என் மலர்
செய்திகள்

ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 37) இவருக்கும், மாலதி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரகு, மாலதி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரகுவைவிட்டு மாலதி பிரிந்தார். பின்னர் மாலதி, சீர்காழியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரோடு கடந்த சில ஆண்டுகளாக சீர்காழி ரெயிலடி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன்(45) என்பவர் மாலதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுப்பிரமணியன், சீர்காழி தேர் வடக்கு வீதியில் வாடகை வீட்டில் மாலதி உடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலதி வீடு எடுத்து தனியாக இருந்தபோது அங்கு சென்ற முருகேசன் மீண்டும் மாலதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த மாலதி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனே முருகேசன், மாலதியின் மீது எரிந்த தீயை அணைக்க முயன்றார். இதில் அவரும் உடல் கருகினார். உடனே அக்கம் பக்கத்தினர் தீக்காயம் அடைந்த மாலதி, முருகேசன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாலதி, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






