என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
    • சம்பவ இடத்திலேயே தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது38). இவர் ஜோலார்பேட்டை ரெயில்வேயில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று தனது காரில் தீபக் புறப்பட்டு கிருஷ்ணகிரி-சென்னை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்ேபாது உப்பளவாடி என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீபக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • அருள் பெற்ற பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாரியம்மன் கோவில் முன் வீரபத்திர சுவாமி பக்தர்கள் சேவையாட்டம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர். தலையில் தேங்காய் உடைத்து சிதறும்போது பக்தர்களின் துன்பங்கள் யாவும் சிதறிப்போகும் என்பது நம்பிக்கை.

    இதற்காக தலையில் தேங்காய் உடைக்கப்படும் பக்தர்கள் ஆடி மாதம் 1-ம் தேதி முதல் விரதமிருந்து வருகின்றனர்.

    அருள் பெற்ற பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார். தேங்காய் உடைக்கப்படும் நிகழ்வை காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

    • கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,குடிநீர் வசதி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பொதுவெளியில் வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த எர்ர அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,குடிநீர் வசதி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் கூறும் போது, குப்பையில்லா கிராம பஞ்சாயத்தாக எர்ர அள்ளி பஞ்சாயத்தை உருவாக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    குப்பைகளை தினமும் காலையில் வீடு, வீடாக வரும் தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும். அதை விடுத்து ஆங்காங்கே குப்பைகளை பொதுவெளியில் வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்ன ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
    • நீர்நிலைகளை சுத்தப்ப டுத்தி, 300 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சின்ன ஏரி, படேதலாவ் ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இது குறித்து கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறுகையில், கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சின்ன ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    இதே போல கவீஸ்வரர் ஆலய குளம், பெரிய ஏரி, உட்பட ஐந்து நீர்நிலைகளை சுத்தப்ப டுத்தி, 300 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்டோர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கிருஷ்ணகிரி நகராட்சி பகுதி யில், 1,500 மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் (பொ) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரகுமார், கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் முகமது ஆசிப், தேன்மொழி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கெலமங்கலம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த 20 -ம் தேதி நடைபெற்றது.
    • 2 மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட்போட்டிகளை முன்னிட்டு கெலமங்கலம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த 20 -ம் தேதி நடைபெற்றது.

    இந்த போட்டியில் காமராஜர் விருது பெற்ற கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் பங்கேற்றனர். இதில் ஐஸ்வர்யா மற்றும் ஹேமாவதி ஆகிய 2 மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு வழிகாட்டி ஆசிரியை கவிதா, பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வழிப்பாட்டு கூட்டத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    காட்டிநாயனப்பள்ளியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியவாறும் ஊர்வ லமாக வந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி னார்கள்.

    சந்தூர் மாங்கனி மலையில் வேல்முருகன் வள்ளி தெய்வசேனா சமேத கோவில் உள்ளது. இங்கு 53-ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி சாமிக்கு தினமும் பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேல்முருகன் பூ பல்லாக்கில் அலங்க ரிக்கப்பட்டு நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சிலம்பாட்டம் ,காவடி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று ஆடிக்கிருத்தி கையை முன்னிட்டு, காலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து மாரியம்மன் கோயில் முன்பு வீரபத்திரசுவாமி பக்தர்களின் சேவ ஆட்டம், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து காலை 11 மணியளவில் வேல் போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வேல் போட்டு கொண்டும், காவடி எடுத்து சென்று சுவாமியை வழிப்பட்டனர்.

    பிற்பகல் 2 மணியளவில், சந்தூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அந்தரத்தில் தொங்கியபடி, சிடல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், சந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (ஞாயிற்றுக்கி ழமை) சாமிக்கு திருக்க ல்யாண நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சந்தூர் ஊர்பொதுமக்களும், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

    இதே போல எட்ரப்பள்ளி வேல்முருகன் கோவில், ஓசூர் வேல்முருகன் கோயில், அகரம் முருகன் கோவில், ஜெகதேவி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

    • தற்காலிக ஊழியர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
    • மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இந்த ஆஸ்பத்திரிக்கு சொந்தமான அரசு வாகனத்தில் 6 பேர் தருமபுரி மாவட்டம், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்று பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றின் கரையோரம் நின்று மது அருந்திய வீடியோ காட்சி சமீபத்தில் வைரலாக பரவியது.

    அந்த வீடியோவில் அந்த வழியாக வந்த ஒருவர் மது அருந்தும் நபர்களிடம் விசாரித்தார். அதில் தாங்கள் அதே பகுதியில் நோயாளி ஒருவரை பார்க்க வந்துள்ளதாக அந்த ஊழியர்கள் தெரிவித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மருத்துவத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பணியாளர்களிடமும் விசாரணை நடந்தது.

    அப்போது வாகனத்தின் டிரைவர் வாகனத்தில் பழுதை சரிபார்க்க தனியாக சென்றதாகவும், பிற ஊழியர்கள் தனியார் வாகனத்தில் வந்து மது அருந்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 2 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் அரசு துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்ற புள்ளி விவரங்களை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வழங்கினேன்.
    • கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி ரெயில்வே மந்திரி எனக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த இறுதி திட்ட வரைவு தயாரிக்க ஒப்புதல் தந்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஜோலார்பேட்டை , கிருஷ்ணகிரி , ஓசூர் ரெயில் பாதை திட்டத்திற்காக இறுதி திட்ட வரைவு தயாரிக்க ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்காக ரூ.2.45 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் எம்.பி. செல்லகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சுதந்திரம் அடைந்தது முதல் கிருஷ்ணகிரிக்கு ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்காக கடந்த 1995-க்கு பிறகு பல்வேறு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. கடந்த 2019 தேர்தலின் போது கிருஷ்ணகிரி ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்றி தருவேன் என நான் வாக்குறுதி அளித்தேன். அதன்படி நான் மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்தேன்.

    அப்போது இந்த பகுதியில் வருவாய் இருக்காது என்பதை காரணம் கூறினார்கள். அப்போது இங்குள்ள கிரானைட் சங்க தலைவர், மாங்கூழ் உற்பத்தியாளர்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள், ஓசூர் முக்கிய நிறுவனங்களை சந்தித்து அந்த நிறுவனங்களில் இருந்து சரக்கு ரெயிலில் எவ்வளவு பொருட்கள் அனுப்பப்படும். எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்ற புள்ளி விவரங்களை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வழங்கினேன்.

    கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி ரெயில்வே மந்திரி எனக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த இறுதி திட்ட வரைவு தயாரிக்க ஒப்புதல் தந்தார். இது பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 108 கிலோ மீட்டர் பாதை அமைக்க வேண்டும். அதில் 7 கிலோ மீட்டர் அளவிற்கு மலைகள் உள்ளன.

    இந்த பாதையை தொடாமல் 700 மீட்டர் சுரங்க பாதையுடன் மாற்று பாதையும் உள்ளன. இதில் 500 கோடி ரூபாய் வரையில் மிச்சமாகும். இன்னும் 3 மாதத்தில் இந்த ஆய்வு பணிகள் முடிந்து அறிக்கையை மத்திய அரசிற்கு வழங்கி, இந்த நிதி ஆண்டிலேயே இந்த திட்டத்திற்கான நிதியை பெற்று தர முயற்சிகள் ேமற்கொள்வேன். இதை யெல்லாம் ரெயில்வே மந்திரியிடம் கூறியுள்ளேன். நிச்சயமாக கிருஷ்ணகிரி ரெயில்வே பாதை திட்டத்தை பெற்று தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட தலைவர் நடராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், மாநில துணை தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், நகர தலைவர் லலித் ஆண்டனி நிர்வாகிகள் ஆறுமுகம், மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

    • மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    ஓசூர், 

    தமிழ்நாட்டில் மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க.சார்பில் ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார்.

    மேலும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பி.எல்.மனோகர், அன்பரசன், துணைத்தலை வர் முருகன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் நாகேஷ் குமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • பாராட்டு விழா கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.
    • மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாநில பிரசார செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அழகிரிசாமி, மாநில செயலாளர் ஆறு.பக்கிரிசாமி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட வருவாய்த்துறை சங்க செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதே போல 24 மணி நேரமும் கிராமத்திலேயே தங்கி பணி செய்ய வேண்டும் என்ற விதியை தளர்வு செய்து வட்ட அளவில் தங்கி பணி செய்ய ஆவண செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வி தகுதி பட்டப்படிப்பாக உயர்த்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கடந்த, ஜூன் 17-ந்தே தி மத்திய ரெயில்வே மந்திரி என்னிடம் கிருஷ்ணகிரி ரெயில் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
    • கடந்த 3 வருடங்களாக ரெயில் திட்டத்தை பற்றி பேசாத கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லகுமார் தற்போது அவரே இந்த திட்டத்தை கொண்டு வந்தது போல் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    பா.ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பா ளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கிருஷ்ணகிரியில் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி ரெயில் திட்டம் என்பது 70 ஆண்டு கால இந்த மாவட்ட மக்களின் கனவு. இன்று நனவாக போகிறது. அதற்கு மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தான் காரணம்.

    கடந்த, 1996-ல் நான் எம்.பி.,யாக இருந்தபோதுதான் இந்த திட்டத்திற்கான வரைவறிக்கை தயார் செய்யப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் குழு உறுப்பி னராகவும் தொடர்ந்து இருந்து வருகிறேன்.

    இந்த திட்டம் குறித்தும், ஓசுருக்கு மெட்ரோ ரெயில், விமான நிலையம் அமைப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரி களையும் மத்திய மந்திரிகளையும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறோம்.

    கடந்த, ஜூன் 17-ந்தே தி மத்திய ரெயில்வே மந்திரி என்னிடம் கிருஷ்ணகிரி ரெயில் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

    எனவே இத்திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள திட்டம். எம்.பி. என்ற முறையில செல்லகுமார் நாடாளுமன்றத்தில் பேசலாம். கேள்வி கேட்கலாம். ஆனால் மத்தியில் ஆளக்கூடியது பா.ஜனதா அரசு. இந்த அரசால் தான் ரெயில் திட்டம் வந்துள்ளது. கடந்த 3 வருடங்களாக ரெயில் திட்டத்தை பற்றி பேசாத கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி., செல்லகுமார் தற்போது அவரே இந்த திட்டத்தை கொண்டு வந்தது போல் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.

    கடந்த கால கட்டங்களில் வரைவறிக்கை தயார் செய்த போதும் மாநில அரசின் பங்களிப்பு இல்லாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது தமிழக அரசு திவால் ஆகியுள்ளது. இந்த நிலையில் மாநில அரசின் பங்கை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மத்திய அரசு முழுமையாக திட்டத்தை செயல்படுத்தி வரும் 2024-க்குள் கிருஷ்ணகிரியில் ரயில் பாதை அமைக்கும் பணிகளை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டிற்கு மாவட்ட தலைவர்துரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியின்போது, 75 வயது கடந்த ஓய்வூதியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    ஒசூர்,

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட 4 -வது மாநாடு, ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    மாநாட்டிற்கு மாவட்ட தலைவர்துரை தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். மண்டல தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சீனிவாசலு தொடக்க உரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் வெங்கடேசா செயல் அறிக்கையும், பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு, செலவு அறிக்கையும் வாசித்தனர்.

    நிகழ்ச்சியின்போது, 75 வயது கடந்த ஓய்வூதியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மத்திய வருமான வரித்துறை ஓய்வூதியர் சம்பங்கிராமையா, இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்க தலைவர் சத்யநாராயணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இதில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, மலைவாழ், குளிர்கால படிகள், குடும்ப பாதுகாப்பு நிதி 1.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டில் மாவட்ட தலைவராக துரை, செயலாளராகமுருகன், பொருளாளரா கரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைத் தலைவர் குப்பன் நிறைவுரையாற்றினார். முடிவில் இணைச் செயலாளர் கெம்பண்ணா நன்றி கூறினார்.

    ×