என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் விவசாயிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது53). விவசாயியான இவர் நேற்று கே.ஆர்.பி. அணை ஆர்ச் வளைவு பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்ற மர்ம நபர் ஒருவர் முனுசா மியின் சட்டை பையில் இருந்து ரூ.700 பணத்தை திருடி விட்டு தப்பியோட முயன்றார். இதனை சுதாரித்து கொண்ட முனுசாமி உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அந்த நபரை கே.ஆர்.பி. டேம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பனந்தோப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (29) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கெலமங்கலம் அருகே பேப்பர் பண்டல் விழுந்து கிரேன் ஆபரேட்டர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் அகேஸ் (வயது20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள அக்கோண்டபள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த போது பேப்பர் பண்டல் அகேஸ் மீது எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே கல்லூரிக்கு சென்ற மாணவன் மாயமானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எலுப்பகுட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருவெங்கடம். இவரது மகன் சதீஸ் (வயது19). இவர் தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அன்று சதீஸ் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிபட்டணம் அருகே மாங்காய் கொட்டையை தூக்கி எறிந்ததால் ஏற்பட்ட தகராறில் அரசு பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து விழுந்தது.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தருமன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பிரவின் குமார் (வயது14). இவர் பன்னிஅள்ளி புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று பிரவின்குமார் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது அவர் மீது உடன் படிக்கும் சஞ்சய் மற்றும் அவரது நண்பர் என்கிற சுணில்குமார் ஆகியோர் மாங்காய் கொட்டையை தூக்கி எறிந்தாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சஞ்சய் நண்பர் சுணில்குமார், பிரவின்குமார் செல்போன் எண்ணுக்கு கொலை மிரட்டல் ஆடீயோவை அனுப்பியுள்ளார். இதனால் பயந்து போன அவன் இன்றுகாலை வழக்கம் போல் வந்தான்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் தாங்காத சுணில்குமார் பள்ளி வளாகத்தில் புத்தக பையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவின்குமார் முதுகில் குத்தினார். இதனை பார்த்த சக மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே குடும்ப தகராறில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 38) இவருக்கு வள்ளி என்ற மனைவியும், 13 வயதில், ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு இளங்கோவன் கடந்த 4-ந் தேதி அன்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு பேராடி வந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இளங்கோவன் இறந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் கிரானைட் கல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி ,
கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் பர்கூர்- ஜெகதேவி சாலையில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு, 12:30 மணியளவில் அந்த வழியாக லாரியில் கிரானைட் கல் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை பார்த்த்தும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அதிகாரிகள் கிரானைட் கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து பர்கூர் போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரி உரிமையாளர் கார்த்திக், டிரைவர் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் வாலிபர் பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பில்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது 40).
இவர் இன்று காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பில்லகொட்டாயில் இருந்து மார்ரஹள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தேவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் பலியான தேவனுக்கு மஞ்சு என்ற மனைவியும் ஆகாஷ் (17) என்ற மகனும், ஆசிகா (13) என்ற மகளும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பெய்து வரும் மழையால் 70 டன் வெங்காயம் அழுகி நாசமானது.
சூளகிரி,
சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் சிவப்பு வெங்காயம் சாகுபடி செய்து வருகிறார்கள். இதற்கு வெளி நாடுகளில் வரவேற்பு உள்ளது. அறுவடை செய்த வெங்காயத்தை சென்னை, பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஆர்டர்கள் வரவில்லை. இதனால் சுமார் 70 டன் வெங்காயத்தை விவசாயிகள் பட்டியடித்து இருப்பில் வைத்திருந்தனர்.
மேலும் பாதுகாப்புக்காக தார்பாய் போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் சூளகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்த மழைக்கு வெங்காயம் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த கொட்டாயூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் பொன்னுசாமி (வயது 65). விவசாயி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும். தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47 அடியாகும். அணைக்கு வரும் நீரின் அளவை பொருத்து பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட வேண்டி உள்ளது.
எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், 18 வயது இளம்பெண். கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பர்கூர் அடுத்த ஆம்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
கடந்த, 12-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது உறவினர்கள் மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகை சேர்ந்த விக்னேஷ், என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் பின்பற்றாத 27 வாகனங்களுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அரசின் விதிமுறைகளை பின்பற்றால் இயக்கிய 27 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே.சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆயவாளர் மாணிக்கம் மற்றும் குழுவினர் கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடி அருகில நேற்று வாகன சோதனையில் ஈடு பட்டனர்.
கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், கறுப்பு ஸ்டிக்கர் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த வாகனங்கள், பம்பர் பொருத்தப்பட்டிருந்த வாகனங்கள், வாகனங்களில் ஜி அல்லது அ என எழுதப்பட்டிருந்த வாகனங்கள் போன்ற குற்றங்கள் தொடர்பான வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
இதில் 27 வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றிற்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அபராத தொகையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தெரிவித்தார்.






