என் மலர்
செய்திகள்

நாகையில் தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சாம்பல்
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் மேல் கரையில் குடிசை வீடுகள் உள்ளது. இங்கு 16 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு 11.50 மணியளவில் பாக்கியராஜ் என்பவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று திருமாயி, சாந்தி, சுபா, தமிழ் செல்வி ஆகியோர் வீட்டிற்கும் பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முகுந்தன், நிலைய அதிகாரி மொகிசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
மேலும் கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.






