பட்சமாக தஞ்சாவூரில் 20 பேரும், திருச்சியில் 13 பேரும், கரூரில் 8 பேரும், அரியலூரில் 6, திருவாருரில் 5, நாகப்பட்டிணத்தில் 3, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா 2 பேரும் கொரோனா வைரஸ் தாக்கி இறந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் 1,500 ஆக இருந்த தினசரி பாதிப்பு கடந்த சில தினங்களாக 1,400-க்குள் வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் இங்கு 1,407 பேருக்கும், தஞ்சாவூரில் 1,176 பேருக்கும், திருவாரூரில் 572 பேருக்கும் உறுதியானது.
பெரம்பலூரில் நேற்று முன்தினம் 219 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றைய தினம் 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென 2 மடங்காக உயர்ந்தது அந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தினசரி தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று நாகப்பட்டினத்தில் 561 பேரும், புதுக்கோட்டையில் 415 பேரும், அரியலூரில் 293 பேரும், கரூரில் 275 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்படி மாவட்டத்தில் முககவசம் அணியாத 200 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.40 ஆயிரமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 35 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.17 ஆயிரத்து 500-ம் அபராதமாக விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 71 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, கழனிவாசல், கீழ குடிக்காடு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல் மணிகளை ஒகளூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் சாலையில் கிடந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. மழையில் நெல்மணிகள் நனைந்து முளை விடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையுடன், நெல்மணிகளை சாலையில் காய வைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டே, விவசாயிகள் தங்கள் குடும்ப செலவுகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் அகரம் சீகூர், கோயில்பாளையம், கீழப்புலியூர் நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்ய பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்றைய தினம் பெரம்பலூர் சாலைகளில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 71 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 70 இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்களமேடுதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமாந்துறை சுங்கச்சாவடி மற்றும் அயன்பேரையூர் பிரிவு பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாஷ் தலைமையில் மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 50 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்ட எல்லையான அல்லி நகரகத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாகன சோதனை சாவடியில் நேற்று மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயலட்சுமி, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜியாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவராஜ், மணிகண்டன், ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவுடன் வந்தவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இ-பதிவு இல்லாமல் வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குன்னம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தக்குமார், காதர்கான் உள்ளிட்ட போலீசார் கடைவீதி 4 ரோடு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு நின்று கொண்டு காலை 10 மணிக்கு மேல் 2 சக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரணை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கொரோனாவுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 76 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 28 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 13 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 18 பேரும் என மொத்தம் 135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,802 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 3,188 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,574 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 65 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்தப்பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,175 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 262 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 33 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரைக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி 36,951 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசி 2,148 பேருக்கும் என மொத்தம் 39,099 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 4,850-ம், கோவேக்சின் தடுப்பூசி 410-ம் கையிருப்பில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் முழு ஊரடங்கு விதிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் பின்பற்றுவதில்லை. முழு ஊரடங்கில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூரில் அந்த கடைகளின் முன்பு சமூக இடைவெளி கடைப்பிடிக்க உரிமையாளர்கள் வட்டம் போடுவது இல்லை.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது பெரம்பலூரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் முன்பு, அதன் உரிமையாளர்கள் வட்டமிட்டு, அதில் பொதுமக்கள் நின்று சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து பொருட்களை வாங்கிச்சென்றனர். ஆனால் இந்த ஆண்டு பெரம்பலூர் உழவர் சந்தை முன்பும், அருகேயும் காய்கறி கடைகள் சமூக இடைவெளி இல்லாமல் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது. அங்கு காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதேபோல் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட், மளிகை கடைகள், மீன், இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நிற்கின்றனர்.
தற்போது கொரோனா 2-வது அலை உயிருக்கு ஆபத்தாக இருப்பது தெரிந்தும் நகர்ப்பகுதியில் சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களை போலீசார் எச்சரித்தும், அதனை அவர்கள் பொருட்படுத்தாமல் சுற்றித்திரிகின்றனர்.
காலை 10 மணிக்கு பிறகும் சாலையில் எப்போதும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வந்த வண்ணம் உள்ளன. வங்கிகள் முன்பும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்காமல், ஒருவர் பின் ஒருவர் ஒட்டியவாறு நிற்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பெயரளவுக்கே அபராதம் விதித்து கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். ஏற்கனவே பெரம்பலூர் நகர்ப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததால் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் பெரம்பலூரில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து, கடுமையாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவின் பேரில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கொரோனா பாதித்த பகுதிகளை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூக்கு மனமின்மை போன்றவை இருந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077, 9154155097 மற்றும் 18004254556, 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கொரோனா பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினர்களுடன் தங்கி உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சேவைகள் பெற்றிடவும், கொரோனா குறித்த விளக்கங்கள் பெற்றிடவும் 9384056223 என்ற அவசர தொலைபேசி எண்ணிலும், மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328-296209 என்ற தொலைபேசி எண்ணிலும், அவசர உதவி எண் (இலவச சேவை எண்) 181-லும், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிர்வாகியை 6380469886 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கோள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






