என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் மூதாட்டியை ஏமாற்றி 2 பவுன் நகையை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது73).

    கடந்த 7-ந்தேதி காலை வீட்டு வாசலை பஞ்சவர்ணம் பெருக்கி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்து அவர் அருகில் நிறுத்தி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

    அப்போது பஞ்சவர்ணம் கழுத்தில் அணிந்திருந்த செயின் நன்றாக இருப்பதாகவும், இதுபோல் தனது தாயாருக்கும் வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனது கழுத்தில் கிடந்த செயினை அவரிடம் கழற்றி கொடுத்துவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகையை கழற்ற சொல்லி வாங்கி பார்த்துள்ளார். பின்னர் குடிப்பதற்கு அந்த வாலிபர் தண்ணீர் கேட்டதால் அவர் வீட்டிற்குள் சென்றார். அப்போது 2 பவுன் செயினுடன் மோட்டார் சைக்கிளில் வாலிபர் தப்பி சென்றுள்ளார்.

    தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது அவரை காணாததால் பஞ்சவர்ணம் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் காளிதாஸ் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவரும் மோட்டார் சைக்கிளில் மர்மநபரை விரட்டி சென்றும் பிடிக்கமுடியவில்லை.

    பின்னர் வந்து பஞ்சவர்ணம் கையில் இருந்த செயினை பார்த்தபோது அது கவரிங் செயின் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே மாங்காய் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் தெற்குகாடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் ஆயக்காரன்புலம்-3 பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் அசோகன் (26), பன்னாள் மேற்கு பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் செல்வகுமார் (29) ஆகிய இருவரும் சுமார் 25 கிலோ மதிப்புள்ள மாங்காய்களை திருடி சென்றனர்.

    இதுகுறித்து தோப்பில் வேலை பார்த்த கருப்பம்புலம் நடுகாட்டைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோகன் (எ) அசங்கன், செல்வகுமார் ஆகிய இருவரையும் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.

    மயிலாடுதுறை அருகே சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ளது மூவலூர் ஊராட்சி. இங்கு சுமார் 2,500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதிக்கு 7 தரை தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதமாக வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மூவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் காலி குடங்களை வைத்து இருந்தனர். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    நாகை அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த கீவளூர் போலீஸ் சரகம் பட்டமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக மனஅழுத்த நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு மன அழுத்த நோய் அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டுள்ளார்.

    அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீவளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 5 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    கீழ்வேளூர்:

    டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. மேலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை முறையாக வழங்க மறுத்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கடைமடை பாசன நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இதன் காரணமாக நெல் விதைப்பு செய்த விவசாயிகள் பயிர்கள் கருகுவதால் வேதனையில் உள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாத வேதனையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ரெகுநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்ற விவசாயி அதேபகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து இருந்தார். அவர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆதிச்சபுரத்தை சேர்ந்த அழகேசன் என்ற விவசாயி அதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். 2 மாதமாக பாசனத்துக்கு தண்ணீர் வராததால் வேதனை அடைந்த அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

    மேலும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பூந்துருத்தி பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்ற விவசாயி 2½ ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். அவர் கடந்த 25 நாட்களாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் வேதனை அடைந்தார். நாற்றங்கால் பணி செய்த அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி அண்டர் காட்டைசோந்த ரெத்தினவேல் என்ற விவசாயி 1 ஏக்கர் நிலத்தில் 2 முறை நெல் விதைத்தும் பாசனத்துக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் வயலில் மயங்கி விழுந்து இறந்தார்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடியை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 60) என்ற விவசாயி அதே பகுதியில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் பயிர்களை காப்பாற்ற முடியுமா? என்று கவலை அடைந்த அவர் இன்று வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து 5 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி தண்ணீர் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மயிலாடுதுறை அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே செஞ்சிதேவர் மகன் மனோகரன்(வயது 43), இவர் ரவுடி மணல்மேடு சங்கரின் நண்பர் ஆவார். இவர் மீது ஆத்தூர் கண்ணையன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.

    மேலும் இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி என பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்நிலையில் கடலங்குடி பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை மனோகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 37) இவருக்கும், மாலதி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரகு, மாலதி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரகுவைவிட்டு மாலதி பிரிந்தார். பின்னர் மாலதி, சீர்காழியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரோடு கடந்த சில ஆண்டுகளாக சீர்காழி ரெயிலடி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன்(45) என்பவர் மாலதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியன், சீர்காழி தேர் வடக்கு வீதியில் வாடகை வீட்டில் மாலதி உடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலதி வீடு எடுத்து தனியாக இருந்தபோது அங்கு சென்ற முருகேசன் மீண்டும் மாலதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த மாலதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே முருகேசன், மாலதியின் மீது எரிந்த தீயை அணைக்க முயன்றார். இதில் அவரும் உடல் கருகினார். உடனே அக்கம் பக்கத்தினர் தீக்காயம் அடைந்த மாலதி, முருகேசன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாலதி, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி அடித்துகொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தெட்சணா மூர்த்தி(45). இவர் மும்பையில்  டிரைவர், மற்றும் போர்வெல் வேலை செய்து வருகிறார். இவரது அக்கா ராணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் வசித்து வருகிறார். அவருடைய மகள் நித்தியாவை(32) கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜவகர், சாமு என்ற 2 மகன்களும் சத்யா என்ற 1 மகளும் உள்ளனர்.

    தெட்சணாமூர்த்தி 3 மாதத்திற்கு ஒரு முறை மும்பையிலிருந்து வீட்டிற்கு வந்து செல்வார். இதனிடையே மனைவி நித்தியாவின் நடத்தையில் சந்தேகமடைந்ததால் கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதனால் கடந்த ஆண்டு நித்தியா கனவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். ஓராண்டு கழித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தெட்சணாமூர்த்தி தனது அக்காவீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தெட்சணாமூர்த்தி, மனைவியை கட்டையால் அடித்ததில் தலையில் பலத்த காயமடைந்த நித்தியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்த செம்பனார் கோவில் போலீசார் நித்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து தெட்சணா மூர்த்தி செம்பனார்கோவில் போலீசில் மனைவியை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் அருகே 2 முறை நெல் விதைத்தும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் ஆதனூர் ஊராட்சி அண்டர்காடு கிராமத்தில் வசித்து வந்தவர் ரத்தினவேல்(வயது63). விவசாயி. இவருக்கு சொந்தமாக ஆதனூர் மாரியம்மன்கோவில் அருகே ஒரு ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 2 முறை நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். ஆனால் சரிவர மழை பெய்யாததாலும், வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர் வளராமல் கருகி போய்விட்டன. இதனால் ரத்தினவேல் மனம் உடைந்து காணப்பட்டார். இதுகுறித்து தனது குடும்பத்தினரிடமும் கூறி புலம்பி வந்துள்ளார்.

    இந்தநிலையில் 3-வது முறையாக நெல் நாற்று வாங்கி வந்து சாகுபடி செய்யலாமா? என்ற யோசனையில் ரத்தினவேல் இருந்து வந்தார். இதற்காக வயலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு நேற்று காலை அவர், வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். வயலுக்கு சென்று பார்த்தபோது நெல் சாகுபடி செய்ய முடியவில்லையே என வேதனையில் திடீரென ரத்தினவேல் மயங்கி வயலில் விழுந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரத்தினவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவனிடம் ரத்தினவேல் மகன் மதியழகன் கோரிக்கை மனு அளித்தார்.

    அதில், 2 முறை நேரடி நெல் விதைப்பு செய்தும் பலனின்றி போய்விட்டது. பருவமழை இல்லாததாலும், வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும் நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. விளை நிலம் தரிசாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் எனது தந்தை மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அரசு உதவிகள் கிடைத்தால் எங்களது வாழ்வாதாரம் நிலைக்கும்.

    எனவே அரசு உதவிகளை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இறந்த ரத்தினவேலுக்கு முத்துலட்சுமி(46) என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    டெல்டா மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களில் 4 விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அகணி கிராமத்தில் வசிப்பவர் லோகநாதன் இவரது மகன் ஆனந்தன்(22).இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு அப்பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் நடந்த ஒரு விழாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7வயது சிறுமி தனது பெற்றோருடன் வந்துள்ளார்.அப்போது ஆனந்தன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுத்துரை வழக்குபதிவு செய்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சீர்காழியில் சாலையில் படுத்திருந்த பசுமாடுகள் மீது லோடுவேன் மோதியதில் 2 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே இறந்து போனது.

    சீர்காழி:

    சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி நேற்றிரவு லோடுவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை சீர்காழியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

    சீர்காழி புறவழிச்சாலை வழியாக ரெயில்வே ஸ்டேசனுக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் 7 பசுமாடுகள் படுத்திருந்தது. இதை கவனிக்காமல் வேகமாக வேனை ஓட்டிவந்த மூர்த்தி பசுமாடுகள் மீது மோதினார்.

    இதில் 2 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. மேலும் 5 பசுமாடுகள் படுகாயமடைந்தன.

    மேலும் மாடுகள் மீது மோதிய வேன் நிலைதடுமாறி சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மூர்த்தி காயமடைந்தார். உடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து தகவலறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மயிலாடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மாத்தூர் புத்திரம்திடல் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் திருக்கடையூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.

    நேற்று அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லையாம். இதனால் அவர் வீட்டில் தனியாக இருந்தார். இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சந்திரபோஸ் (23) என்பவர் மாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டாராம்.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பின்னர் வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து சந்திரபோசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×