என் மலர்
கிருஷ்ணகிரி
- பக்தி பாடல்களை பாடிக்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு களால் யாத்திரை தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் புது உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக புறப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களான நொகனூர், கொத்தூர், அலேசீபம், ஜவுளகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தேன்கனிக்கோட்டை இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சனாதன தர்ம சைதன்ய பாதயாத்திரை குழு சார்பாக தலைவர் முனிவெங்கடப்பா தலைமையில் ஆண்கள் பெண்கள் உட்பட 150 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேன்கனிக்கோட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து குழந்தைகளுக்கு ராமர், ஆஞ்சநேயர் வேடமிட்டு நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்து பக்தி பாடல்களை பாடிக்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு களால் யாத்திரை தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் புது உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக புறப்பட்டனர்.
பாதயாத்திரை குழுவினர் வருகின்ற 30-ம் தேதி திருப்பதி கோயிலை சென்றடைகிறார்கள். பக்தர்களை பாத யாத்திரை குழுவினர் பிரகாஷ், சீனிவாசன், கிருஷ்ணன் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர்.
- பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் தெரிவித்தனர்.
- கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி அருகில் உள்ளது கட்டி கானப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகமாக இருந்தன.
இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்தன. உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை தாங்களாக அகற்றிட ஊராட்சி மன்றம் சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதையொட்டி ராயக்கோட்டை மேம்பாலம் முதல் கிருஷ்ணகிரி ஒருங்கி ணைந்த நீதிமன்றம் வரையில் சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. இதில் போர்டுகள், பேனர்கள், ஷெட்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் கூறுகையில், இன்றைய தினம் 300-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் யாரேனும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் அமர்நாத், செல்வராஜ், மதியழகன் மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவது வழக்கம். அம்மனுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி நேற்று மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதே போல ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அபிஷேகம சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரத்திலும், ஜக்கப்பன்நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகமும், அலங்கா ரமும் நடந்தன. அக்ரஹா ரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.
இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆடி மாதத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை வழக்கம் போல ஆடி வெள்ளி அன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
- ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளது.
- சுய வேலை வாய்ப்பு பெறலாம்.
கிருஷ்ணகிரி,
பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த பட்டயப்படிப்பு ஒரு ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும்.
இதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் மற்றும் எந்த கல்வி படித்திருந்தாலும் சேர்ந்துக் கொள்ளலாம். தமிழ்வழிக்கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் ஆகும்.
இந்த பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்துகடை, விதைகடை மற்றும் தாவர மருந்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையா ளர்களாகலாம். சுய வேலை வாய்ப்பு பெறலாம். பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர், கிருஷ்ணகிரி என்ற முகவரியையோ, இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்க ழகம், கோவை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
- கெலமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
- ஒன்றிய குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய குழு தலைவர் டி.கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் 12-வது வார்டு இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற மாரப்பா ஒன்றிய குழு உறுப்பினராக பதவிபிரமாணம் செய்து பொறுபேற்று கொண்டார் புதியதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட கவுன்சிலர் மாரப்பாவுக்கு ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, சென்னகிஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர் முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகனந்தன் நன்றி கூறினார்.
- கணவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
- கிணற்றில் குதித்து இறந்துள்ளதாக அப்பகுதியில் செய்தி பரவியது.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அடுத்த தேர்பட்டி ராமநாதன் நகரை சார்ந்தவர் பாக்கியம். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஐந்து வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அவருடைய கணவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் பாக்கியம் மனம் உடைந்த நிலையில் இவருடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூங்க சென்றவர் இன்று காலை கிணற்றில் குதித்து இறந்துள்ளதாக அப்பகுதியில் செய்தி பரவியது. இதையடுத்து அவரது உடலை கிணற்றில் இருந்து மேலே தூக்கினர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்திற்கு விரைந்து பாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓசூரில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஓசூர்,
வன்னியர் சங்கத்தின் 43-வது ஆண்டு தொடக்கவிழாவை யொட்டி, ஓசூரில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, மேற்கு மாவட்ட பா.ம.க. வன்னியர் சங்கம் மற்றும் வன்னியகுல சத்திரிய தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் ஓசூர் முதலாவது சிப்காட், சின்ன எலசகிரி, ராஜேஸ்வரி லே-அவுட் உள்ளிட்ட 6 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாக அருண்ராஜன் தலைமை தாங்கினார். பா.ம.க.வழக்கறிஞர் சமூகநீதிப்பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் வெங்கடேஷ், உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
- பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படு கிறது.
- பயிற்சி தொடங்கும் நாள் 08.08.2022 ஆகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்ப டும் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலை யத்தில் 22-வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படு கிறது. வரும் 28-ந்தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-ஐ ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்கள் பெற்று 01.08.2022 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முதல்வர், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் பர்கூர் - 635104 கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும், பயிற்சி தொடங்கும் நாள் 08.08.2022 ஆகும்.
பயிற்சியாளர் சேர்க்கைக்கு கல்வி தகுதி பழைய பதினோராம் வகுப்பு அல்லது புதிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பயிற்சி சேரும் நபர் தமிழகத்தில் ஏதேனும் ஒரு கூட்டுறவு சங்கம்/நிறுவனம்/வங்கி பணியில் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 1) பணி நியமன உத்திரவின் நகல், 2) பணிச்சான்று, 3)பயிற்சியில் சேருவதற்கு ரிய தீர்மானம் உண்மை நகல்கள், 4)பழைய பதினோராம் வகுப்பு அல்லது புதிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் உண்மை நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் உண்மை நகல் சமர்பிக்கப்பட வேண்டும். தொடர்பு மேலும் விவரங்களுக்கு தொலைபேசி: 04343-265652, என்ற எண்ணில் கொள்ளலாம்.
முழுநேர பட்டய படிப்பு
இதேபோல முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்கைக்கான கல்வித்தகுதி 12-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் சேரலாம். 01.08.2022. அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. இப்பயிற்சியின் நிறைவில் கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் சேர்த்து வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம், பர்கூரில் விண்ணப்ப கட்டணமாக ரூ.100/-ஐ ரொக்கமாக செலுத்தி வரும் 28-ந்தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) பெற்றுக் கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்க ளுடன் 01.08.2022 மாலை 5.30மணிக்குள் பதிவஞ்சல் அல்லது கூரியர் மூலம் மட்டுமே, முதல்வர் பர்கூர் கூட்டுறவு தொழிற் பயிற்சி நிலையம் பர்கூர்-635104 கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், காலதாமாதமாக பெறப்ப டும் விண்ணப்பங்கள் எக்கார ணத்தைக் கொண்டும் பரிசீலக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படு கிறது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நாளை நடக்கிறது.
- 8 தாலுகாவில் இந்த தேர்வுகள் நடக்கின்றன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு குரூப்-4 நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மேற்பார்வையில் தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர்களுடன் தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தேவை யான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 தாலுகாவில் இந்த தேர்வுகள் நடக்கின்றன.
கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 தேர்வு மையங்களில் 16 ஆயிரத்து 354 நபர்களும், அஞ்செட்டி தாலுகாவில் ஒரு தேர்வு மையத்தில் 425 நபர்களும், பர்கூர் தாலுகாவில் 11 தேர்வு மையங்களிலும் 3 ஆயிரத்து 167 நபர்களும், ஓசூர் தாலுகாவில் 35 தேர்வு மையங்களிலும் 10 ஆயிரத்து 601 நபர்களும் தேர்வு எழுதுகிறார்கள்.
போச்சம்பள்ளி தாலுகாவில் 23 தேர்வு மையங்களிலும் 6 ஆயிரத்து 759 நபர்களும், சூளகிரி தாலுகாவில் 4 தேர்வு மையங்களில் 1064 நபர்களும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 4 தேர்வு மையங்களில் ஆயிரத்து 405 நபர்களும் மற்றும் ஊத்தங்கரை தாலுகாவில் 18 தேர்வு மையங்களில் 5 ஆயிரத்து 747 நபர்களும் ஆக மொத்தம் 144 தேர்வு மையங்களில் 45 ஆயிரத்து 522 தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிப்ப தற்காக ஒட்டு மொத்த கண்காணிப்பு பணிக்கு மேற்பார்வை அலுவலர்கள், பறக்கும்படை, நடமாடும் அலகு ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது.
மேலும் மாணவ, மாணவிகள் தேர்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் போது பொது மக்கள் சொந்த காரணங்களுக்காக சாலை மறியல் போன்ற தடங்கல் செய்தாலோ வேறு எவ்வகையிலும் தொந்தரவு கொடுத்தாலோ அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் சமயத்தில் பொது மக்கள் தேர்வு மையங்களை சுற்றி ஒலிபெருக்கி மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஏதேனும் நடத்தி, தேர்வு எழுத செல்வோருக்கோ அல்லது தேர்வு மையங்களுக்கு அருகிலோ இடையூறு செய்தால் அந்த நபர்கள் மீதும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய செயலுக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
- 1,270 மையங்களில் ஊசி போடப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 333 ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணி யாளர்களுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிட்ஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரியில் சூதாட்ட கும்பல் சிக்கியது.
- பணம்,மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் சோலேபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் தோப்பு ஒன்றில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது.
இைதயடுத்து அந்த கும்பலை போலீசார் வளைத்து பிடித்தனர். சோலேபுரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 38), பால்ராஜ் (35) மற்றும் மணிவேல் (40), செல்லப்பா (53), திம்மராஜ் (40), முரளி (29), ஸ்ரீதர் (32) மற்றும் தேவகானப்பள்ளி பகுதியை சேர்ந்த நாகராஜ் (53), முரளி மோகன் (30) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் பணம் 3 மோட்டார் சைக்கிள்கள், 54 சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரியில் தொழிலாளி விபத்தில் உயிரிழந்தார்.
- வேலை செய்தபோது அவர் தவறி கீழே விழுந்தார்.
தருமபுரி,
வேலூர் மாவட்டம் கோட்டை பசுலுல்லா தெரு பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 38). வெல்டிங் வேலை பார்த்து வந்தார்.
இவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகத்திற்குட்பட்ட இருசக்கர வாகன ஷோரூம் ஒன்றில் விளம்பர பலகை பொருத்துவதற்காக வெல்டிங் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அமானுல்லா தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அமானுல்லா உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






