என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஓசூரில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
    • ஒசூர் டவுன் போலீசார் நடவடிக்கை

      ஓசூர் தேர்பேட்டை விநாயகர் கோவில் அருகில் வசித்து வருபவர் வினோத் குமார்(வயது 26). இவரிடம் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக ஓசூரை சேர்ந்த பத்மா, மற்றும் ஓசூர் வள்ளலார் நகரை சேர்ந்த சிவா (50), ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் ரூ.8 லட்சம் பெற்றிருந்தனர்.

    மேலும் இதற்காக போலியாக ஆணையும் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஆணை போலி என தெரிய வந்ததும், வினோத்குமார் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத்குமார், இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் பத்மா, சிவா, ஸ்ரீதர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று சிவா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    • மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • உருக்கமான கடிதங்கள் சிக்கியது.

    இருதய பாதிப்பால் குழந்தை இறந்த நிலையில், தாய் தற்கொலை செய்து கொண்டார். மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக இளம்பெண்ணும், அவரது கணவரும் அடுத்தடுத்து எழுதி வைத்த உருக்கமான கடிதங்கள் சிக்கியது.

    இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    முகநூலில் மலர்ந்த காதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி (வயது 25). லாரி டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார்.

    அந்த நேரம் இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சம்ரோபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்ற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் முகநூல் (பேஸ்புக்) மூலமாக நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருமணம்

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அபிசல்மியா, தனது காதலன் ஜலபதியை திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்தது.

    இளம்பெண் தற்கொலை

    குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசல்மியா யாரிடமும் சரிவர பேசாமல் மவுனம் கர்தது வந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6-ந் தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன்பாக உருக்கமாக கடிதமும் எழுதி வைத்திருந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரனும் விசாரணை நடத்தி வந்தார்.

    கணவரும் தற்கொலை

    மேலும் தற்கொலை செய்து கொண்ட அபிசல்மியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர் கன்னியாகுமரி வீட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை ஒருபுறம் என வேதனையின் உச்சத்தில் இருந்த ஜலபதி, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை தொடர்பாக உருக்கமான கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜலபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரும் சோகம்

    முகநூலில் பழகி பொறியியல் பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்த லாரி டிரைவர், குழந்தை இறந்த வேதனையில் மனைவியும் தற்கொலை செய்ததால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போச்சம்பள்ளி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்

    உடல் நலக்குறைவால் குழந்தை இறந்ததால் வேதனையில் அபிசல்மியா கடந்த 6-ந் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் சாவுக்கு யாருமே காரணமில்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கனும். அவ கூடவே இருக்கனும்னு தோனுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை. யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம்.

    வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன் அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா நீ பீல் பண்ணாத. அண்ணன் உன்ன நல்லா பார்த்துக்குவான். இப்படிக்கு அபிசல்மியா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கணவர் எழுதிய உருக்கமாக கடிதம்

    இருதய பாதிப்பால் குழந்தை இறந்த நிலையில், வேதனையில் அபிஷல்மியா தற்கொலை செய்து கொண்டார். குழந்தை, மனைவியை பறி கொடுத்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட ஜலபதி தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமாக 4 பக்கத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்னால் என் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அபி, பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன். லவ் யூ ஷோ மச் அபி. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்க அப்பா பிளீஸ் பா. அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இது தான் என்னுடைய கடைசி ஆசை.

    எனக்கு எந்த ஒரு சடங்கு செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள். செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி ஷோ நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன்.

    அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம். இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். நைட் அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று.

    எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை அதனால் தான் இந்த முடிவு. லவ் அண்டு லவ் ஒன்லி. அபிசல்மியா, ஜலபதி, பிரணிதா. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், சுற்றுலாத் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் தொடங்கியது. இந்த பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுலா நாள் 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சுற்றுலாவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் 6ம் வகுபபு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ, மா ணவிகள் கிருஷ்ணகி ரியிலுள்ள அரசு அருங்கா ட்சியகம், கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்க ளுக்கு அழைத்து செல்லப்ப ட்டுள்ளனர்.

    சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிடும் சுற்றுலா இடங்களை சிறு குறிப்பு எடுத்து, சுற்றுலா குறித்து சிறப்பு கட்டுரையாக எழுத வேண்டும்.

    சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும், மகிழ்ச்சி யாகவும், பாது காப்பான முறையில் தங்க ளின் பயணம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஆதிதி ராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கல்லாவி பஸ் நிலையத்தில் காட்சி பொருளான உயர் மின் கோபுர விளக்கு சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

     கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள உயர் மின் கோபுர விளக்கு பயனற்று கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு, சில காலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மின் கோபுர விளக்கு பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை, இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் மூழ்கியுள்ளது. கல்லாவிக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் செல்லும் பகுதியில், மின்விளக்கு இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பொது மக்களும் இரவு நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. உடனடியாக உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரவு வரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு, சுரேஷ் தனது அறையில் போய் படுத்து உள்ளார்.
    • தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்துள்ளார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய சென்ட்ரல் தியேட்டர் அருகேயுள்ள காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தொழிலதிபர் சுரேஷ். இவருக்கு சொந்தமாக ஜூவல்லரி தொழில் செய்து வருகிறார். இதனை தவிர ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் இவர் வசித்து வந்த அவரது வீட்டில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சுரேஷ் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் சுரேஷ் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து இருந்துள்ளார். இரவு வரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு தனது அறையில் போய் படுத்து உள்ளார். இன்று காலையில் தான் துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

    கிருஷ்ணகிரி பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்த தொழிலதிபர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்த சுரேஷ் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவரது வீடு முன்பு திரண்டு உள்ளனர். கிருஷ்ணகிரி டவுனில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் குவிக்கப்பட்டு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கெலமங்கலம் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நம்மை காக்கும் 48 திட்டம் குறித்து கோவர்த்த னால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை நடத்திவரும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துவக்க நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை கெலமங்கலம் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் கிருஷ்ணகிரி கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு கோட்டப் பொறியா ளர் சரவணன் துவக்கி வைத்தார்.

    கல்லூரி இயந்தி ரவியல் துறை விரிவுரை யாளர் சீனிவாசன் அனைவ ரையும் வரவேற்று பேசி னார், கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையு ரை வழங்கினார்.

    நிகழ்வில் சாலைப் பாதுகாப்பு குறித்த விளக்கக் காட்சிகளுடன், மாணவ மாணவியர் தங்க ளுடைய இல்லத்தில் இருந்து கல்லூரி அடையும் வரை பின்பற்ற வேண்டிய பாது காப்பு விதிகள் குறித்தும், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும், தமிழ கத்தில் ஒரு வருடத்தில் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதை குறைப்ப தற்கான வழிகள் குறித்தும் தோழன் அமைப் பின் ஜெகதீஸ்வரன் விளக் கினார்.

    விபத்தில் சிக்கிய வர்களை உடனடியாக காக்கும், தமிழக அரசின் "நம்மை காக்கும் 48" திட்டம் குறித்து கோவர்த்த னால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    யாருக்கேனும் விபத்து நடந்தால் அந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்களையும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியவருக்கு கிடைக்க வேண்டிய உதவி குறித்தும், எவ்வாறு ஆம்புலன்ஸை அழைப்பது போன்ற விஷயங்களை தோழன் அமைப்பின் நந்தகு மார் விளக்கினார்.

    அதைத் தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ, மாண விகளுக்காக சாலைப் பாது காப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக கவிதை, ஓவியம் மற்றும் வாசகங்கள் எழுதிய வர்களுக்கும், நிகழ்ச்சி நடக்கும்போது கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் தெரிவித்த மாணவ மாணவிகளுக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப் பட்டது.

    அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சாலைப் பாதுகாப்பு துண்டறிக்கை வழங்கப்பட்டது. இறுதியில் தேன்கனிக்கோட்டை கட்டுமான மற்றும் பரா மரிப்பு உதவிக் கோட்டப் பொறியாளர் திருமால் செல்வன் சாலைப் பாது காப்பு உறுதி மொழியை மாணவ, மாணவிகள் ஏற்கச் செய்தார். சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி வாசிக்க மற்ற மாணவ, மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்த நிகழ்வில் தேன்கனிக் கோட்டை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இளநி லைப் பொறியாளர் டேவிட், ராயக்கோட்டை கட்டுமா னம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளர் மன்னர் மன்னன், நெடுஞ்சா லைத் துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரி யர்கள் கலந்துகொண்டனர். 

    • ஒசூர் அருகே 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • விபத்தில் பலி எண்ணிக்கை 16 உயர்வு

    ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் அதிதிப்பள்ளி வளைவு அருகே நவீன் என்பவர் பட்டாசு கடையை நடத்திவந்தார். இந்த கடையில், கடந்த, 7-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், நேற்று ஒரு இளைஞரும், இன்று காலை ஒரு இளை ஞரும் சிகிச்சை பலனளிக் காமல் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    தவிர, இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், 2பிக்கப் வேன்கள், 1சரக்கு லாரி என 15-க்கும் மேற் பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, கர்நாடக மாநில முதல் -மந்திரி சித்தராமையா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டும், உயிரிழந்த வர்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்க ளுக்கும் ஆறுதல் கூறினார். மேலும், பட்டாசு கடை வெடி விபத்து வழக்கினை, குற்ற புலனாய்வுத்துறைக்கு மாற்றியுள்ளதாக அறிவித் தார். இதனைக் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு போலீஸ் சூப்பிரண்டு.வெங்கடேஷ் தலைமையி லான குழுவினர் வெடி விபத்து நடந்த அத்திப்பள் ளிக்கு வந்தனர்.

    அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கட்டிட சுவர்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி.பிர வீன் மதுக்கர் பவார், அத்திப் பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவ லர்கள் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) சிஐடி பிரிவு டிஜிபி எம்,ஏ, சலீம், மற்றும் ஐ.ஜி.பி பிரவீன் மதுக்கர் பவார், ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று டிஒய்எஸ்பி சீனிவாசன், போலீஸ் சூப்பிரண்டு மல்லி கார்ஜூன பால்தண்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தம் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கர்நாடகா லோகாயுக்தா அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக எல்லையில் வைக்கப்பட்டி ருந்த 7 பட்டாசு கடைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்த னர். பின்னர், அந்த கடைக ளுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்ட னர். மேலும், ஆனேக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து பட்டாசு கடைக ளுக்கும் சீல் வைக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுத்துள்ள தாக தெரிய வந்துள்ளது.

    • விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்த 7-ந்தேதி, நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து பெங்களூரு பகுதியில் வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் (17) என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெங்களூர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கர்நாடக மாநிலம் முல்பாகலை சேர்ந்த வெங்கடேஷ் (25) என்ற வாலிபரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து, பட்டாசு கடை தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.

    • ரூ.164 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது.
    • மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரி களுடன் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 29-வது வார்டிற்குட்பட்ட சானசந்திரம், முல்லை நகர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.164 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது. இதனை, மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி அதிகாரி களுடன் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, அப்பகுதியில் அமைக்கப் பட்டுள்ள சாலையின் தரம், அதன் உயரம், அகலம் குறித்தும் மற்றும் மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், தெரு விளக்குகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் செய்து கொடுக்கப்படு கிறதா? என அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில், மின் தகன மேடை , கால் சென்டர் கட்டிடம் , ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.

    பின்னர் குடியிருப்பு மக்களின் குறைகளையும், மேயர் சத்யா கேட்டறிந்தார். இந்நிகழ்வில், மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் ரகுமான். மற்றும் கட்சியினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சந்தீப், அமான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • உடன் வந்த 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,  

     கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் மண்ணடி கிராமத்தைச் சுரேஷ் மகன் சந்தீப் (வயது26), அதே பகுதியைச் சேர்ந்த அமான் (26), ஜமாலுதீன் மகன் ரியாஸ் (24), அடூரைச் சேர்ந்த மித்துஜிலால்(26), கிருஷ்ணன் சாந்த் (22) ஆகிய 5 பேரும் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு வந்தனர்.

    அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி, போலுப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணகிரி - ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புளியரசிமேடு என்ற பகுதிக்கு இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சந்தீப், அமான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்தில் காயமடைந்த ரியாஸ், மித்துஜிலால், கிருஷ்ணன் சாந்த் ஆகிய 3பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான சந்தீப், அமான் ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உருவாகிறது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் நந்தி மலை, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் போது கே.ஆர்.பி. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    தற்போது கர்நாடகாவின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முழுக்கொள்ளளவான 52 அடி உயரம் கொண்ட இந்த கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது.

    இதனை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 1114 கனஅடி நீர் வரும் நிலையில் 1176 கன அடி அளவு நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றங்கரையேராம் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த மாதம் 22-ந் தேதியும் கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறதக்கப்பட்டது. அப்போதும் தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும்.
    • விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார்.

    அதன்படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-

    அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.

    தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×