என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஓரே நாளில் 3,465 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது: 

    பெரம்பலூர் மாவட்டத்தில்  நேற்று சனிக்கிழமை  193 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள், இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், 

    முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தும் விதமாகவும் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 1,120 நபர்களுக்கும், 

    ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 498 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 894 நபர்களுக்கும்,  

    வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 953 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 3,465 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும், கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
    பெரம்பலூர்: 

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் முதலாம் வகுப்பு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

    பெரம்பலூர் விளாமுத்தூர் சாலையில் இயங்கி வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை பெற ஆன்லைன் மூலம் கடந்த 28-ந் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். 

    விண்ணப்பிக்க கடைசி தேதி வரும்  21-ந் தேதியாகும். 6 வயது முடிந்த இருபாலரும் முதலாம் வகுப்பில் சேர தகுதியுடையவர். 

    மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் கேந்திரியா வித்யாலயா பள்ளியின் இணையதளங்களை பார்வை யிட்டு பயன்பெறலாம். பள்ளி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

    வரும் 25-ந் தேதி சேர்க்கைக்கு தகுதியுடைவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப் படும், எனவே பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூரில் வாகன சோதனை நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு உத்தரவின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வி.எஸ்.கணேஷ் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் பெரம்பலூர் நான்குரோடு புதிய பேருந்து நிலையம் ரோவர் கல்லூரி தண்ணீர் பந்தல் வாலிகண்டபுரம் உள்ளிட்ட  பகுதிகளில் வாகன  தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த தகுதி சான்றிதழ் இல்லாத  4 வாகனங்களை பறிமுதல் செய்தனர், மேலும் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருப்புசாமி, 

    வாகனங்களில் எல்.யி.டி. விளக்குகள், ஏர் ஹாரன் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.  பறிமுதல் செய்த வாகனங்களை பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் அருகே பிரியாணி கடை உரிமையாளர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் ராஜா (வயது 34). இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு விதின் என்ற மகனும், நிர்திஷா என்ற மகளும் உள்ளனர்.

    சேகர்ராஜா, பெரம்பலூர் 4 ரோடு, தண்ணீர் பந்தல், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிரியாணி கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் பெரம்பலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கருவக்காடு பகுதியில் சேகர் ராஜா இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலுக்கு அருகில் ஒரு மதுபாட்டில் மற்றும் வி‌ஷபாட்டிலும் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு சேகர்ராஜா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசி விட்டு சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் சேகர் ராஜாவின் மனைவி, போலீசாரிடம் எனது கணவருக்கு கடன்கள் ஏதுமில்லை. அவர் மனம் தைரியம் படைத்தவர். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவர் மனநிலை இருந்ததில்லை. அவரது சாவில் மர்மம் இருக்கிறது. அதனை தங்கள் விசாரணையில் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரினார்.

    பிரியாணி கடை உரிமையாளர் மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    பெரம்பலூர்:

    உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

    கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அன்பழகன், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரவன், 

    குன்னம் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பற்றி எடுத்துக் கூறினர். 

    மேலும் வட்ட வழங்கல் அலுவலர் பேசுகையில், பொருட்களை கடையில் வாங்கும் போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை நுகர்வோர் பார்த்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

    முடிவில் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் பெரியசாமி நன்றி கூறினார்.
    மாற்றுத்திறன் மாணவர் களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த  மருத்துவ மதிப்பீட்டு முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய 48 குழந்தைகளும், உடல் இயக்க குறைபாடுடைய  24 குழந்தைகளும், செவித்திறன் குறைபாடுடைய 42 குழந்தைகளும், பார்வைக் குறைபாடுடைய 43 குழந்தைகளும் ஆக மொத்தம் 157 மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.    

    அவர்களை பரிசோதித்து உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர்.  இதில் நடைப்பயிற்சி சாதனம் 2 குழந்தைகளுக்கும், கண் கண்ணாடி 14 குழந்தை களுக்கும், சிறப்பு சக்கர நாற்காலி 3 குழந்தை களுக்கும், கார்னர் சீட் 3 குழந்தை களுக்கும், பிரெய்லி கிட் 2 குழந்தை களுக்கும், செவித்துணைக் கருவி 5 குழந்தைகளுக்கும் ஆக மொத்தம் 29 குழந்தைகள் உதவி உபகரணங் களுக்காகவும், 2 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காகவும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளனர்.

    அடையாள அட்டைக்காக 19 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. வருவாய் துறை மற்றும் அரசு கேபிள் டிவி தனி வட்டாட் சியருடன் ஒருங் கிணைந்து இ-சேவை மையங்கள் மூலம் வருமான சான்று விவரங்கள் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டது. 

    முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 42 மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆதார் அட்டை  இல்லாத 6 மாற்றுத்திறனுடைய குழந்தை களுக்கு எல்காட் மூலம் ஆதார் அட்டை எடுக்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட மாற்றுத் திறனுடைய மாணவர்களில் 23 நபர்களுக்கு புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 
    பெரம்பலூர் செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம கிராமசபை கூட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  அருகே செங்குணம்  ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சந்திரா தலைமை வகித்தார். பெரம்பலூர் மண்டல  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா முன்னிலை வகித்தார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக தணிக்கை அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட சமூக தணிக்கை குழுவினர் 2019&2020 ம்   நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தணிக்கை  குறித்த விவரங்களை  விவாதிக்கும் அதன் பொருட்டு ஊராட்சி செயலளர் கோவிந்தன் பதிலளித்தார்.

    மேலும் 100 வேலை திட்ட பணியாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் வரும் 2022&2023 நிதியாண்டில் வேலை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும், அனைத்து குடும்பத்திற்கும் 100 வேலை நாட்கள் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண் டும்,

    100 நாட்கள் வேலை திட்ட பணியாட்கள்பெருமாள் மலை குட்டைகளில் தண்ணீர் கொண்டு வருவதில்சிரமம் ஏற்பட்டுள்ளதால் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து செங்குணம் பெருமாள் மலை அடிவாரத்தில் வளர்ந்து வரும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி துணை தலைவர் மணிவேல், வார்டு  உறுப்பினர்கள் நல்லம்மாள்,  அனிதா, ராஜ கண்ணு, நிர்மலா அஞ்சலை, சுசிலா, சுப்ரமணி, திரு மூர்த்தி மற்றும் பணிதள பொறுப்பாளர்கள்  அம்மு, சிநேகா, பூவழகி,  சாரதாதேவி மற்றும் குமார் அய்யாவு உட்பட பொதுமக்ள் பலர் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் மதன கோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருள்மிகு மரகதவல்லி  தாயார்சமேத மதனகோபால  சுவாமி திருக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம்.

    இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று 9ம்தேதி கொடியேற்ற நிகழ்ச்சி மங்கள வாத்தியம் முழங்க நடந்தது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சார்யா செய்து வைத்தார்.  ஹம்ச வாகனத்தில் சுவாமிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் முன்னாள் அறங்காவலர்கள்  வைத்தீஸ் வரன்,  பூக்கடைசரவணன், ஆடிப்பெருக்கு  ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார், காய்கறி கடை சரவணன் உட்பட பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.இதை தொடர்ந்து தினமும் சிம்மம், அனுமந்தம், சேஷ, வெள்ளி கருடன், யானை, புஷ்பபல்லக்கு போன்ற வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    வரும் 17ம்தேதி காலை 10 மணியளவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடை பெறுகிறது.
    பெரம்பலூரில் வருகிற 13ந்தேதி மாவட்ட சதுரங்க போட்டி நடைபெறுகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 13ந்தேதி காலை 8மணியளவில் நடைபெறுகிறது.

    இதில் 11, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் ஆண்,பெண் இருபாலருக்கும் நடைபெறு கிறது. இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப் பெறு வோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டியில் கலந்து கொள்ளலாம்  என மாவட்ட தலைவர்  சரவணன் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூரில் வருகிற 12ந்தேதி லோக்அதலாத் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட் வளாகத்தில் வரும் 12ம்தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள்மன்றம் நடை பெறுகிறது.

    பெரம்பலூர்மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து வழக்குகள், வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக் கல், வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள்,  திருமண உறவு தொடர்பான  வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் ஆகியவற்றில்  சமரசமாக தீர்வு காணப்படவுள்ளது.

    தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் தரப்பினர் கோர்ட் கட்டணமாக செலுத்தியுள்ள  முழுத்தொகையையும்  திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.

    சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியாது. தரப்பினர்களுக்கு வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது.

    எனவே பொதுமக்கள், வழக்காடிகள் வரும்12தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் மன்றத்தில் தங்கள் வழக்கு களுக்கு சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் விபரங் களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, பெரம்பலூர் அலுவ லகத்தை நேரிலோ அல்லது 04328 296206 என்ற தொலை பேசியின் வாயிலாக தொடர்பு  கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்கோர்ட்  நீதிபதியுமான லதா தெரிவித்துள்ளார்.
    செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    வடபழனி என்றழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டி­குளம் தண்­டாயுதபாணி சுவாமி  கோவில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக  நடைபெ­றுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு​   பங்குனி உத்திர திருவிழா  இன்று காலை கொடியேற்­றத்துடன் தொடங்கியது.​ ​

    கொடியேற்றத்தை முன்னிட்டு கா­லையில் மலையில் முருக­னுக்கு சிறப்பு அபிஷே­க, ஆராதனைகள் நடைபெற்­றது.  பின்னர் கொடி கம்பத்திற்கு சிறப்பு யாகம் அபிஷேகம், ஆராதனை­கள் நடத்தப்பட்டு, பக்தர்களின் அரோகரா,    அரோகரா கோஷங்கள் முழங்க மலையில் கொடியேற்றம்  நடைபெற்றது.

    கொடி­யேற்றத்தில் ஊராளிக் கவுண்டர்​ முன்னேற்ற சங்க மாநில தலைவர் கணேசன், துணை தலைவர் சுப்ரமணி­யன்,  ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதியழகன் உள்ளிட்­ட​ செட்டிக்குளம்,​  ஆலத்தூர்  கேட், இரூர்,   சத்திரமனை  உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்­களைச்  சேர்ந்த  பக்தர்­கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முதல் தினந் தோறும் தண்டாயுத­பாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் இரவு அலங்கார வாகனத்தில் சு­வாமி திருவீதியுலாவும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 18-&ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெ­றுகிறது.
    ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்து கல் நடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அறநிலையத்துறை சார்பில் கோவில் இடங்களை அளவு செய்து எல்லை கல் நடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வாராஜ், தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பணி,

    பெரம்பலூர் மாவட்டத்தில் முதலாவதாக செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவு செய்து எல்லைகள் நடும் பணி நடைபெற்றது.
    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் 1820  கோவில்கள் உள்ளன. இதில் மேற்கண்ட கோவில்களுக்கு சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதனை அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    செட்டிகுளம் ஏகாம்பஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்களை கண்டு அவற்றை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளோம். முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×