என் மலர்
கிருஷ்ணகிரி
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
- சுங்கச்சாவடியை இட மாற்றம் செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு இரவு நேரங்களில் நோயாளிகள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில், காவேரிப்பட்டணம் கிளை இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் போலுப்பள்ளி என்னுமிடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு செல்போன் சிக்னல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்ல ஏதுவாக, டவுன் பஸ்கள் கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக இயக்க வேண்டும். மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலை பிரிவு தடுப்பினை அகற்றி, பொதுமக்கள் நேராக மருத்துவமனைக்கு சென்று திரும்பும் போது, வலது பக்கம் செல்ல சாலையை கடக்க ஏதுவாக யு வளைவு அமைக்க வேண்டும்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை இட மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை அவ்வழியே மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமையில், ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதி, தேசிய நெடுஞ்சாலை அருகில் சுமார், 35 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். தற்போது அந்த இடத்தை காலி செய்யமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள் ஆவர். எங்களை திடீரென இப்பகுதியில் இருந்து காலி செய்ய அதிகாரிகள் கூறுகின்றனர். எங்களுக்கு வேறு எங்கும் வீடோ, நிலமோ இல்லை. எனவே எங்கள் அனைவருக்கும் மாற்று இடம் வழங்கி, வீடு கட்டி தர ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிலத்தை அபகரிக்க உறவினர்கள் சிலர் முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
- கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடந்தார்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த தேவர்முக்குளம் அருகேயுள்ள ராமேனத்தத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 51).
இவரது கணவர் ராஜேந்திரன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து பழனியம்மாள் தனது தாய் நாகம்மாளுடன் வசித்து வந்தார்.இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது.
பழனியம்மாளுக்கு வாரிசுகள் இல்லாததால் அந்த நிலத்தை அபகரிக்க உறவினர்கள் சிலர் முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பழனி யம்மாள் நேற்று கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடந்தார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவேரிபட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் பழனியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் பழனியம்மாளின் உறவினர்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில வாரங்களாக இவர்கள் வளர்த்து வந்த மாடுகளுக்கு அம்மை நோய் வந்து 5 மாடுகள் இறந்தது.
- வருடத்தில் ஒரு முறை விமர்சையாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் நிறுத்தி வைத்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சென்னப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த மேடுபள்ளி கிராமத்தில் 150-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் குரும்பர் இன மக்கள் என்பதால் அதிக அளவு கால் நடைகள் வளர்ப்பதும், தோட்டங்களில் பயிர் செய்வதும் முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
இவர்கள் கால்நடைகள் என்றால் உயிராக நினைப்பர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இவர்கள் வளர்த்து வந்த மாடுகளுக்கு அம்மை நோய் வந்து 5 மாடுகள் இறந்தது.
இதனால் வருடத்தில் ஒரு முறை விமர்சையாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் நிறுத்தி வைத்தனர்.
தற்போது 15 நாள் கழித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- இன்றுகாலை வீட்டின் அருகில் பழனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
- இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது55). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ராஜேந்திரன் இறந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றுகாலை வீட்டின் அருகில் பழனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் இன்றுகாலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியம்மாளின் சொத்தை தனது 2-வது அக்காவின் பெயரில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை ஏற்பட்டு அவரை கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.
- மனுஸ்மிருதி” என்ற நூலை விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
- ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், "மனுஸ்மிருதி" என்ற நூலை விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலையருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு ஓசூர் பஸ் நிலையம், பழைய பெங்களூர் ரோடு ஆகிய இங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு நூலை விநியோகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், மாநில ஒழுங்கு குழு துணை செயலாளர் பாவேந்தன், மேற்கு மாவட்ட செயலாளர் மாயவன், சூரியவளவன், ஜீபி கிருஷ்ணன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ. 90 -லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
- நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எமகல்நத்தம், மல்லபாடி, கூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி கட்டிடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ. 90 -லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.
இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர்கள் தம்பிதுரை, சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், மகேந்திரன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பெங்களூரில் இருந்து பொம்மனஹள்ளி வரையில் உள்ள மெட்ரோ ரெயில்வே திட்டம் ஓசூர் வரை நீடிக்க வேண்டும் என கர்நாடகா மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையுடன் சென்று கர்நாடக முதலமைச்சர் பசராஜ் பொம்மை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
- தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே உள்ளேன்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி. மாவட்டம் ஓசூர் அடுத்து தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தமிழ்நாடு காஸ் கட்சியினுடைய மாநில செயலாளர் வீரமுனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி நாடாளு மன்ற தொகுதியில் நான் வேட்பாளராக அறிமுகம் செய்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் தேர்தல் வாக்குறுதி வழங்கினேன். அந்த வாக்குறுதியானது. கடந்த சுமார் 75 ஆண்டு காலமாக நிலையிலுள்ள ெரயில்வே திட்டம் செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தேன்.
தவறும் பட்சத்தில் ஓர் ஆண்டுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்தேன். ஓர் ஆண்டு காலம் ஆகியும் நிறைவேற்றுவதற்குள் கொரோனா தொற்று நோய் காலம் நெருங்கியதால் காலதாமதமானது இருப்பினும் ெரயில்வே திட்டத்தைப் பற்றி ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் நிர்வாகத்திடம் கலந்து பேசி உள்ளேன். நான் மத்திய ெரயில்வே துறை அமைச்சரிடம் வலியுறுத்ததின் பேரில் ரூ.2 கோடி 45 லட்சம் ஒதுக்கீடு செய்து சர்வே செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எந்த விவாத மேடையிலும் குற்றவாளி கூண்டில் ஏறி நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எந்த காலகட்டத்திலும் ெரயில்வே திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன்.
மேலும், பெங்களூரில் இருந்து பொம்மனஹள்ளி வரையில் உள்ள மெட்ரோ ெரயில்வே திட்டம் ஓசூர் வரை நீடிக்க வேண்டும் என கர்நாடகா மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையுடன் சென்று கர்நாடக முதலமைச்சர் பசராஜ் பொம்மை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் விரைவில் தமிழக அரசு ஒப்புதலோடு செயல்படுத்தப்படும். அதுமட்டுமில்லாமல் பழுதடைந்துள்ள திண்டிவனம் சாலையை மத்திய அமைச்சரிடம் நேரில் அணுகி திட்டம் 80 சதவீத பணி நிறைவு பெறும் வகையில் உள்ளது.
ஒரு சிலர் தவறான தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். தொகுதி மக்களுக்கு சேவையாற்றவே உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் எஸ். காசிலிங்கம் ஜேசு துரைராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி. சேகர், கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஹரிஷ் பாபு கிர்த்தி கணேஷ் டி.எம். சீனிவாசன் பிரபாகரன், ஓ பி சி குமார், மகளிர் அணி சரோஜாம்மாள், இளைஞர் காங்கிரஸ் அணில் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரதாப், சுரேஷ், எம் டி செல்வம் தங்க பாண்டியன் பர்கத், முனுசாமி ரெட்டி, முரளி உள்பட பண கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் தேன்குஅன்வர் வரவேற்றார். முடிவில் தேன்கனிக்கோட்டை நகர தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.
- அந்த மாணவியும், ராஜ்குமாரும் காதலித்து வந்தது தெரியவந்தது.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள கரடியூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி அன்று மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் ெவகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாய் எனது மகளை பர்கூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது22) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவியும், ராஜ்குமாரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் நேற்று ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
- திருச்சிபள்ளி என்ற இடத்தின் அருகில் வந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரஞ்சிதா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள குமுதேப்பள்ளி ராஜாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ். இவரது மனைவி ரஞ்சிதா (வயது25). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சிபள்ளி என்ற இடத்தின் அருகில் வந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரஞ்சிதா கழுத்தில் அணிந்து இருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று அந்த நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் காப்பர் வயர் 15 கிலோ திருடி கொண்டிருந்தார்.
- சுற்றி வளைத்து பிடித்து அந்த திருடனை உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது47). இவர் உத்தனப்பள்ளி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அந்த நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் காப்பர் வயர் 15 கிலோ திருடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி சுற்றி வளைத்து பிடித்து அந்த திருடனை உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உத்தனப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்த ஏழுமலை (28) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- சரவணகுமார், மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் வேட்டியம்பட்டி சரவணன் தலைமையில், ஆட்டோ சங்க தலைவர் வடிவேல், நிர்வாகிகள் சரவணன், ஜெய்கிஷோர், சரண்ராஜ், சிவபாலன், பிரதாப், நிரேஷ், ராம், விஜய், மிதுன், சங்கர், கோபி, பாலாஜி, ஹரி, சத்தீஷ், தனுஷ், சரவணகுமார், மகேஷ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், ராஜேந்திரன், நாகோஜனஅள்ளி பேரூர் செயலாளர் தம்பிதுரை, நிர்வாகிகள் செந்தில், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






