என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நிவாரண உதவித்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவற்றை வழங்கிய மாவட்ட கலெக்டர் பேசினார்.

    அப்போது அவர் கூறு்கையில், கொரோனா தொற்று நிவாரண நிதி 2-வது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 72 ஆயிரத்து 18 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரே நாளில் நிவாரணம் வழங்க முடியாது என்ற காரணத்தினால் டோக்கன் வழங்கப்பட்டு பயனாளிகளுக்கு படிப்படியாக நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அவசரப்படாமல் பொறுமை காத்து நிவாரண பொருட்களை பெற்று செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளில் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் பாலாஜி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கொள்ளிடம் அருகே சோளம், பருத்தி பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் வில்லவந்தான்கட்டளை, முக்காணி, கீழமாத்தூர் ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு சொந்தமான 20 ஏக்கர் சோளப்பயிரை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. சோள பயிரை ஒட்டி பயிரிடப்பட்டுள்ள பருத்தி பயிரையும் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    இதுகுறித்து எருக்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ‘எருக்கூர் அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்படாத காகித ஆலை கட்டிடம் ஒன்று உள்ளது. அதனை ஒட்டி அடர்ந்த காடு உள்ளது.

    அங்கு கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் தங்கி உள்ளன. அவை இரவு நேரங்களில் பருத்தி மற்றும் சோளப்பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

    இரவு நேரத்தில் அவற்றை விரட்டி அடிப்பதற்கும் சிரமமாக உள்ளது. காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் புகுவதை தடுத்து அவற்றை வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
    மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கடலோர காவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொறையாறு:

    தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவர் காலனியை சேர்ந்த வீரகாளி என்பவர் மகன் தீபக் (வயது 20). இவர் சக மீனவர்களான சின்னசாமி, சுந்தரகுமார் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் சந்திரப்பாடியில் இருந்து மத்தி மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில், கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, திடீரென தீபக்கை காணாது மற்ற மீனவர்கள் திடுக்கிட்டனர். இதையடுத்து கடலில் தேடி பார்த்தனர் ஆனால் தீபக்கை காணவில்லை. தீபக் மாயமானதால் தரங்கம்பாடி கடலோர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் சந்திரபாடி மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர். நேற்று அதிகாலை தரங்கம்பாடி அருகே மீனவர் தீபக்கின் உடல் நடுக்கடலில் மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரப்பாடியில் மீனவ இளைஞர் கடலில் மூழ்கி இறந்தது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    எருக்கூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்கலன்களை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வரும்போது காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. விவசாயிகள் எடுத்து வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும்.

    எருக்கூர் நவீன அரிசி ஆலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக தொடங்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் இதுவரையில் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய முறையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எருக்கூர் நவீன அரிசி ஆலையில் இருந்து கரித்துகள்கள் வெளியேறுவதால் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளில் படிவதுடன் சுற்றுப்புற சூழ்நிலையை மாசு படுத்துவதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கரித்துகள் வெளியே செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். முதல் -அமைச்சர் சமீபத்தில் ஏழு திட்டங்களுக்காக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது உணவு பொருள் வழங்கல் துறைக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளார். இதன்மூலம் ரேஷன் கடைகளில் நுகர்வோர்களுக்கு தரமான அரிசி சரியான எடையில் வழங்கப்படும் என்றார்.

    உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஆனந்தகுமார், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சண்முகநாதன், மயிலாடுதுறை உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி தாசில்தார் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    மதுக்கடைகளை மூடக்கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் பா.ம.க. சார்பில் மதுக்கடைகளை மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கமல்ராஜா தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஞானமூர்த்தி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அமைப்பு துணை செயலாளர் காசி பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பாபு, குருரஞ்சித், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மாநில துணை தலைவர் தங்க. அய்யாசாமி தலைமையில் அவரது வீட்டின் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேலும் நல்லத்துக்குடி பகுதியில் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையிலும், சேத்திரபாலபுரம் கிராமத்தில் மாநில இளைஞரணி துணை தலைவர் விமல் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல முக்கிய நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் முருகவேல் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களை பாதிக்கும் அரசு மதுக்கடைகளை திறக்கக் கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோல சீர்காழி புளிச்சகாடு கிராமத்தில் மாவட்ட துணைத் தலைவர் என்.ஆர். பாலகிருஷ்ணன் தலைமையிலும், சீர்காழியில் நகர செயலாளர் சின்னையன் தலைமையிலும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தில்முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேரூர் கழக செயலாளர் தில்லை கண்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செம்மங்குடி கிராமத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    குத்தாலம் ஒன்றியம் சேத்திரபாலபுரம் ஊராட்சியில் பா.ம.க. மாநில இளைஞரணி துணை தலைவர் விமல் தலைமையில் கொரோனா காலகட்டத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சமூக இடைவெளியை பின்பற்றி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மதுக்கடைகளை மூடக்கோரி கையில் கருப்புக்கொடிகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில சட்ட பாதுகாப்பு குழு இணைச் செயலாளர் பாரி, கிளை செயலாளர்கள் தமிழரசன், சதீஷ், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல குத்தாலம் பேரூரில் பேரூர் செயலாளர் வக்கீல் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், தொகுதி தலைவர் சந்தானம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கத்தரிக்காய்கள் தோட்டத்திலேயே அழுகி வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    திருவெண்காடு:

    அன்றாட உணவில் முக்கிய இடம்பிடிக்கும் காய்கறிகளில் ஒன்றாக கத்தரிக்காய் விளங்குகிறது. கத்தரிக்காயில் மலச்சிக்கலை போக்குவது, இதயத்தை பலப்படுத்துவது, ரத்த அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. கத்தரிக்காய் பயிரிட தை மற்றும் ஆடி பட்டங்கள் உகந்ததாக கருதப்படுகிறது. சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி, செம்பதனிருப்பு, அல்லவிளாகம், ராதாநல்லூர், இளையமதுகூடம், புதுத்துறை, பட்டவளாகம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் கத்தரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு தை மாத பட்டத்தில் பயிரிடப்பட்ட கத்தரிக்காய்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கத்தரிக்காய் விற்பனை முற்றிலும் பதிக்கப்பட்டு விட்டது. ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற கத்தரிக்காயை ஒரு கிலோ ரூ.5-க்கு கூட வாங்க ஆள் இல்லை என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக பல விவசாயிகள் கத்தரிக்காய் அறுவடையை நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக தோட்டத்திலேயே கத்தரிக்காய்கள் அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கூறுகையில், ‘நல்ல விலை கிடைக்கும் என்று கத்தரிக்காயை அதிகமாக சாகுபடி செய்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கால் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் கத்தரிக்காயை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுவிட்டோம்.

    இதனால் காய்கள் செடியிலேயே அழுகி கிடக்கிறது. எனவே மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து தோட்டக்கலைத்துறை மூலம் கத்தரிக்காயை கொள்முதல் செய்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் மெய்யநாதன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் லலிதா வரவேற்றார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அலையின் தாக்கத்தால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மைய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் உட்பட 40 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.

    தொடர்ந்து கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து விசாரித்தார். மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் பார்வையிட்டார். இதை தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை மாற்றி காண்பிக்க வேண்டும் என அலுவலர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ., க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் டாக்டர் குருநாதன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறைக்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை ரெயிலடி மாமரத்து மேடை பகுதியில் கடந்த இயங்கி வந்த நகராட்சி சித்த மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. தற்போது அந்த மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தின் பழுதை நீக்கி உடனே சித்த மருத்துவமனை தொடங்க வேண்டும். அதேபோல மயிலாடுதுறை, தரங்கம்பாடி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையும் மூடப்பட்டுவிட்டது. இதனையும் சீரமைத்து மீண்டும் மகப்பேறு மருத்துவமனை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    குத்தாலம் அருகே வாய்க்கால் பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சிக்கி பலியானான்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நச்சினார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் தீபக் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன், அந்த பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் சிற்றாறு வடிகால் வாய்க்காலில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் தீபக் விளையாடி போது மண் சரிவு ஏற்பட்டு சிறுவன் மண்ணில் சிக்கி கொண்டான்.

    அவன் போட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று தீபக்கை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் தீபக் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    வாய்க்காலில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சிறுவனின் தந்தை செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும், மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் தான் இதுவரை இயங்கி வருகிறது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டத்தை பிரித்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 28-ந் தேதி உதயமானது. மயிலாடுதுறை மாவட்டத்துக்கு என தனியாக கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும், மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் தான் இதுவரை இயங்கி வருகிறது. மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டிடத்தின் மாடியிலும் தற்போது இயங்கி வருகின்றன.

    மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட உடன் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இடங்களை வழங்குவதாக தருமபுரம் ஆதீனம் ஒப்புதல் அளித்தார். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    சட்டசபை தேர்தல் வந்ததால் கலெக்டர் அலுவலகத்துக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மயிலாடுதுறையில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கான கட்டுமான பணிகளுக்காக திருச்சி பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு சார்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் டெண்டரை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான ஒப்பந்த படிவங்கள் வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 22-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், பணிகளை 18 மாதங்களுக்குள் (1½ ஆண்டுகள்) முடிக்க வேண்டும் என்றும் அந்த டெண்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை 1½ ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிட்டு, டெண்டர் வெளியிட்டு இருப்பது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
    கொரோனா காலகட்டத்தில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இன்று (திங்கட்கிழமை) முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகளின் வாசலில் நின்று ஆர்ப்பாட்டத்்தில் ஈடுபட்டனர்.. மயிலாடுதுறை கீழே நாஞ்சில் நாடு பகுதியில் பா.ஜனதாவின் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில செயலாளர் நாஞ்சில் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை உடனே மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் முத்துலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல நகர பா.ஜ.க. அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மோடி கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசு தலைமை வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் முட்டம் செந்தில், மாவட்ட இளைஞரணி தலைவர் பாரதி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல இடங்களில் பா.ஜனதாவினர் தங்கள் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சீர்காழியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தமிழக அரசு மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி நகர தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் இராம.சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார்.

    நகர பொதுச் செயலாளர் நடராஜன், இளைஞரணி பொறுப்பாளர்கள் சுசீந்திரன், புவனேஸ்வரன், அமைப்பு சாரா பிரிவு பொறுப்பாளர் அன்புசெல்வன், தொழில்நுட்ப பிரிவு நகர தலைவர் மணிமாறன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் தீபா மற்றும் மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் அருள்ராஜன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் துரைசெழியன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் திருவெண்காடு, மங்கைமடம், திருநகரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமம் காந்திநகரை சேர்ந்த ராமசாமி மகள் தீபா (வயது 25). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீபா, தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் இருவரும் தீபாவிடம் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் தீபாவை திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தீபாவின் தாய் கலாவதி (50) கொடுத்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பாமா(25), பிரபுதாஸ் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அண்ணாதுரை (50) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இவரிடம் கடந்த 2010-2018 வரை அந்த பள்ளியில் படித்த ஒரு மாணவி உடற்கல்வி பயின்ற போது உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறி, பள்ளிப்படிப்பை முடித்து தற்போது கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் 21 வயது மாணவி போலீசில் புகார் அளித்தார்.

    மேலும் 2008, 2016-க்கு முன்பு படித்த 2 மாணவிகள் தங்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் அண்ணாதுரையை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

    ×