search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: கர்நாடக சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. நேரில் விசாரணை
    X

    பட்டாசு கடையில் நடந்த வெடி விபத்தில் 14 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு கர்நாடக சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தியதை காணலாம்.

    பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: கர்நாடக சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. நேரில் விசாரணை

    • அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும்.
    • விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில ஆர்ச் அருகில், தேசிய நெடுஞ்சாலையையொட்டி,10 பட்டாசு கடைகள் அமைந்துள்ளன. கடந்த 7-ந் தேதி மாலை, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் நடந்த பயங்கர தீ விபத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.வெடி விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வழக்கை சி.ஐ.டி. பிரிவு போலீசார் விசாரிப்பார்கள் என்று அவர் அறிவித்தார்.

    அதன்படி கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வெடி விபத்து நடந்த அத்திப்பள்ளிக்கு வந்தனர். அங்கு வெடி விபத்து நடந்த கடையை ஆய்வு செய்தனர். வெடி விபத்தில் சேதமடைந்த பிக்அப் வேன்கள், எரிந்த லாரி, டூவீலர்கள் மற்றும்கட்டிட சுவர்கள் என அனைத்தையும் அவர்கள் ஆய்வு செய்து போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.பி. மதுக்கர் பவார், அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அத்திப்பள்ளி நகர அலுவலர் மஞ்சுநாத் கூறியதாவது:-

    அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு கடைகள் இயங்க வேண்டும். இங்கு எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசின் 25 வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதில் எதையும் இங்கு கடைபிடிக்கவில்லை. குறிப்பாக பட்டாசு கடைகள் அமைந்துள்ள இடத்தில் மணல் வாளிகள் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் நிரப்பப்பட்ட லாரிகள் வைத்திருக்க வேண்டும்.

    தீ தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். அவசர கால வழிகள் இருக்க வேண்டும். இதில் எதுவும் இந்த பட்டாசு கடையில் இல்லை. காவல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என்று பல்வேறு துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இங்கு விதிமுறைகளை மீறி பட்டாசு கடை அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால் அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் இங்கு இருந்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கை வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×