என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தகரடப்பகளில் மூடி வைத்து பட்டாசுகளை வெடிக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது .
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விபத்தில்லா திபாவளி கொண்டாடுவது குறித்து ராயக்கோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பி.என்.அனில்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் திபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்கும்போது பெற்றோர்கள் துணையுடன் வெடிக்க வேண்டும்.

    தீ காயம் ஏற்பட்டால் எவ்வாறு முதல் உதவி செய்ய வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் சமையல் அறையில் பட்டாசுவைக்க கூடாது கண்ணாடி பாட்டல்கள், தகரடப்பகளில் மூடி வைத்து பட்டாசுகளை வெடிக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது .

    மேலும் ராயக்கோட்டை முக்கிய பகுதியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

    • கருப்பண்ணன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.
    • அந்த நிலத்தை சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், கட்டிகானப்பள்ளி, கீழ்புதூர், சோமார்பேட்டை உள்ளிட்ட 21 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீ பெரியமாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தால் காளியம்மன் மற்றும் கருப்பண்ணன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் தனி நபர் வாங்கியுள்ளார். எனவே, அந்த இடத்தில் உள்ள சிலைகளை அகற்றிட வேண்டும் என அந்த இடத்தை வாங்கிய நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து அந்த இடத்தை வாங்கியவரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது.

    இந்த நிலையில், அந்த ஆலய அறக்கட்டளையினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: -

    கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள இடத்தில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலய அறக்கட்டளை நிர்வாகத்தால் காளியம்மன் மற்றும் கருப்பண்ணன் சிலை வைத்து, கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள 21 கிராம மக்கள் வழிபட்டு வந்தோம். இதனை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் கிராம மக்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வழக்கு முடியும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர், கிருஷ்ணகிரி தாசில்தார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம்.
    • அதி.மு.க. இரும்பு கோட்டையாக விளங்கும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணைரெட்டி முன்னிலை வகித்தார். மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.

    கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்து கொண்டு பேசியதாவது:-

    எம்.பி, மற்றும் முன்னாள் அமைச்சராகிய நான், கூட்டத்திற்கு பேச வரும் போதே கரண்ட் கட் ஆகி விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே கரண்ட் இருக்காது. கரண்ட்டும் போய் விட்டது, தி.மு.க. ஆட்சியும் போகப்போகிறது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. ஆக, சக்தி இல்லாத கட்சியாக, ஆட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது. கட்சி தொடங்கி 51 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மாபெரும் இயக்கம் தான் அதி.மு.க. இரும்பு கோட்டையாக விளங்கும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. நாற்பதும் நமதே என்று ஜெயலலிதா கூறியதை போல், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிதான் அமோக வெற்றி பெறும். இந்த கிருஷ்ணகிரி தொகுதியிலும் அ.தி.மு.க.தான் வெற்றி பெறப்போகிறது. அதற்கான தேர்தல் பணிகள் இன்று முதல், இந்த ஓசூர் பொதுக்கூட்டத்தின் வாயிலாக தொடங்கி விட்டது.

    ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. தேர்தலின்போது தந்த வாக்குறுதிகள் எதையும் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. நிலையில்லாத ஆட்சியாக தி.மு.க. உள்ளது. இப்போது அங்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும் அ.தி.மு.க.விலிருந்து சென்றவர்கள்தான்.அவர்களை வைத்துதான் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவர் உண்மையான ஆட்சி நடத்தவில்லை. மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர், தெளிவாகவும் உள்ளனர்.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்து, எடப்பாடி பழனிசாமியையே மீண்டும் முதல்வராக்கி இருக்கலாம் என்ற உணர்வு மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. இது தான் உண்மையான நிலைமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர்கள் அன்புக்கரசன், இடிமுரசு ரவி உள்பட பலர் பேசினார்கள். மேலும் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், அமைப்புசாரா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் அசோகா, வாசுதேவன், மஞ்சுநாத், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள், மேற்கு, கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர் முடிவில், மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மதன் நன்றி கூறினார்.

    தொடர்ந்து, தம்பிதுரை எம்.பி. பிரம்மாண்ட கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

    • 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12,200 ஆகும்.
    • 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ஓசூர் பஸ் நிலையத்தில் குட்காவுடன் நின்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டி (23) ஜெகன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12,200 ஆகும்.

    அதே போல கஞ்சா விற்ற கிருஷ்ணகிரி துவாரகாபுரி ஸ்ரீகாந்த் (23), திருவள்ளுவர் நகர் லோகேஷ் (27), பர்கூர் வரமலைகுண்டா பப்போடா (48), தளி பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்ற பெங்களூரு முனீஸ்வர் நகர் ஷேக் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பட்டாசு கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெங்கடாசலபதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் ஆகியோர் அறிவு ரையின்படி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் எனது தலைமையில் பட்டாசு கடைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, சட்டமுறை எடையளவு 2009 மற்றும் பொட்டலப் பொருள் விதிகள் 2011-ன்படி விற்பனை செய்யும் பட்டாசுகளில் உரிய அறிவிப்புகள் இல்லாதது குறித்தும், அதிகப்பட்ச சில்லரை விற்பனை விட கூடுதலாக விற்பனை செய்தல் குறித்தும், தரப்படுத்தப்படாத அலகில் அறிவிப்பு விலைப்பட்டியல் குறித்தும், கிருஷ்ணகிரி, தருமபுரி , அரூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் உள்ள 33 பட்டாசு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில், 2 கடைகளில் விதிகள் மீறப்பட்டது தெரிந்தது. அக்கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
    • ஓசூருக்கு ஒரு தனி அதிகாரி நியமிக்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் (ஹோஸ்டியா), ஹோசியா, சிவில் என்ஜினீயர் சங்கம், வணிகர் சங்கம், கட்டிட தொழிலாளர்கள், கட்டிட பொறியாளர்கள் சங்கம் உள்பட 11 சங்கங்களை சேர்ந்த, 30&க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    பிறகு அவர்கள் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகராட்சி. ஓசூர் புறநகர் வளர் ச்சிக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட 'ஓசூர் அர்பன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி' என்ற புதிய அமைப்பிற்கு நிர்வாக அதிகாரி, செயல் அலுவலர்கள், பணி யாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

    ஒரு நிலத்திற்கான அப்ரூவலுக்காக பல மாத காலங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த, 34 வருடமாக நிலங்கள் முறையாக வரையறுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் நில அங்கீகாரம் பெற சென்னை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    தொழிற்சாலைகள் தொடங்க வருபவர்கள் கூட அப்ரூவல் தாமதத்தால் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். நிலங்களில் கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள், அதை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். தேங்கியுள்ள நிலங்களை வரையறை செய்து உடனடி அப்ரூவ் வழங்காததால் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    எனவே ஓசூரில் மாஸ்டர் பிளான் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், அப்ரூவல் பெறுவதற்கான ஆன்லைன் வழிமுறைகள் குறித்து கட்டிட பொறியாளர்களுக்கு பயிற்சி தர வேண்டும், மாவட்ட டி.டி.சி.பி., அலுவலகத்தில் உள்ள துணை இயக்குனர் மூன்று மாவட்ட அலுவலக பொறுப்புகளை கவனித்து வருகிறார். அதனால் ஓசூருக்கு ஒரு தனி அதிகாரி நியமிக்க வேண்டும்,

    முதலீடு செய்த நில உரிமையாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பொறியாளர்கள், மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து சங்கங்களையும் காப்பாற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வெள்ளிக்கிழமை தோறும் ஆடு மாடு கோழி விற்பனை நடைபெற்று வருகிறது
    • 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை யாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு மாடு கோழி விற்பனை நடைபெற்று வருகிறது தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி தர்மபுரி வேலூர் மற்றும் கர்நாடகா ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 8000 ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முறமாக நடைபெற்று வருகிறது தமிழகத்தில் சென்னை வேலூர் மதுரை கோவை சேலம் திருச்சி ஈரோடு பொள்ளாச்சி விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா பெங்களூர் ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    பண்டிகை இல்லாத இதர நாட்களில் வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக 10 முதல் 12000 வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக 5 ஆயிரம் முதல் 7000 வரையிலும் விற்பனை செய்யப்படும் தற்போது பண்டிகை முன்னிட்டு அதிக விலையில் ஆடுகள் விற்பனை ஆகிறது கிடா ஆடு 12 முதல் 15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடு 7000 முதல் 8000 வரையிலும் விற்பனை ஆகிறது. இதனால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர். சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக் கணக்கான மக்கள் வியாபாரிகள் பொதுமக்கள் விவசாயிகள் குவிந்து உள்ளனர். இன்று மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை யாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மெகா சிறப்பு தூய்மைப்பணி முகாம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நடந்தது.
    • நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி இணைந்து, மெகா சிறப்பு தூய்மைப்பணி முகாம், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நடந்தது. நிகழ்ச்சியில், மகளிர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில், மாணவிகள் கே.ஆர்.பி. அணையில் உள்ள பூங்கா, நீர் நிலைகள், புல்வெளி மற்றும் சாலைகள் உள்பட அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தினார்கள். முடிவில் ஊராட்சிகள் பிரிவு கண்காணிப்பாளர் சுபராணி, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா தேசிய சேவை தொண்டர்கள் கஸ்தூரி, கலைவாணி, நவீன், ரோஜா, பாலாஜி, திவ்யபாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியுள்ளார்.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பள்ளிகள் அருகாமையில் உள்ள கடைகளில் போதை சாக்லேட் விற்பதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மாவட்ட நியமன அலுவலர் அறிவுத்தலின் பேரில் ஊத்தங்கரையில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஊத்தங்கரை வணிகர் சங்க செயலாளர் உமாபதி இருந்தார்.

    ஆய்வின் போது சந்தேகத்துக்குரிய சுமார் ஒரு கிலோ எடையுள்ள சாக்லேட்டை சங்கர் டிரேடிங் கம்பெனியில் கண்டறியப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    சோதனை முடிவில் சாக்லேட்டுகள் அனைத்தும் போதை சாக்லேட் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியுள்ளார்.

    • ரூ.60 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
    • கைது செய்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அருகேயுள்ள அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 20). சம்பவத்தன்று ஓசூர் ரிங்ரோடு சாலையில் முனீஸ்வரர் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் கத்தியை கட்டி காட்டி மிரட்டி பாரத் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் பாரத் புகார் தந்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தபோது பாரத்திடம் செல்போனை பறித்து சென்றது கர்நாடக மாநிலம் பெங்களூரு துவாரகா நகரை சேர்ந்த சீனிவாசா (19) என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து பாரத்திடம் ஒப்படைத்தனர்.

    • தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.
    • உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.சி.சி.நகரில் பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் நேற்று மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தெருக்களில் புகுந்த தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து அனைத்து பொருட்களும் சேதமானது.

    மழைநீர் புகுந்ததால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இதனால் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாதுகாப்பாக ரப்பர் படகு மூலம் பொதுமக்களை மீட்டனர். உடைந்த ராஜகால்வாய்க்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இதனால் மெல்ல மெல்ல வெள்ளம் குறைந்து வருகிறது. கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கே.சி.சி. நகரில் தண்ணீர் வடிந்தது.

    குடியுருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளது.வெள்ளம் வடிந்ததால் கே.சி.சி. நகர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    மீட்பு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஓசூர் தர்கா ஏரியிலிருந்து உபரிநீர் வரும்போது, கால்வாய் உடைப்பு ஏற்பட்டு கே.சி.சி.நகரில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மழை அதிகமாகும் பட்சத்தில், பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல 2 திருமண மண்டபங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வருவாய்த்துறை, மாநகராட்சித் துறை, பொதுப்பணித்துறை தீயணைப்பு துறை, காவல் துறை மூலம் ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், மீட்பு பணிகள், முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. மழை தீவிரம் அடைந்தால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
    • கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் பொலிகாளை கொட்டகைக் கட்டிடங்களை பார்வையிட்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கள கண்காணிப்பு கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் மற்றும் மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக் கூட கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் பொலிகாளை கொட்டகைக் கட்டிடம் என மொத்தம் ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.எ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து, ஆய்வுக்கூட கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் பொலிகாளை கொட்டகைக் கட்டிடங்களை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், உதவி இயக்குனர்கள் இளவரசன், அருள்ராஜ், ரவிச்சந்திரன் ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×