என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே நியாயவிலைக்கடையை பொதுமக்கள் முற்றுகை
குத்தாலம்:
குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடையில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதிரிமங்கலம், திருவாலங்காடு மற்றும் திருவாவடுதுறை ஊராட்சிகளைச் சேர்ந்த 8 கடைகளுக்கு 2 பணியாளர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இதனால் 2 பணியாளர்களும் சுழற்சி முறையில் பணிபுரிவதால், கூட்டுறவு அங்காடியில் வாரத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே பொருட்களை வினியோகம் செய்யும் நிலை உள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களாக மாதிரிமங்கலத்தில் செயல்படும் கூட்டுறவு நியாய விலைக்கடைகள் சரிவர திறக்கப்படவில்லை. மேலும் கடந்த 10 நாட்களாக முழுவதுமாக திறக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை வந்த பொதுமக்கள் கடை திறக்கப்படாததால் அதிருப்தி அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த குத்தாலம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூட்டுறவு சங்க சார்பதிவாளர் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் ராகவன், கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் தற்காலிக ஊழியர் ஒருவரை பணியில் அமர்த்தி பொருட்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.






