என் மலர்
கிருஷ்ணகிரி
- சீனிவாசன் ரூ.4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
- ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மனம் உடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள குடிச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40).விவசாயி. அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சீனிவாசன் ரூ.4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து பல நாட்களாகியும் வாங்கியவர் அதனை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று மனம் உடைந்த சீனிவாசன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சீனிவாசனின் மனைவி ரத்னா தந்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறுமி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- சிறுமியையும், கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பத்தமாரப்பள்ளி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பாகலூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற அந்த சிறுமி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் விசாரித்தும் சிறுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிவா (வயது 22) என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறுமியையும், கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.
- கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
- 20-க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்த நிலையில் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள கட்டாயம்பேடு. பாலனப்பள்ளி கே.என்.போடூர், பதிமடுகு, கங்கமடுகு, சிங்கிரிப்பள்ளி, தீர்த்தம் மற்றும் கர்நாடக மாநில கிராமங்களில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் , ஆண்கள் பாகலூர் பேரிகை மற்றும் கர்நாடகா மாநில பகுதி சர்ஜபுரம், பெங்களூர் மாலூர் மாஸ்தி ஆகிய பகுதிகளில் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்களை இப்பகுதியில் இருக்கும் முனியப்பன் என்கிற வேன் ஓட்டுநர் தன் சரக்கு வேனில் தினமும் அழைத்துச் சென்று வேலை முடிந்த பின் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில்நேற்று வேலை முடிந்து சுமார் மாலை 4 மணி அளவில் வேப்பனப்பள்ளி நோக்கி சரக்கு வேன் ஆட்களை ஏற்றி வந்து கொண்டிருதது. அப்போது ராமன் தொட்டி அருகே வனப்பகுதியில் ஆபத்தான வளைவுகளில் சரக்கு வேன் வந்த போது அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே போடூர் கிராமத்தை சேர்ந்த வீரபத்திரன் மற்றும் கட்டாயம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கா என்ற பெண் 2 பேரும் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர். மேலும் 10 அடி பள்ளத்தில் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பேரிகை போலீசருக்கு தகவல் தெரிவித்து அங்கு விரைந்து வந்த பேரிகை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக ஓசூர்,சூளகிரி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திலேயே பலியான வீரபத்திரன் மற்றும் சின்னக்கா இருவரின் உடலை கைப்பற்றி உடல் பிரதேசத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்த நிலையில் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
மாநில கல்வி கொள்கையை வகுப்ப தற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழுவிற்கு கருத்துக்களை அனுப்பு வதற்கு கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் உயர் மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
அந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பென்ச், டெஸ்க் மற்றும் உபகரணங்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.
- ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சி ஆரம்ப பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியில் 15 -வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் அவருடைய வார்டு மேம்பாட்டு நிதி மூலம் பள்ளிக்கு தேவையான பென்ச், டெஸ்க் மற்றும் உபகரணங்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கினார்.முன்னாள் எம்.பி.யும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் பெருமாள், தலைமை ஆசிரியை தமிழரசி மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
- வெற்றிபெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவடைந்ததையொட்டி, சென்னையில் இருந்து வரப்பெற்ற தீபச்சுடரை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பெற்று, வட்டார அளவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, பொது சுகாதாரத் துறையின் சார்பாக ஒவ்வொரு வட்டார அளவிலும் கடந்த 6-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளை மாவட்ட அள வில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 17-ந் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டு, 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்து வட்டார அளவிலும் சுகாதார துறை சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மருத்துவ துறையில் ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும், மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட திட்ட அலுவலர் (தொற்றாநோய்) டாக்டர்.திருலோகன், டாக்டர்கள். விமல், திலக்குமார், சுரேஷ், சங்கீதா, மரைத்தென்றல், சுகாதாரப் பணிகள் நலக்கல்வியாளர் சப்தமோகன், நேர்முக உதவியாளர் மாதை யன்,மாவட்ட பூச்சியியல் நிபுணர் முத்துமாரியப்பன், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பியூலா ஏஞ்ச லின் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இணையதளங்களில் தகவல்களை தேடி உள்ளார்.
- ரூ.2.16 கோடி ஏமாற்றிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51). இவர் ஆட்டோெமாபைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் சில தொழில்களில் இறங்க ஆசைப்பட்ட மோகன்ராஜ் அதற்காக இணையதளங்களில் தகவல்களை தேடி உள்ளார்.
அப்போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில் தற்போது மருந்து பொருட்களை வாங்கி விற்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும், தங்கள் மூலமாக மருந்து பொருட்களை வாங்கினால் அதிக அளவில் கமிஷன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து சுமார் 13 வங்கி கணக்குகள் மூலம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 500-ஐ மோகன்ராஜ் செலுத்தி உள்ளார். ஆனால் எந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு மருந்து பொருட்கள் வரவில்லை.
இதையடுத்து தனக்கு வந்த இ-மெயில் முகவரி குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்ராஜ் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜிடம் ரூ.2.16 கோடி ஏமாற்றிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
- மனைவி ராணி கடந்த 14-ந்தேதி அன்று இறந்தார்
- மனைவி இறந்த மறுநாள் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே பெரியதள்ளப்பாடி அடுத்துள்ள கெடகானூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது55). இவரது மனைவி ராணி (45). இவர் கடந்த 14-ந்தேதி அன்று இறந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தன் மனைவி இறந்த மறுநாள் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆனந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலில் கடிபட்ட காயங்களுடன் கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை அருகேயுள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35). இவர் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் வனப்பகுதிக்குள் தேடி சென்றுள்ளனர்.அப்போது அவர் உடலில் கடிபட்ட காயங்களுடன் கிடந்தார். உடனே அன்பழகனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சுத்த தந்த புகாரின்பேரில் மகாரா ஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பழகனின் உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டை விட்டு சென்ற திவ்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி திவ்யா (வயது 24).இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற திவ்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கும் போகவில்லை.
இதையடுத்து பல்வேறு இடங்களில் விசாரித்தும் திவ்யா குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
எனவே காணாமல் போன திவ்யாவை கண்டுபிடித்து தருமாறு பேரிகை போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார் .
அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.
- மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொண்டு தரம் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்றது.
துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய மேயர் சத்யா, ஓசூர் மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிப்பணிகளுக்காக மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொண்டு தரம் உயர்த்தப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- சிறந்த கால்நடைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி திரவுதியம்மன் கோவில் வளாகத்தில் கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி மற்றும் கால்நடை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்து கால்நடைக்ககான சிகிச்சை முகாமை தொடக்கி வைத்தனர்.
முகாமில் மத்தூர் அரசு கால்நடை மருத்துவர் சுப்பிரமணி கால்நடைகளுக்கு தடுப்பூசி சிகிச்சை, கருவூட்டல், குடற்புழு நீக்கம் மற்றும் ஊட்டச்சத்து பவுடர் வழங்கல் உள்ளிட்ட சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளித்தார். அதேபோல் சிறந்த கால்நடைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இம்முகாமில் ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.






