search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்பாக்கி குண்டு விழுந்த வீட்டையும், தோட்டாவையும் படத்தில் காணலாம்.
    X
    துப்பாக்கி குண்டு விழுந்த வீட்டையும், தோட்டாவையும் படத்தில் காணலாம்.

    வீட்டின் மேற்கூரையில் விழுந்த துப்பாக்கி குண்டால் பரபரப்பு

    பெரம்பலூர் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பாய்ந்து வந்த தோட்டா விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது மருதடி ஈச்சங்காடு கிராமம்.

    இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாரணமங்கலம் மற்றும் ஆலத்தூர் கேட் ஆகிய கிராமங்களுக்கு இடையே போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பயிற்சி மையத்தில் திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒன்று.

    இந்த நிலையில் நேற்று போலீசார் வழக்கம்போல் இந்த மையத்திற்கு வந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாலை மருதடி ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயி வீட்டின் மேற்கூரையான சிமெண்டு ஓட்டின் மீது தொப்பென்று ஒரு சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் இருந்த அவர் இந்த சத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இன்று காலை மேற்கூரையில் ஏறி பார்த்தபோது, அங்கு துப்பாக்கி குண்டு ஒன்று கிடந்தது. மேலும் தோட்டா பாய்ந்த இடத்தில் மேற்கூரையில் ஓட்டையும் விழுந்திருந்தது.

    இதுபற்றி சுப்பிரமணி பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து மலைப்பகுதியை கடந்து துப்பாக்கி தோட்டா எப்படி இந்த கிராமத்திற்கு வந்தது, அருகில் இருந்து யாராவது பயன்படுத்திய துப்பாக்கி தோட்டா இங்கு வந்து விழுந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×