என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கடந்த மாதம் 28-ந் தேதி வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.
    • பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 15, 16-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக்கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 நியாய விலைக் கடைகளில் உள்ள 5 லட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்கள் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 584 கடைகளில் உள்ள 2 லட்சத்து 98 ஆயிரத்து 164 நபர்களுக்கு (முதல் நாள் ஒவ்வொரு பதிவு மையத்திலும் 60 நபர்களும், இரண்டாவது நாள் முதல் 80 நபர்கள் வீதம்) தேதி குறிப்பிட்டு விண்ணப்பங்கள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு 2 லட்சத்து 74 ஆயிரத்து 853 நபர்களுக்கு ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, 823 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் கடந்த மாதம் 28-ந் தேதி வரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 423 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

    மேலும், கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நேற்று வரை டோக்கன் வழங்கப்பட்ட போது வீடு பூட்டி இருப்பதாலும், வெளியூர் சென்றுவிட்டதாலும் ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பங்கள் பெறாத 23 ஆயிரத்து 311 நபர்களுக்கு மீண்டும் டோக்கன் வழங்கப்படும்.

    மேற்கண்ட உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாதவர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு நாட்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 510 நியாய விலைக் கடைகளில் உள்ள 2 லட்சத்து 66 ஆயிரத்து 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வரை டோக்கன் வழங்கப்பட்டு, 774 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் வருகிற 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விண்ணப்பதிவு செய்ய திட்டமிட ப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டத்தில் உரிய தேதிகளில் பதிவு செய்ய இயலாதவர்கள் வருகிற 15-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்தார்.

    • ஈச்சங்காடு-கவுண்டனூர் கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மாது (வயது33). இவர் இருசக்கர வாகனத்தில் ஈச்சங்காடு-கவுண்டனூர் கூட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனயைில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாது உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார்.
    • சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேல்பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சந்தூர் கூட்ரோடு இ.பி. டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சையது அமீர்ஜான் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி உள்ளார்.
    • கட்டிடத்தை நகர்த்த 12 தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஜாக்கிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள அந்தேதேவனப்பள்ளி கிராமத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

    சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் அளவீடுகள் மேற்கொண்டு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், கடைகள் மற்றும் வீடுகளை அதன் உரிமையாளர்கள் தாமாக அகற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அந்த கிராமத்தில் சாலையோரம் இருந்த கடைகள் கட்டிடங்கள் வீடுகள் ஆகியவை உரிமையாளர்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையது அமீர்ஜான் (வயது52). இவர் அந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். சாலையோரத்தில் இவருக்கு சொந்தமான ஒரு கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சையது அமீர்ஜான் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி உள்ளார். கீழ்த்தளம் மற்றும் இரண்டு மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் மொத்தம் 6 கடைகள் 2 வீடுகள் உள்ளது.

    800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் முக்கால் பாகம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடமாகும், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் அவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க மனம் இல்லாமல் அவர் இருந்துள்ளார்.

    இதனையடுத்து சையத் அமீர்ஜான் தனது நண்பர்கள் மூலம் கட்டடத்தை ஜாக்கிகள் மூலம் நகர்த்தும் தொழில்நுட்பத்தை அறிந்து தனது கட்டிடத்தையும் அந்த கட்டிடத்திற்கு பின்புறம் உள்ள தனக்கு சொந்தமான இடத்திற்கு நகர்த்த திட்டமிட்டார்.

    இதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கட்டிடம் நகர்த்தும் ஒரு குழுவிடம் அவர் ஆன்லைன் மூலம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டிடத்தை நகர்த்துவதற்கு அந்த குழுவுக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளார்.

    கட்டிடத்தை நகர்த்த 12 தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஜாக்கிகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 300 முதல் 350 டன் எடையுள்ள இந்த கட்டிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் கட்டிடத்தின் பின்புறம் உள்ள இடத்திற்கு 25 அடி தூரம் நகர்த்த குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக கட்டிடத்தின் அடிப்பாகத்தில் துளையிட்டு 300 ஜாக்கிகளை அமைக்கும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். கட்டிடத்தை நகர்த்தி வைக்க கட்டிடத்தின் பின்புறம் 1500 சதுர அடி நிலத்தில் சிமெண்ட் கான்கிரீட் அடித்தளம் போடப்பட்டு தயாராக உள்ளது. இந்த பணிகளுக்காக அமீர்ஜான் நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளார்.

    • போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
    • கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலையூர் கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய இர்பான் நேற்று மாலை பாஞ்சாலியூர் அருகே செயல்படும் அரசு மதுபான கடை வழியாக சென்றுள்ளார்.

    அப்போது அவ்வழியாக மது போதையில் வந்த மர்மநபர் சிறுவன் இர்பானிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கி வருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு சிறுவன் இர்பான் மறுத்து சிகரெட் வாங்க செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மர்மநபர் இர்பானை தாக்கியுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தை கொண்டு இர்பான் மீது மோதி உடலில் ஏற்றி இறக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த இர்பானை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இர்பான் உயிரிழந்தான்.

    இதனால் கோபம் அடைந்த இர்பான் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பாஞ்சாலியூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அரசு மதுபான கடை இங்கு செயல்படக்கூடாது. வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மதுபோதையில் சிறுவனை தாக்கி இரு சக்கர வாகனத்தை மேலே ஏற்றி கொலை செய்த மர்மநபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு அவதானப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை ஓட்டி செல்லும் டிரைவர்கள் பலரும் இங்கு வாகனங்களை நிறுத்தி சாமியை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன், தக்கார் பிரபு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் மேற்பார்வையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 30-க்கும் மேற்பட்டோர் உண்டியல்களை பிரித்து பணத்தை எண்ணினார்கள்.

    இது குறித்து அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அவதானப்பட்டி கோவிலில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் கோவில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதற்கு முன்னதாக கோவில் உண்டியல் திறக்கப்பட்ட காணிக்கைகள் எண்ணப்படும். கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவில் உண்டியல் திறக்கப்படவில்லை. தற்போது திருவிழா நடைபெற உள்ளதால், கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதன்படி, உண்டியலில் ரூ-.39 லட்சத்து 19 ஆயிரத்து 976 ரொக்கம், 96 கிராம் தங்கம், 170 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    உண்டியல் காணிக்கை எண்ணியதை முன்னிட்டு கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில், கிருஷ்ணகிரி அணை போலீஸார் 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஆறுமுகம் (55), அரவிந்த் (28) மற்றும் ஆறுமுகம் மனைவி பத்தாமணி (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • பொது வழித்தட பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏரியூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் சதீஷ்குமார் (வயது28) விவசாயி. இவரது குடும்பத்திற்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவரான ஆறுமுகம் என்பவரது குடும்பத்திற்கும் கடந்த 15 ஆண்டுகளாக பொது வழித்தட பிரச்சனை இருந்து வந்தது.

    இந்நிலையில், நேற்று மாலை சதீஷ்குமார் தனது நிலத்தில் இருந்த பொழுது, பக்கத்து நிலத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்தும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனைப் பார்த்த சதீஷ்குமாரின் சகோதரர் அய்யந்துரை தட்டி கேட்டதாகவும் இதனால் ஆறுமுகம் தனது மகன் அரவிந்துடன் சேர்ந்து அய்யந்துரையையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் இதனை தடுக்க சென்ற சதீஷ்குமாரின் தாயார் மற்றும் அண்ணியையும் ஆறுமுகத்தின் மனைவி தாக்கியதாகவும், ஆறுமுகம் மற்றும் அரவிந்த் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த சதீஷ்குமார் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆறுமுகம் (55), அரவிந்த் (28) மற்றும் ஆறுமுகம் மனைவி பத்தாமணி (50) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோன்று ஆறுமுகம் மனைவி பத்தாமணி தன்னையும் தனது கணவரையும், அய்யந்துரை, சதீஷ்குமார், அருள், பெருமா, சுசீலா, சரிதா ஆகிய ஆறு பேரும் சேர்ந்து தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் இவர்கள் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பொது வழித்தட பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில், இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிஷினை இயக்கியபோது திடீரென்று அதில் கோகுல் சிக்கி கொண்டார்.
    • அடிபட்டு காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கூச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கோகுல் (வயது29). இவருக்கு திருமணமாகி வைஷாலி என்ற மனைவி உள்ளார்.

    இவர் ஓசூர் அரசனட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் அரசனட்டியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்ற கோகுல், அங்குள்ள ஒரு கட்டிங் மிசின் பழுதாகி நீண்டநாட்களாக செயல்படாமல் கிடந்ததை பார்வையிட சென்றார். அப்போது அந்த மிஷினை இயக்கியபோது திடீரென்று அதில் கோகுல் சிக்கி கொண்டார். இதில் அடிபட்டு காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து வைஷாலி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் தனது கணவருக்கு சாவுக்கு காரணமானவர்கள் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் அன்பழகன், மேலாளர் ஜெகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1கோடியே 16 லட்சத்து மதிப்பிலான கனிமங்கள் மற்றும் குவாரிகள் மேம்பாட்டு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூஜைக்கு பின்பு அமைச்சர் சின்னபேட்டுதானப் பள்ளியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சூளகிரி,

    வேப்பனப் பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சிக்கு அரசுதிட்ட பணியை உணவு துறை மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். அவரை சூளகிரி உத்தனப்பள்ளி நுழைவு சாலையில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பூங்கொத்துமாலை பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேப்பனஅள்ளியை அடுத்த துப்பு காணப்பள்ளி ஊராட்சி, சின்னபேட்டு காணப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.1கோடியே 16 லட்சத்து மதிப்பிலான கனிமங்கள் மற்றும் குவாரிகள் மேம்பாட்டு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் உணவு மற்றும் உணவுப் பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துப்பு காணப்பள்ளிஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சினிவாசன், ஷேக் ரஷீத், பாக்கியராஜ், வீராரெட்டி, சுகுகுமார், பி.டி.ஓ. விமல் ரவிக்குமார், டி.எஸ்.பி. முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    பூஜைக்கு பின்பு அமைச்சர் சின்னபேட்டுதானப் பள்ளியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்பு மாதர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என சங்க நிர்வாகி சரஸ்வதி மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    • பெண்கள் வீடுகளில் இருந்து கூழைக் கொண்டு வந்து மாரியம்மன் கோயிலில் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை துளுக்காணி மாரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வீடுகளில் இருந்து கூழைக் கொண்டு வந்து மாரியம்மன் கோயிலில் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதையொட்டி துளுக்காணி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல், புதுப்பேட்டை ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கூழ் ஊற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். 

    • மேலும் இவர்களே போலியாக டிக்கெட்டை அச்சடித்து வேறு ஒருவருக்கு பணம் விழுந்து விட்டது. உங்களுக்கு பணம் விழவில்லை.
    • நீங்கள் நாளை டிக்கெட் வாங்கினால் அதில் கட்டாயம் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி எங்களிடம் லாட்டரி டிக்கெட் விற்று விடுகின்றனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து ஏராளமானோர் தங்கள் பிழைப்புக்காக காவேரிப்பட்டினம் வந்து அங்கிருந்து வெளியூருக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் காவேரிப்பட்டணம் வருபவர்கள் ஆங்காங்கே உள்ள டீக்கடைகளில் டீ குடிக்கின்றனர். அப்பொழுது அங்கு வரும் லாட்டரி டிக்கெட் விற்பனையாளர்கள் அதிகாலை இருந்தே தங்கள் லாட்டரி டிக்கெட் விற்பனையை டீக்கடையில் இருந்து தொடங்குகின்றனர்.

    பின்பு அவர்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று லாட்டரி டிக்கெட் விற்கின்றனர். மேலும் தற்பொழுது தகவல் தொழில்நுட்ப வசதி அதிகம் உள்ளதால் சிலர் லாட்டரி டிக்கெட் விற்பவர்களிடம் போன் மூலமாகவே தகவல் தெரிவித்து அவர்களுக்கு பிடித்த எண்களை குறிப்பிட்டு அந்த எண்களில் உள்ள லாட்டரி டிக்கெட்டை தனியாக எடுத்து வைக்க சொல்கி ன்றனர்.

    அவர்க ளுக்கு கூகுள்- பே , பேடிஎம் மூலமாக லாட்டரி டிக்கெட் விற்பவர்களுக்கு பணத்தை செலுத்தி விடுகின்றனர். இதுகுறித்து லாட்டரி டிக்கெட்டில் பணம் இழந்தவர்கள் கூறும் பொழுது நாங்கள் சும்மா இருந்தாலும் லாட்டரி டிக்கெட் விற்பவர்கள் எங்களை தொடர்பு கொண்டு நச்சரித்து லாட்டரி டிக்கெட் வாங்க வைத்து விடுகின்றனர்.

    நாங்களும் ஏதாவது ஒரு நாள் பரிசு விழும் என்று லாட்டரி டிக்கெட் வாங்குகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பெரிய அளவில் பணம் ஏதும் விழவில்லை.

    மேலும் இவர்களே போலியாக டிக்கெட்டை அச்சடித்து வேறு ஒருவருக்கு பணம் விழுந்து விட்டது. உங்களுக்கு பணம் விழவில்லை.

    நீங்கள் நாளை டிக்கெட் வாங்கினால் அதில் கட்டாயம் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி எங்களிடம் லாட்டரி டிக்கெட் விற்று விடுகின்றனர். இது குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் குறிப்பாக பஸ் நிலையம், கொசமேடு, பாலக்கோடு கூட்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் லாட்டரி டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்வைிடுத்துள்ளனர்.

    • ஆட்சி பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தியும் இந்த கண்டன ஆருப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் பேசியதாவது:-

    முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோட நாடு எஸ்டேட்டில் மத்திய அரசு அனுமதியோடு, 24 மணி நேரமும் தடையில்லா மின்வசதி வாங்கப்பட்டது. ஆனால் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தபோது, மின்சாரம் எப்படி துண்டிக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட் காவலாளி உள்பட அடுத்தடுத்து, 5 கொலைகள் நடந்துள்ளது.

    தேர்தல் நேரத்தில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தி.மு.க. பதவியேற்ற, 90 நாட்களில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என கூறினார். ஆட்சி பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீராமுலு, அ.ம.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு, மத்திய மாவட்ட செயலாளர் அறிவழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார், ஷாபுதீன், வக்கீல் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×