என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு வாகனத்தில் சென்று மது அருந்திய விவகாரம்: மருத்துவத்துறை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்
- தற்காலிக ஊழியர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இந்த ஆஸ்பத்திரிக்கு சொந்தமான அரசு வாகனத்தில் 6 பேர் தருமபுரி மாவட்டம், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்று பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றின் கரையோரம் நின்று மது அருந்திய வீடியோ காட்சி சமீபத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் அந்த வழியாக வந்த ஒருவர் மது அருந்தும் நபர்களிடம் விசாரித்தார். அதில் தாங்கள் அதே பகுதியில் நோயாளி ஒருவரை பார்க்க வந்துள்ளதாக அந்த ஊழியர்கள் தெரிவித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மருத்துவத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பணியாளர்களிடமும் விசாரணை நடந்தது.
அப்போது வாகனத்தின் டிரைவர் வாகனத்தில் பழுதை சரிபார்க்க தனியாக சென்றதாகவும், பிற ஊழியர்கள் தனியார் வாகனத்தில் வந்து மது அருந்தியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 2 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அரசு துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






