என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் அருகே உள்ள பெரியே பேளகொண்டபள்ளியில் ஸ்ரீ ஆதி நாராணயசாமி கோவிலில் தேர்த்திருவிழா 75 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடந்தது.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பெரிய பேளகொண்டபள்ளியில், மிகவும் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதி நாராயணசாமி கோவில் உள்ளது. 

    இந்த கோவிலில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தேர்த் திருவிழா நடந்தது. பின்னர் சில காரணங்களுக்காக திருவிழா நின்றுபோனது. 

    இந்தநிலையில் கிராம பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து பேசி, மீண்டும் தேர்த் திருவிழாவை நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

    இதையடுத்து, நேற்று தேரோட்ட விழா, சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி, ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் உருவாக்கப் ணபட்டு, அதில் உற்சவமூர்த்தியை வைத்து, தேர் இழுத்து செல்லப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகள், கடந்த திங்கட்கிழமை (21-ந்தேதி) கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து சாமி வீதி உலா உற்சவமும் நடந்தது. 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று நடந்தது. சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுக்கு பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து, “கோவிந்தா, கோவிந்தா” என்ற பக்திகோஷத்துடன் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர்.

    விழாவையொட்டி, கிராமத்தின் பல்வேறு இடங்களில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    விழாவில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், மற்றும் பிருந்தாவனா கல்விக்குழும தலைவர் பி.எல்.சேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சந்திரப்பா, சீனிவாசன், பூனப்பள்ளி தி.மு.க. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா, எடப்பள்ளி பிரகாஷ், ராமச்சந்திரன், எச்.என்.ரமேஷ், ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், சுற்றுவட்டாரத்திலிருந்தும், அத்திப்பள்ளி,ஆனேக்கல், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி மத்திகிரி  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (புதன்கிழமை) பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உலக வனநாள் விழா கொண்டாடப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தேன்கனிக் கோட்டை வனச்சரகம் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
     
    வனசரக அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அன்பரசு, ஹரிஹரன், அழகு, விஸ்வநாத், ஆகியோர் கலந்து கொண்டு ஆலமரம், அரசு, அத்தி, வேம்பு, நாவல் போன்ற மரக்கன்றுகளை நடவு செய்தனர். 

    தலைமை செவிலியர் சாந்தி மற்றும் வனவர்கள் விஜய் முருகன், ஆனந்த் மற்றும் வனக்காப்பாளர், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே இன்றுகாலை பால்வண்டி மோதி குழந்தை பரிதாபமாக பலியானது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பந்தேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது25). இவர்  கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேகவர்த்தினி என்கிற 1 வயது குழந்தை உள்ளன.

     இந்த நிலையில் இன்று காலை மேகவர்த்தினி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பால் வண்டியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதால் குழந்தை மீது  எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே குழந்தையை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு  எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து காவேரிப் பட்டணம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அறிவழகன்  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகோஜனஹள்ளி பேராட்சியில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கெல மங்கலம், காவேரிப்பட்டிணம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளது. 

    ஊராட்சிகளில் செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், இதுநாள் வரை பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் மட்டும் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. 

    நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் இத்திட்டம் 1942 பயனாளிகள் தேர்வு செய்யப் பட்டு, 1375 பயனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தட்டக்கல் கிராமத்தில் கவுண்டன்குட்டை ஏரியிலிருந்து செல்லும் உபரிநீர் கால்வாயில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பூஜை போட்டு வேலையை துவங்கினர்.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், பேரூராட்சியில் இருக்கும் எங்களுக்கு இதுநாள் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது. தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனபள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை கொள்ளை போனது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனபள்ளி வேலன்நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி சாலினி (வயது30). இவர் கடந்த 21ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க சென்றுள்ளனர். 

    பின்னர் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது. 

    இது குறித்து மகாராஜாகடை போலீசில் புகார் கொடுத் தார். அந்த புகாரின் பேரில் சப்&இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். 

    அப்போது மர்ம நபர்கள் வீட்டை வீட்டு வெளியே செல் வதை நோட்ட மிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெண் மாயமானார்.
    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள மேலுமலை சாமல்பள்ளம் பகுதியை  சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மனைவி தனபிரியா. 

    இவர்கள் இருவரும் கடந்த 22ந்தேதி அன்று கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு டிப்பாட்மெண்ட் ஷோரூமிற்கு சென்றுள்ளனர். அங்கு திடீரென தனபிரியா மாயமானார். இதனால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து வசந்தகுமார் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தனபிரியாவை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 தொழிலாளர்கள் இறந்தனர்.

    காவேரிப்பட்டிணம்:

    திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது42). கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை எம்.டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி (43). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள ஒரு ஜூஸ் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை செந்தில், ராஜசேகரரெட்டி ஆகியோர் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டினம் நோக்கி வேலைக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் சர்வீஸ் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் செந்தில், ராஜசேகர் ரெட்டி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரம் அவர்களின் தலையில் ஏறி இறங்கியது.

    இதில் மூளை சிதறி செந்தில், ராஜசேகர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவேரிப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    விபத்தில் பலியான செந்தில், ராஜசேகர ரெட்டி ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் காவேரிப்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள முகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி வயது (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது சித்தப்பா மற்றும் தாயிடம் பேசி கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த அணில் வயது (26) மற்றும் முருகேஷ், வயது (47) ஆகியோர் ரவியிடம் தகராறு செய்து உருட்டுக்கட்டை மற்றும் மண்வெட்டியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த ரவி ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    இது குறித்து ரவி கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.  அந்த புகாரின் பேரில்  அணில் மற்றும் முருகேஷ் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்தார். அதேபோல் அணில் உறவினரான (16) வயது சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் ரவி மற்றும் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஆட்டுக்காரன் கொட்டாய் நரிமேட்டை சேர்ந்தவர் ரவி. இவர் டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

    இந்த நிலையில் நேற்று காலை ரவி செங்கல் பாரம் ஏற்ற காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பரம் என்ற கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். 

    அப்போது உடன் நரிமேட்டை சார்ந்த கோவிந்தராஜ் என்பவரும் டிராக்டரில் இருந்தார். குட்டி கவுண்டனூர் பிரிவு ரோடு அருகே உள்ள தாபா ஓட்டல் அருகே வந்த போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த  கோவிந்தராஜை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து காவேரிப் பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே வயிற்று வலியால் 10ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், மார்ச்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்துள்ள ஏ.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தவமணி. இவரது மகள் மோகனா (வயது15). இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட மோகனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது30). இவருக்கு தருமபுரி மாவட்டம், இண்டூர், தளவாய்ஹள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

    கடந்த, 2019, மார்ச் 11ல், ஊர் பண்டிக்கைக்காக தன் தாய் ஊரான நெருப்புக்குட்டைக்கு தேவி வந்து தங்கியுள்ளார். மார்ச், 13&ந்தேதி காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தன் வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார். 

    அப்போது அதேபகுதியை சேர்ந்த அம்பிகா (30) என்பவர் தேவியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து தேவி அளித்த புகார்படி அம்பிகாவை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். 

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி லதா தன் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அம்பிகாவுக்கு, 5 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம், கட்டத்தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவ விழா நடந்தது.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை விமரிசையாக நடந்தது. அடுத்த நாள் (சனிக்கிழமை) இரவு ராவண உற்சவம் நடைபெற்றது. 

    இதில், சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், விநாயகர், முருகன், அனுமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து, வாணவேடிக்கைகளுடன் தேர்பேட்டை வீதிகளில் விடிய, விடிய பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. ஓசூர் தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமியை வைத்து, மேள வாத்தியம் முழங்க, குளத்தை சுற்றி தெப்பம் 3 முறை வலம் வந்தது.

    அப்போது பக்தர்கள், சாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். தெப்பத் திருவிழாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். விழாவையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    ×