என் மலர்
செய்திகள்

சீர்காழியில் லோடுவேன் மோதி 2 பசுமாடுகள் பலி
சீர்காழி:
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி நோக்கி நேற்றிரவு லோடுவேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனை சீர்காழியை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.
சீர்காழி புறவழிச்சாலை வழியாக ரெயில்வே ஸ்டேசனுக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் 7 பசுமாடுகள் படுத்திருந்தது. இதை கவனிக்காமல் வேகமாக வேனை ஓட்டிவந்த மூர்த்தி பசுமாடுகள் மீது மோதினார்.
இதில் 2 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. மேலும் 5 பசுமாடுகள் படுகாயமடைந்தன.
மேலும் மாடுகள் மீது மோதிய வேன் நிலைதடுமாறி சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மூர்த்தி காயமடைந்தார். உடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






