என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி. உள்படம் ஆதி நாராயணசாமி.
ஸ்ரீ ஆதி நாராயணசாமி கோவிலில் தேர்த்திருவிழா
ஓசூர் அருகே உள்ள பெரியே பேளகொண்டபள்ளியில் ஸ்ரீ ஆதி நாராணயசாமி கோவிலில் தேர்த்திருவிழா 75 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவிமர்சையாக நடந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பெரிய பேளகொண்டபள்ளியில், மிகவும் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதி நாராயணசாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தேர்த் திருவிழா நடந்தது. பின்னர் சில காரணங்களுக்காக திருவிழா நின்றுபோனது.
இந்தநிலையில் கிராம பெரியவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து பேசி, மீண்டும் தேர்த் திருவிழாவை நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதையடுத்து, நேற்று தேரோட்ட விழா, சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி, ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் உருவாக்கப் ணபட்டு, அதில் உற்சவமூர்த்தியை வைத்து, தேர் இழுத்து செல்லப்பட்டது.
விழா நிகழ்ச்சிகள், கடந்த திங்கட்கிழமை (21-ந்தேதி) கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி அதனைத் தொடர்ந்து சாமி வீதி உலா உற்சவமும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று நடந்தது. சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுக்கு பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து, “கோவிந்தா, கோவிந்தா” என்ற பக்திகோஷத்துடன் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர்.
விழாவையொட்டி, கிராமத்தின் பல்வேறு இடங்களில், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார், மற்றும் பிருந்தாவனா கல்விக்குழும தலைவர் பி.எல்.சேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சந்திரப்பா, சீனிவாசன், பூனப்பள்ளி தி.மு.க. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா, எடப்பள்ளி பிரகாஷ், ராமச்சந்திரன், எச்.என்.ரமேஷ், ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், சுற்றுவட்டாரத்திலிருந்தும், அத்திப்பள்ளி,ஆனேக்கல், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி மத்திகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (புதன்கிழமை) பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.
Next Story






