என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் மூதாட்டியை ஏமாற்றி 2 பவுன் நகை அபேஸ்
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது73).
கடந்த 7-ந்தேதி காலை வீட்டு வாசலை பஞ்சவர்ணம் பெருக்கி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்து அவர் அருகில் நிறுத்தி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
அப்போது பஞ்சவர்ணம் கழுத்தில் அணிந்திருந்த செயின் நன்றாக இருப்பதாகவும், இதுபோல் தனது தாயாருக்கும் வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனது கழுத்தில் கிடந்த செயினை அவரிடம் கழற்றி கொடுத்துவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் நகையை கழற்ற சொல்லி வாங்கி பார்த்துள்ளார். பின்னர் குடிப்பதற்கு அந்த வாலிபர் தண்ணீர் கேட்டதால் அவர் வீட்டிற்குள் சென்றார். அப்போது 2 பவுன் செயினுடன் மோட்டார் சைக்கிளில் வாலிபர் தப்பி சென்றுள்ளார்.
தண்ணீர் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது அவரை காணாததால் பஞ்சவர்ணம் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அவரது மகன் காளிதாஸ் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவரும் மோட்டார் சைக்கிளில் மர்மநபரை விரட்டி சென்றும் பிடிக்கமுடியவில்லை.
பின்னர் வந்து பஞ்சவர்ணம் கையில் இருந்த செயினை பார்த்தபோது அது கவரிங் செயின் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் அவர்கள் புகார் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.






