என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வீட்டை விட்டு சென்ற கிரேசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நாசன்கால் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் கிரேசி (வயது 19).

    இவர் தருமபுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு சென்ற கிரேசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் காவேரிப்பட்டினம் போலீசில் மாது கொடுத்த புகாரின் பேரில் தனது மகளை தருமபுரி அருகேயுள்ள எட்டியானூரை சேர்ந்த ஜெயராமன் என்ற வாலிபர் கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சஞ்சய் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டபள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவரது மகன் சஞ்சய் (வயது 22). இவர் நேற்று மிட்டபள்ளி சாலையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சஞ்சய் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சஞ்சயை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சஞ்சய் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • ஏரி நீரோடு கழிவுநீரும் சேர்ந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது.
    • குழந்தைகளுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சியில் மெயின் ரோட்டை ஒட்டிய வாறு ஆலேரி ஏரி உள்ளது. மிகுந்த பரப்பளவை கொண்ட இந்த ஏரி பகுதியை ஒட்டியவாறு செல்லும் சாலை வழியே மகுண்டமலை , நல்லாகவுண்டனூர் , பெரியார் நகர், போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தினமும் பயணிக்கிறார்கள்.

    இந்தப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் ஏரிக்கு அதிக நீர்வரத்தின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிந்து சாலைகளில் வழியாகவும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் புகுந்து தேங்கியுள்ளது. ஏரி நீரோடு கழிவுநீரும் சேர்ந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது..

    இதனால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருவதால் கடந்த ஒரு வார காலமாக இங்குள்ள குழந்தைகளுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.

    இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக இந்த கழிவு நீரை வெளியேற்ற போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியதில் அதிர்ஷ்டசாலியாக தேர்வாகியுள்ளதாகவும் ரூ.12.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பணத்தை செலுத்திய ஆதிலட்சுமி பல நாட்களாகியும் எந்த வித பதிலும் வராமல் ஏமாற்றமடைந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பேரிகை போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 28).

    இவருக்கு வந்த ஒரு குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியதில் அதிர்ஷ்டசாலியாக தேர்வாகியுள்ளதாகவும் ரூ.12.8 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த எண்ணுக்கு ஆதி லட்சுமி தொடர்புகொண்ட பொது பரிசைப்பெற வாரியாக ரூ.4.22 லட்சம் கட்ட வேணும் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பி பணத்தை செலுத்திய ஆதிலட்சுமி பல நாட்களாகியும் எந்த வித பதிலும் வராமல் ஏமாற்றமடைந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதேபோல காவேரிப்பட்டினம் கோவிந்தராஜபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் சிலம்பரசனுக்கு வந்த குறுந்தகவலை நம்பி தினசரி வருமானம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.1.85 லட்சம் பணம் செலுத்தியுள்ளார்.

    அதன்பிறகு அந்த எண்ணை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிலம்பரசன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். 2 புகார்கள் குறித்தும் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரனை நடத்தி வருகிறார்.

    • ஆற்றுப்படுகை கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே 5 மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்த மழை மற்றும் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் பெய்த கன மழை காரணமாக பாம்பாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

    அதன் முழு கொள்ளளவான 19.6 அடியை அணை எட்டியது.இதையடுத்து அணைக்கு வரும் 5250 கன அடி நீரை அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே 5 மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பாம்பாறு ஆற்றுப்படுகை கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

    • அத்திப்பள்ளம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாணவ, மாணவியருக்கு விலையில்லா 41 மிதிவண்டிகளை வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அத்திப்பள்ளம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா 41 மிதிவண்டிகளை வழங்கினார்.

    இதில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜயலட்சுமி பெருமாள், தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் குண வசந்தரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு ) கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி, முன்னால் ஒன்றியக் குழு துணை தலைவர் ராமமூர்த்தி, பள்ளியின் தலைமையாசிரியர் சிவலிங்கம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சரளா வேலு, மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தா கவுரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் வனஜாமணி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் பழனி, ஆத்மா தலைவர் செந்தில்குமார், அ.தி.மு.க. பாசறை பாண்டியன், ஊராட்சி செயலர் விமலா, பள்ளியின் மேலாண்மை குழுத் தலைவர் கோகிலா, துணைத் தலைவர் சங்கீதா மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை வழங்கினார்.
    • பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக்கல்வி கையேடு வழங்கப்பட்டது.

    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுக்குட்பட்ட கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட இருதுகோட்டையில் சுமார் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது.

    இருதுகோட்டை ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், அனுமந்தபுரம் யசோதாமணி, ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு செய்து சீர்வரிசை வழங்கினார்.

    தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு மற்றும் சத்து மாத்திரைகள், பிரசவ காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நலக்கல்வி கையேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவர்கள் சங்கீதா, கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் சிவகுருநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ரங்க நாதன், ராமச்சந்திரன், அசோக், சந்தோஷ் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.

    • இடிபாடுகளை உடனடியாக சரிசெய்ய மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
    • வாகன உரிமையாளர் ரமேஷ் என்பவருக்கு ஆறுதல் கூறி மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மேயர் சத்யா உறுதியளித்தார்.

    ஓசூர்,

    ஒசூர் மாநகராட்சி, 23-வது வார்டுக்குட்பட்ட பழைய ஏ.எஸ்.டி.சி.ஹட்கோ பகுதியில் தொடர் மழையால் அரசு போக்குவரத்து பணி மனையின் காம்பவுண்டு இடிந்து விழுந்தது.

    இதில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் முழுமையாக சேதமடைந்தது. இந்த நிலையில் ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இடிபாடுகளை உடனடியாக சரிசெய்ய மாநகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும், வாகன உரிமையாளர் ரமேஷ் என்பவருக்கு ஆறுதல் கூறி மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மேயர் சத்யா உறுதியளித்தார்.

    • பள்ளிக்கு ஓசூரை சேர்ந்த தன்னார்வலரும், தொழிலதிபருமான தேனி ராஜேந்திரன் என்பவர் ரூ.40 லட்சம் மதிப்பில், நுழைவாயில் அமைத்து தந்துள்ளார்.
    • இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி நுழைவாயிலை திறந்துவைத்தார்.

    ஓசூர்,

    ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் முல்லைநகர் பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,800 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு ஓசூரை சேர்ந்த தன்னார்வலரும், தொழிலதிபருமான தேனி ராஜேந்திரன் என்பவர் ரூ.40 லட்சம் மதிப்பில், நுழைவாயில் அமைத்து தந்துள்ளார். இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி நுழைவாயிலை திறந்துவைத்தார். தேனி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், பெற்றோர், ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி, தலைமையாசிரியர் அலெக்சாண்டர், ஆசிரிய, ஆசிரியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • முகாமில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஓசூர் பகுதியில் கனமழை பெய்ததில், ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஏரியும் நிரம்பியது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. ஓசூர் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது.

    இந்த மழையால் ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால், அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டனர்.

    ஓசூர் அருகே சின்ன எலசகிரி, பேகேப்பள்ளி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளும் கனமழையால் வெள்ளக்காடாக மாறின.

    ஓசூர் சமத்துவபுரம் அருகே தனியார் குடியிருப்பு பகுதிகளிலும், சமத்துவபுரம் எதிரில் உள்ள அனுமந்தபுரத்திலும் குடியிருப்புகளின் உள்ளே மழைநீர் புகுந்தது. முழங்கால் உயரம் தேங்கிய நீரில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். மேலும் சாந்தபுரம் ஏரி நிரம்பியதால் உபரி நீர் கிராமத்திற்குள்புகுந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர் அதிகரித்து உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத சூழலில் ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கியதுடன் மழைநீர் வடியும் வரை சமத்துவபுரத்தில் பாதுகாப்பாக தங்கவைக்க நடவடிக்கை மேற்கொண்டு உணவு தயாரித்து வழங்கவும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து அந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாசில்தார் சென்று அவர்களுக்கு உணவுகள் வழங்கி வருகிறார்.

    ஓசூர் பகுதியில் கனமழை பெய்ததில், ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஏரியும் நிரம்பியது.

    இதையடுத்து நேற்று மாலை முதல் விடிய விடிய இன்று காலை வரை ஓசூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    • காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.
    • ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்து வரும் மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கிக்கிடக்கிறது. ஓசூர் பஸ் நிலையம் தொடங்கி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம், சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு திரும்பினார். அப்போது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றார்.

    செல்போனை பார்த்தபடியே காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி பகுதியை கடந்தார். ஆனால் மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது தெரியாமல் காரை அந்த தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார். இதனால் காரை வெள்ள நீர் சூழ்ந்தது.

    இதனால் காரை விட்டு வெளியேற முடியாத நிலையில் செல்போன் மூலம் அவசர போலீஸ் உதவியை நாடியுள்ளார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    கூகுள் மேப் பார்த்து வாகனம் இயக்கும் பலர் இவ்வாறு அசம்பாவிதங்கள் சிக்குவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×