என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:-

    இந்திய திருநாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    பின்னர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை புறக்கணிக்கும் வகையில் தமிழக அரசின் ஊர்தியை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்னர்.

    நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாநிலசெயலாளர் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், கலையரசி மற்றும் நிர்வாகிகள் ரெங்கநாதன், கிருஷ்ணசாமி, கருணாநிதி, சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழகத்தின் அலங்கார ஊர்தியின் மாடல் அலங்கார ஊர்தியை வடிவமைத்து ஊர்வலமாக ஓட்டி சென்று தேசப்பற்றினை சகோதரிகள் வெளிப்படுத்தினர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தின் பாரம்பரிய, கலாச்சார, தேசப்பற்று  தலைவர்களின் அலங்கார ஊர்தி ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்.

    ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசின் அலங்கார அணிவகுப்பில் தமிழகத்திலிருந்து அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை. இது பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - சூரியகலா தம்பதியினரின் மகள்களான சிற்பக்கலா (13), இன்பகலா (8) ஆகிய இரண்டு மாணவிகள் உள்ளனர்.

    சிறு வயது முதலே தேசத்தின் மீது பற்று கொண்டவர்களாக வளர்ந்தனர் இதையடுத்து அவர்கள் இந்த குடியரசு தின விழாவை சிறப்பிக்கும் வகையில் தங்களது பங்களிப்பை செலுத்த முடிவு செய்தனர்.

    அதன்படி குடியரசு தின விழாவையொட்டி தேச தலைவர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி. மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் அடங்கிய சிறிய வடிவிலான கலாச்சார ஊர்தியை டிராக்டருடன் அலங்கரித்து அதனை கொண்டு வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊர்வலமாக ஓட்டி சென்றனர்.

    இதனை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.
    விவசாயி வீட்டின் மேற்கூறையில் கிடந்த மற்றொரு துப்பாக்கி குண்டால் பரபரப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் அருகே தமிழ்நாடு காவல் துறையினருக்கான  துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கடந்த திங்கட்கிழமை திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில்  ஈடுபட்டார்கள். அப்போது அங்கிருந்து சென்ற துப்பாக்கி குண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (60) என்பவரது வீட்டின் மேற் கூரையில் விழுந்துள்ளது.

    அப்போது  வீட்டின் மேற்கூரையில் சிறுதுவாரம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில்  வீட்டின் மேற்கூரையில் இருந்த அந்த சிறு துவாரத்தை சரி செய்வதற்காக மேலே ஏறி பார்த்த போது  அங்கு  துப்பாக்கி குண்டு கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பாடாலூர் போலீஸ் காவல் நிலையத்திற்கு  கொடுத்த தகவலின் பேரில்  இன்ஸ் பெக்டர் ஜெயராமன் தலை மையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தத் துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி  விசாரணை  நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    இந்நிலையில் அதே வீட் டின் கூரையின் மேல் மற்றொரு  துப்பாக்கி குண்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டின் மேற்கூரையில் நேற்று மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் மருதடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு, காவல்துறையினர் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டபோது மலையின் பின் பகுதியில் ஈச்சங்காடு என்ற இடத்தில் உள்ள சுப்பிரமணி என்ற விவசாயி வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் சேதமடைந்தது. சம்பவ இடத்தை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி மற்றும் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், திருச்சி மண்டல ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 48 பேர், 4 விதமான துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும், அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய ஒரு குண்டு சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியதும் தெரிய வந்தது.

    மேலும், அந்த துப்பாக்கி குண்டு பயிற்சி தளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவசாயி வீட்டின் மீது விழுந்தது எப்படி?, அது, எந்த வகையான துப்பாக்கி குண்டு?, எவ்வளவு திறன் வாய்ந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று அதே சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையில் மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கைப்பற்றிய போலீசார் அதனை தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    விவசாயி சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு சம்பந்தமாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெரம்பலூரில் ரெயில்வே போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி குண்டு விவசாயி ஒருவரது வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடிவடிக்கை கோரி தாய் கலெக்டரிடம் மனு கொடுத்தார்
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா,   இவர் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி,  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    பின்னர் சித்ரா கூறியதாவது:
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் கிராமத்தில் எனது கணவர் செந்திலுடன் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். எங்கள் மகன் திவாகர் (21) என்பவரை, கடந்த 23&ந் தேதி கை.களத்தூர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     
    குறவர் சமூகத்தைச் சேர்ந்தவரான திவாகரை, கை. களத்தூர் போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கில் கைது செய்து, எங்களது வீட்டிலிருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காரியானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளை ஒத்துக்கொள்ளுமாறு எனது மகனை துன்புறுத்தி வாக்குமூலமும் வாங்கியுள்ளனர்.

    திவாகர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். எங்களிடமிருந்து பறிமுதல் செய்த நகை, ரொக்கம் ஆகியவற்றை போலீசார் திருப்பி ஒப்படைக்க வேண்டும். காரியானூர் கிராமத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை போலீசார் தேடி கண்டுபிடிக்க வேண்டும். மேலும், எனது மகன் மீது பொய் வழக்குப் பதிந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    காவல்கார குறிஞ்சியர் நலச்சங்க மாநிலத் தலைவர் ஆர். பொன்னுவேல் தலைமையில், அச்சங்கத்தின் நிர்வாகிகள் பலர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
    கொரோனாவால் உயிரிழந்த கிறிஸ்தவ பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்தனர் முஸ்லீம் அமைப்பினர்
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்து தரக்கோரி, அவரது குடும்பத்தினர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எனும் முஸ்லீம் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, அந்த அமைப்பின் கோவிட் ரிலீப் கமிட்டி தலைவர் அகமது இக்பால் தலைமையில், செயல்வீரர்கள் இப்ராஹிம், சதாம், ஷாஜகான் ஆகியோர் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, தொண்டமாந்துறை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறையில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்தனர். முஸ்லீம் அமைப்பினரின் இச்செயலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
    விஷம் குடித்து பெயிண்டர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் மகன் சுப்ரமணி (42). பெயிண்டரான இவர், கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று சிகிச்சை பெற்றுள்ளார்.

    இந்நிலையில், கடந்த 23&ந் தேதி ஏற்பட்ட வயிற்று வலியால் மனமுடைந்த சுப்ரமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்ரமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூரில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில்  உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடந்த 73&வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறையினரின்  அணிவகுப்பு  மரியாதையை  ஏற்றுக் கொண்ட கலெக்டர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 19 காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவலர் பதக்கங்களை அணிவித்த மாவட்ட கலெக்டர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களுக்கு 169 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .

    விழாவில்  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட  வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, கோட்டாட்சியர்   நிறைமதி, மாவட்ட ஊரக  வளர்ச்சி முகமை  திட்ட  இயக்குநர் லலிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பாய்ந்து வந்த தோட்டா விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது மருதடி ஈச்சங்காடு கிராமம்.

    இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாரணமங்கலம் மற்றும் ஆலத்தூர் கேட் ஆகிய கிராமங்களுக்கு இடையே போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பயிற்சி மையத்தில் திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்று.

    இந்த நிலையில் நேற்று போலீசார் வழக்கம்போல் இந்த மையத்திற்கு வந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலை மருதடி ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயி வீட்டின் மேற்கூரையான சிமெண்டு ஓட்டின் மீது தொப்பென்று ஒரு சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் இருந்த அவர் இந்த சத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இன்று காலை மேற்கூரையில் ஏறி பார்த்தபோது, அங்கு துப்பாக்கி குண்டு ஒன்று கிடந்தது. மேலும் தோட்டா பாய்ந்த இடத்தில் மேற்கூரையில் ஓட்டையும் விழுந்திருந்தது.

    இதுபற்றி சுப்பிரமணி பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து மலைப்பகுதியை கடந்து துப்பாக்கி தோட்டா எப்படி இந்த கிராமத்திற்கு வந்தது, அருகில் இருந்து யாராவது பயன்படுத்திய துப்பாக்கி தோட்டா இங்கு வந்து விழுந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குற்றப்பிரிவு போலீசாரை திருச்சி சரக டி.ஐ.ஜி. சான்றிதழ் வழங்கினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணியாற்றிய சிறப்பு குற்றப்பிரிவு காவல் துறையினரை, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபகாலமாக நடந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடித்ததோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகளிடமிருந்து 32 பவுன் தங்கம், 784 கிராம் வெள்ளி, 30,700 ரூபாய் ரொக்கம், 2 மடிக்கணினி, 1 செல் போன், 2 ஒலிபெருக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    குறித்த காலத்தில் சிறப்பாக பணியாற்றிய குற்றப்பிரிவு காவல் துறையினரை, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்ட் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மேலமாத்தூர் கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 64). தொழிலாளியான இவருக்கு அலமேலு என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
    மகன்கள் இரண்டுபேரும் சென்னையில் வேலை பார்த்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றார். 
    இந்நிலையில் நேற்று மாலை ஆறுமுகம் வீட்டின் அருகில் வயலில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த ஆறுமுகம் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உரக்கடையின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54). இவர் அதே ஊரைச் சேர்ந்த விவேக் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் கடையை வாடகைக்கு வைத்து, கடந்த 34 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். 

    சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு நாகராஜன் கடையை பூட்டிவிட்டு, கடையின் பின்புறம் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். காலை நாகராஜன் கடைக்கு வந்து பார்த்த போது, கடையில் மர பலகையிலான கதவின் ஒருபுறம் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் சேமிப்பு அலகும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து நாகராஜன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நாகராஜன் கடையின் அருகே உள்ள சலூன் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

    அப்போது அதில், அதே களரம்பட்டியை சேர்ந்த தெய்வசிகாமணி (52) என்பவர் நாகராஜனின் கடை கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிவிட்டு வெளியே வந்தது பதிவாகியிருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து தெய்வசிகாமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 700 ரூபாயை கைப்பற்றினர். தெய்வசிகாமணி மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    ×