என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஷட்டரை தூக்கும் இரும்பு கயிறு 2 இடங்களில் அறுந்துள்ளது.
    • பராமரிப்பு பணிகளும் தொடங்கியது.

    ஓசூர்,

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் மதகுகளில் 2 இடங்களில் ஷட்டர் இரும்பு கயிறுகள் அறுந்து விழுந்ததையடுத்து அதனை சரி செய்யும் பணி, நேற்று முதல் தொடங்கியது .

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் மொத்தள்ள 7 மதகுகளில் 1 - வது மதகு மற்றும் 5-வது மதகுகளில் ஷட்டரை தூக்கும் இரும்பு கயிறு 2 இடங்களில் அறுந்துள்ளது.

    அறுந்து விழுந்துள்ள இந்த இரும்பு கயிறுகளை மாற்றுவதற்காக, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இதையொட்டி, அணையில் 40 அடி அளவில் இருந்த தண்ணீர், கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு 24 அடியாக குறைக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, நேற்று பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு பணிகளை தொடங்கினர். மதகுகளில் அறுந்து விழுந்த 2 ஷட்டர் இரும்பு கயிறுகளையும் மாற்றும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும், வருகிற 23 -ந் தேதிக்குள் இந்த பணிகளை முழுமையாக முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    • உணவுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அருகில் எலிகள் சுற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
    • இதே போல நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் சோதனை செய்யப்பட்டது.‘

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் ஒரு ஓட்டல் சுகாதாரமற்ற முறையில் இருந்தது.

    மேலும் உணவுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அருகில் எலிகள் சுற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் கிருஷ்ணகிரி நகரில் உள்ள, ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினார்கள்.

    இதில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஓட்டலில் சமையல் அறை, அடிப்படை வசதிகளை செய்து உணவு பாதுகாப்பு துறையிடம் சான்றிதழ் பெற்ற பிறகு ஓட்டலை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு ஓட்டலை மூடினார்கள்.

    இதே போல நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் சோதனை செய்யப்பட்டது.'

    பிளாஸ்டிக் கவர்கள் வினியோகிக்க கூடாது என அறிவுறுத்திய அதிகாரிகள், தொடர்ந்து அனைத்து ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்படும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், சுகாதார சீர்கேடுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்து வந்தனர்.
    • மேலும், மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்வதற்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,  

    ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்து வந்தனர்.இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு நேற்று மாலை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட களப்பணி இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம் அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்வதற்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.
    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பாலநாயக்கன பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது36). இவர் நேற்று சென்னை-கிருஷ்ணகிரி சாலை ஓரப்பம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.

    இதேபோல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாஜஸ் ( 52) இவர் நேற்று ஓசூர் அடுத்த மூக்காண்டப்பள்ளியில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி பலியானார்.

    தேன்கனிக்கோட்டை சாரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாஞ்சாள் (45). இவர் நேற்று பைக்கில் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.

    =இதேபோல் ஊத்தங்கரை அடுத்த எம்.வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (29). இவர் ஊத்தங்கரை- கல்லாவி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ், நேற்று பாலதொண்ட பள்ளியில் இருந்து லக்கசமுத்திரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.

    • 3 நோயாளிகளுக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
    • மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஆகியவை பொது மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாவட்ட இணை இயக்குனர் பரமசிவன் வழிக்காட்டுதலின்படி, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில் எலும்பு மருத்துவர்கள் வருண்குமார், சங்கர் கணேஷ் மற்றும் மயக்க மருத்துவர் ரமேஷ் மற்றும் நர்சுகள் அடங்கிய குழுவினர், 3 நோயாளிகளுக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

    மேலும் இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவை பொது மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சேவைகளை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • விரைவில் 4 மண்டல அலுவலகம் கட்டப்படும்.
    • ஒசூரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

    ஒசூர்,

    ஓசூர் மாநகராட்சியின் அவசர கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்., ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மேயர் சத்யா பேசியதாவது:

    "ஒசூர் மாநகராட்சிக்கு சொந்தமான 9 நடுநிலைப்பள்ளிகளில் ரூ.6.35 கோடி மதிப்பில் விரைவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். ஒசூர் மாநகர சுகாதார அலுவலர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 4 மண்டலங்களுக்கும் மாநகராட்சி சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் 4 மண்டல அலுவலகம் கட்டப்படும்.

    ஒசூர் மாநகராட்சியில் 387 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்கள் தனியார் துறை மூலம் பராமரிக்கப்படும். மேலும் சில பூங்காக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதனை கண்டறிந்துள்ளோம்.

    அவற்றை மீட்டு சுற்றுச்சுவர் அல்லது இரும்பு வேலி அமைத்து பாதுகாக்கப்படும். ஒசூரில் உள்ள பூங்காக்களை பராமரிக்கும் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

    ஹட்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மினி லாரி என 45 வார்டுகளில் குப்பைகளை சேகரிக்க மினி லாரி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . விரைவில் ஒசூரில் முக்கிய இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும்" இவ்வாறு, கூட்டத்தில் சத்யா பேசினார்.

    ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைவரும் பயன்பெரும் வகையில் நூலகம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒசூர் மாநகராட்சியில்நூலகம் அமைக்கப்படும்.

    ஒசூரில் 97 கிலோ மீட்டர் தொலைவிற்கு மண் சாலைகள் உள்ளன. ரூ.67 கோடி மதிப்பில் அவற்றை தார்ச்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஒசூரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இதனால் ஒசூரில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தடுக்கப்படும்.

    ஓசூர் மாநகராட்சியில், வெளிப்படையான நிர்வாகம், சிறப்பான நிதிமேலாண்மை ஆகியவற்றால் வளர்ச்சித் திட்டப் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆணையாளர் கூட்டத்தில் பேசினார்.

    இதில், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்கள் வார்டு பகுதி தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    இக்கூட்டத்தில், மன்றத்தில் வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    • தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும் ஒருமையில் பேசியதற்காகவும் 9 பேர் மீது வழக்கு பதிவு.

    மாத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், இவருடைய மகன்கள் சரண்ராஜ் (33) குமரவேல் (35) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம், பட்டா வழங்கியதில் தவறு நடந்திருப்பதாகவும் அதனை மாற்றி கொடுக்கும்படி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த மனுவின் மீது தாசில்தார் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி நேற்று குமரவேல், சரண்ராஜ், முருகேசன், உள்ளிட்ட 9  பேர் தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடத்தில் துணை வட்டாட்சியர் சீனிவாசன் தங்கள் கோரிக்கைகளை பரிசிளிப்பதாகவும் கலைந்து செல்லும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் போராட்டக்காரர்கள் தகாத வார்த்தைகளால் ஒருமையாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

    பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் மீது தாசில்தார் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும், ஒருமையில் பேசியதற்காகவும், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாய்கள் சாலையின் குறுக்கே ஒடுவதாலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
    • இரவு நேரங்களில் வெளியில் செல்வதை மக்கள் குறைத்து கொண்டு வருவதாகவும் குற்றசாட்டு கூறுகின்றனர்.

    ,சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெரு, கீழ்தெரு. கே. கே, நகர்,மூஸ்லிம் தெரு, வி.ஐ.பி, நகர், மில்லத் நகர், ஒசூர்பேரிகை சாலை, கமலா காலனி, அண்ணா நகர், வாணியர் தெரு, காமராஜர் காலணி, ஒசூர் கிருஷ்ணகிரிசாலை, சூளகிரி உத்தனப்பள்ளி சாலை, டி.கே.நகர் அனைத்து தெரு மற்றும் முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    பொதுவாக சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொழில் சாலை மற்றும் பல்வேறு வேலைகள் நிமித்தமாக 100 மேற்ப்பட்ட கிராம மக்கள் சூளகிரி வந்து தான் செல்ல வேண்டும்.

    இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரையிலும் நாய்கள் ஆதிக்கத்தால் இரவு, அதிகாலை தொழிற்சாலை செல்லவோ தொழிற்சாலையில் இருந்து வரவோ நாய்கள் துரத்துவதும், நாய்கள் சாலையின் குறுக்கே ஒடுவதாலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில்வெளியில் செல்வதை மக்கள் குறைத்து கொண்டு வருவதாகவும் குற்றசாட்டு கூறுகின்றனர். இந்த நாய்களை பிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

    • காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும்.
    • 1 மணி நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்து அசத்தினார்.

    ஓசூர்,

    ஓசூர் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஓவியர் கோவிந்தராஜ் (49). காமராஜரின் மீது அளவற்ற மதிப்பும், நேசமும் கொண்ட இவர், நேற்று காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி, வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், காமராஜரின் 120 முகம் உருவப்படங்களை 1 மணி நேரத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வரைந்து அசத்தினார்.

    அவரது இந்த வித்தியாசமான செயலைக் கண்டு பொதுமக்கள் வியந்து மிகவும் பாராட்டினார்கள்.

    • பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைத்தனர்.
    • ஸ்ரீ மாரியம்மன் சாமுண்டி அம்மன் மாட்டுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சாமுண்டியம்மன் ஊர் பண்டிகை அனைத்து சமுதாய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக ஊர் திருவிழா நடைபெற்று வருகிறது. இறுதியாக தற்போது நடைபெற்று வரும் விழாவில் அனைத்து சமுதாய ஊர் பொதுமக்களும் பொங்கல் வைத்தனர்.

    காவேரிப்பட்டணம் முழுவதும் உள்ள ஊர் எஜமானர்கள் தலைமையில் தாரை தப்பட்டை, கேரளா செண்டை மேளம், உடன் மாவிளக்கு ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைத்தனர்.

    ஸ்ரீ மாரியம்மன் சாமுண்டி அம்மன் மாட்டுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது 125 கிலோ மாவிளக்கை மாட்டு வண்டி, டாட்டா ஏசி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மன், சாமுண்டி அம்மன் கோவிலில் மாவிளக்கு வைத்து பூஜை செய்தனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ சாமுண்டி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நேற்று கூலியாட்டம் கோவிலை சுற்றி நடைபெற்றது. அப்போது ஒரு பிரிவினருக்கிடையே மாடு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து போலீசார் தலையிட்டு மேலும் பிரச்சனை எழாமல் பார்த்துக் சுமூகமாக முடித்தனர். பின்னர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார்.
    • செந்தாமரைக்கண்ணன் என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது55).தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளது.

    முதல் மனைவி செல்வி, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இரண்டாவது மனைவி கமலா (வயது50), அவரது மகன் குரு (17). இருவரும் செங்கல்பட்டியிலுள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். 3-வது மனைவி சத்யா. இவர் தற்போது கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை பூட்டிய வீட்டுக்குள் கமலா, குரு ஆகியோர் தீயில் கருகி சடலமாக கிடப்பதாக, கல்லாவி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி கூடுதல் எஸ்.பி. சங்கு, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், கல்லாவி இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது எரிந்த நிலையில் கிடந்த தாய்-மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சத்யாவுக்கும், திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது.

    கொலை நடந்த மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அங்கு அந்த மோப்பநாய் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் ஜன்னல் பகுதிக்கு சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் உள்ள சத்யா வீட்டில் இருந்த ராமதாஸ் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் அவர் போலீசில் மாட்டி கொண்டார்.

    அப்போது ராமதாஸ் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

    எனக்கும், சத்யாவுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை செந்தாமரைக்கண்ணன், சத்யாவை கண்டித்துள்ளார். இதனால் நானும், சத்யாவும் செங்கப்பட்டிக்கு வந்தோம். அப்போது சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார். அப்போது என்னையும், சத்யாவையும் செந்தாமரை கண்ணன் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த செந்தாமரைக்கண்ணன், என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த தீயை அணைத்தனர்.

    பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு நான் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தேன். பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டி ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன்.

    பின்னர் நானும் எதுவும் தெரியாதபடி சத்யாவின் வீட்டில் இருந்தேன். மறுநாள் காலையில் தான் தாய்-மகன் இருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் வீட்டில் செந்தாமரைக்கண்ணன் அங்கு இல்லை என தெரியவந்தது.

    காலையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நான் எதுவும் தெரியாது என கூறினேன். மோப்பநாய் வந்து என் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் நான் மாட்டி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    • போலீசில் வாக்குமூலம் கூறினார்.
    • அங்கு எங்களிடம் வாக்குவாதம் செய்தார்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள செங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். 2-வது மனைவி கமலா (வயது50). இவரது மகன் குரு (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். 3-வது மனைவி சத்யா.

    நேற்று கமலா, குரு ஆகிய இருவரும் வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தினார்.

    கள்ளக்காதல் பிரச்சினையால் முதல் குற்றவாளி கட்டிட தொழிலாளியான திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) என்பவர் கமலா, குரு ஆகிய இருவரையும் எரித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டார். போலீசில் வாக்குமூலம் கூறினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கட்டிட தொழிலாளியான சத்யா கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அங்கு அவரது தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    சத்யாவுக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை செந்தாமரை கண்ணன் கண்டித்துள்ளார். ஆனால் அதனை தொடர்ந்து சத்யா என்னுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.

    நேற்று முன்தினம் நானும், சத்யாவும் செங்கல்பட்டி கிராமத்திற்கு சென்று இருந்தோம். அப்போது செந்தாமரைக்கண்ணன் வந்தார். அங்கு எங்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் வெளியே வந்து செந்தாமரைக்கண்ணன் எனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தார்.

    இதனால் ஆத்திரத்தில் நான் செந்தாமரைக்கண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டின் ஜன்னல் வழியாக நேற்று அதிகாலை 4 மணி அளவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். அப்போது கமலா, குரு ஆகிய இருவரும் உடல் கருகி மூச்சு திணறி இறந்தனர். ஆனால் செந்தாமரைக்கண்ணன் தப்பி சென்று விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×