என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே விபத்து: 2 தொழிலாளிகள் பலி
காவேரிப்பட்டிணம்:
திருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது42). கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை எம்.டி பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி (43). இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள ஒரு ஜூஸ் கம்பெனியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை செந்தில், ராஜசேகரரெட்டி ஆகியோர் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டினம் நோக்கி வேலைக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் சர்வீஸ் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் செந்தில், ராஜசேகர் ரெட்டி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் பின் சக்கரம் அவர்களின் தலையில் ஏறி இறங்கியது.
இதில் மூளை சிதறி செந்தில், ராஜசேகர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவேரிப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
விபத்தில் பலியான செந்தில், ராஜசேகர ரெட்டி ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் காவேரிப்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






