என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் சித்தர்புரத்தில் ஒளிலாய சித்தர் பீடம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து யாகம் நடத்தி வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பேட்ரிக்-ஸ்பனி ஜோடி இந்து மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அமெரிக்க ஜோடி திருமணம் செய்து கொள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்திற்கு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் சுவாமிகள் தலைமையில் பேட்ரிக்-ஸ்பனி ஜோடிக்கு இந்து கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதையொட்டி அமெரிக்க ஜோடி பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து அலங்காரம் செய்து கொண்டனர். பின்னர் மணமகன், மணமகள் அழைப்பு, ஹோமம், மணமகனுக்கு பூணூல் அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து மேள- தாளம் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். பின்னர் மணமகள் அம்மி மிதிக்க, அவருக்கு மணமகன் மெட்டி அணிவிக்கும் சடங்கு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அருண் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் செய்து இருந்தனர். அப்போது மணமக்களுக்கு திருமணத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து தம்பதியினர், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளித்து, தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதில் கலந்து கொண்டவர்கள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்து பரிசு பொருட்களை வழங்கி சென்றனர்.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன் மற்றும் போலீசார் கீழ்வேளூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே உள்ள எறும்புகண்ணி கிராமத்தில் விஜயா, தமிழ்குடிமகன் ஆகியோர் சாராயம் விற்றுக்கொண்டு இருந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயா, தமிழ்குடிமகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் கிராமத்தில் பூங்கொடி, பனைமேட்டில் கண்ணகி, தேவூரில் சாரதா, பெருங்கடம்பனூரில் தங்கபாண்டியன், மாதவன், ஆவராணியில் மணிகண்டன், பனைமேடு பகுதியில் வேலாயுதம் ஆகியோர் சாராயம் விற்றுக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணகி உள்பட 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் 9 பேரிடம் இருந்து 1000 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதிரிமங்கலம், திருவாலங்காடு மற்றும் திருவாவடுதுறை ஊராட்சிகளைச் சேர்ந்த 8 கடைகளுக்கு 2 பணியாளர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால் 2 பணியாளர்களும் சுழற்சி முறையில் பணிபுரிவதால், கூட்டுறவு அங்காடியில் வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே பொருட்களை வினியோகம் செய்யும் நிலை உள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களாக மாதிரிமங்கலத்தில் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக்கடைகள் சரிவர திறக்கப்படவில்லை. மேலும் கடந்த 10 நாட்களாக முழுவதுமாக திறக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை வந்த பொதுமக்கள் கடை திறக்கப்படாததால் அதிருப்தி அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த குத்தாலம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் ராகவன், கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் தற்காலிக ஊழியர் ஒருவரை பணியில் அமர்த்தி பொருட்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் பணி மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு ஒரு நாள் பயிற்சி வகுப்பு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசும் போது கூறியதாவது:-
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர்களை நாம் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். ஆசிரியர்கள் புதிய செய்திகளை நன்கறிந்து, அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் சிந்தனைத் திறனை மேம்படுத்த முடியும். கடுகளவு நாம் சொல்லித் தருகிற விஷயங்கள் மாணவர்களிடையே மலையளவு மாற்றத்தை உருவாக்கும்.
வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கும், போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் மாணவர்களைத் தயார் செய்து, அவர்களை நல்லதொரு முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. இளையத் தலைமுறையினரின் எதிர்காலம் ஆசிரியர்களால் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி வகுப்பில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், தேவராஜ், நிர்வாக அலுவலர் ராமராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதி, சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (22) என்பவர் வேலைபார்த்து வந்தார். இவர் தஞ்சாவூரில் ஒரு இளம்பெண்ணை கடத்திய வழக்கில் கைதாகி முன்ஜாமீனில் வெளிவந்தவர். அதுமுதல் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு விஷம் குடித்துவிட்டார். காலையில் தொழிற்சாலை உரிமையாளர் வந்து பார்க்கும் போது ராஜீவ்காந்தி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது சகோதரர் ராகுல்காந்தி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து இரை தேடி கரைக்கு வந்த முதலை அளக்குடி அய்யம்பேட்டை தெருவுக்குள் புகுந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சீர்காழி தாசில்தார் மலர்விழிக்கு தகவல் கொடுத்தனர். அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தார்.
நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது முதலை அங்குள்ள கருவேல் மர காட்டிற்குள் சென்று விட்டது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 1½ மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். அது 5½ அடி நீளம் இருந்தது. பின்னர் முதலை சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊருக்குள் முதலை புகுந்ததால் பொதுமக்கள் பீதியுடன் உள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள குப்பை மேட்டில் தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை 1000-க்கும் மேற்பட்டவை எரிக்கப்பட்டு கிடந்தது.
இதனை அங்கு வந்த சிலர் பார்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இந்த அட்டை ஏன் எரிக்கப்பட்டு உள்ளது என்று வேதனை அடைந்தனர். மேலும் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கான அடையாள அட்டை ஏதேனும் எரிந்தது போக கிடக்கிறதா? என பார்த்து ஒருசிலர் அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய அடையாள அட்டை வழங்காமல் எரிப்பதற்கு என்ன காரணம் யார்? சொல்லி அடையாள அட்டைகள் எரிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உரிய விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல்நிலையத்திற்குட்பட்ட ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது43). இவர் மீது கொலை- கொள்ளை வழக்குகள் உள்ளன. மனோகர் சென்னையில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த கிராமமான ஆத்தூர் வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மண்ணியாற்றங்கரை, கடலங்குடி பஸ்நிறுத்தம் அருகே மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மணல்மேடு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.மேலும் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று மணல்மேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்,சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கடலங்குடி சுக்ராவரம் என்ற இடத்தில் ஒருமோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆத்தூர் பகுதி நடுத்தெருவை சேர்ந்த மணி மகன் சின்னப்பா(28), கோவிந்தசாமி மகன் மாணிக்கம்(36). மரத்துறை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரவணகுமார்(30) என்பதும், கடந்த 7-ந்தேதி ரவுடி மனோகரனை வெட்டி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஓப்படைத்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி அவர்கள் 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் சுமன், பாலகிருஷ்ணன், சுரேந்தர், ராஜா ஆகிய மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் (30). இவர் தனது மோட்டார் சைக்கிளை செம்போடை கடைவீதியில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லையாம்.
இது குறித்து விசாரித்த போது இரண்டு பேர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து சென்ற விவரம் அறிந்து அவர்கள் சென்ற பாதையில் பொதுமக்களுடன் தேடி சென்றார். அப்போது ஆயக்காரன்புலம் பெரியக்குத்தகை பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் சரவணன் (31), தனபால் மகன் சாமிநாதன் (32) ஆகிய இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சீர்காழி:
நாகையிலிருந்து சீர்காழி நோக்கி சென்ற அரசு பஸ்சும், சென்னையிலிருந்து நாகப்பட்டிணம் நோக்கி சென்ற மினி லாரியும் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 வாகனங்களின் முகப்புகளும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் கிடாமங்களத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பிரபு (வயது40), சென்னை புழலை சேர்ந்த மினி லாரி டிரைவர் ரவிக்குமார்(35), சிதம்பரத்தை சேர்ந்த கிளீனர் தங்கமணி(30) பஸ்சில் பயணம் செய்த 7 பேர் உள்ளிட்ட 12பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பரங்கி நல்லூரை சேர்ந்தவர் ஜெயபால் (60). இவர் தனது மகள் திருமணத்திற்காக நகை வாங்கி வைத்திருந்தார்.
அதனை அடகு வைத்து தனது 1½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்தார். இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் ஜெயபால் மன வருத்தத்தில் இருந்தார். நகைகளை மீட்க முடியாதே என்ற கவலை அவரை வாட்டியது.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் வயலுக்கு சென்றார். கருகிய பயிர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென மயங்கி விழுந்த அவர் பரிதாபமாக இறந்தார். இன்று காலை வரை வீடு திரும்பாத அவரை தேடி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வயலுக்கு சென்றனர். அங்கு ஜெயபால் இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர். விவசாயி ஜெயபாலுக்கு மாலா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் மேல் கரையில் குடிசை வீடுகள் உள்ளது. இங்கு 16 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு 11.50 மணியளவில் பாக்கியராஜ் என்பவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று திருமாயி, சாந்தி, சுபா, தமிழ் செல்வி ஆகியோர் வீட்டிற்கும் பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முகுந்தன், நிலைய அதிகாரி மொகிசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
மேலும் கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.






