என் மலர்
செய்திகள்

சுத்தமான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ளது மூவலூர் ஊராட்சி. இங்கு சுமார் 2,500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதிக்கு 7 தரை தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதமாக வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மூவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் காலி குடங்களை வைத்து இருந்தனர். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.






