என் மலர்
கிருஷ்ணகிரி
- பா.ம.க கொடியை சேதப்படுத்திய மூவர் மீது மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர், சவூள்கொட்டாய் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் (வயது 43). இவர் நேற்று மாலை தனது காரில் மத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது மத்தூர் பகுதியை சேர்ந்த வசந்தி, சின்னமணி, தமிழ் ஆகிய மூவரும் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் மீது இரு சக்கர வாகனம் லேசாக உரசியுள்ளது. இதன் காரணமாக கார் உரிமையாளருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணி காரில் இருந்த பா.ம.க. கட்சி கொடியை பிடுங்கி சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் சந்திரன் பா.ம.க கொடியை சேதப்படுத்திய மூவர் மீது மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பின்னர் மத்தூர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் அவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மத்தூர் போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 73 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
- ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டத்திற்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் வந்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளான நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் ஆகிய 73 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
8- வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் , கட்டுரை, பேச்சு போட்டி, கை எழுத்து போட்டி, பாட்டு போட்டி, சிற்பம் வடித்தல், பட்டி மன்றம், கவிதை போட்டிகள், நடனம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெருகிறது. அதற்காக இன்று வருகை தந்த மாணவர்கள் ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டத்திற்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் வந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் முத்தே கவுடா தலைமையில் சிறப்பு விருந்தினராக ஓசூர் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் பி.டி.ஏ. தலைவர் ராமன், நிர்வாகிகள் சேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- மகா ருத்ர விழா, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
ஓசூர்,
ஓசூர் பக்த ஜனசபா சார்பில்,பஸ்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று 19 வது சாஸ்தா பிரீதி அய்யப்பன் பூஜை மற்றும் மகா ருத்ர விழா, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறவுள்ள விழாவில், காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை,ஆன்மீக சொற்பொழிவு, திருமுறை விண்ணப்பம், திருப்புகழ் சம்பூரண நாராயணியம் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மேலும்,பக்தர்களுக்கு 3 வேளையும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை, விழாக்குழு தலைவர் சத்ய வாகீஸ்வரன், செயலாளர் ஜெயராமன், பொருளாளர் ராமகிருஷ்ணா, ஒருங்கிணைப்பாளர் மணியன், தமிழ்நாடு பிராமண சங்க ஓசூர் மாநகர தலைவர் சுதா நாகராஜன் மற்றும் ஜனசபா நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.விழாவில் இன்று மாலை 6.30 மணிக்கு, துஷ்யந்த் ஸ்ரீதரின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.
- அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
- திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கு ஒரே சீரான வகையில் சென்றவடைவதை உறுதி செய்ய வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசின் முதன்மை செயலாளருமான (நிலச்சீர்திருத்தம்) டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 27.10.2022 அன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-
இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதே போல வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் அறிவித்துள்ள முன்னோடி திட்டங்கள் அனைத்து பகுதி மக்களுக்கு ஒரே சீரான வகையில் சென்றவடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, வருவாய் துறையில் 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் பதிவேடுகள் தணிக்கை குறித்து வருவாய் துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆலோசனை நடத்தினார். மேலும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
- ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடந்தது.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். கிளை செயலாளர் முனிரத்தினம், முன்னாள் தலைவர் மோகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில், மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாத்திட வேண்டும். மின்சார திருத்தம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். கடந்த ஏப்ரல் 12-ந் தேதி வெளியான மின்சார ஆணையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
விதவை, விவாகரத்து ஆனவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். கடந்த 2003 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின்பும், முன்பும் ஓய்வு பெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நடந்தது.
- 500 மகளிருக்கு இலவசமாக சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார்.
நகராட்சி தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரைசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி ஆர்.எஸ்.கிரி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 500 மகளிருக்கு இலவசமாக சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பாலன், நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், வேலுமணி, பாலாஜி, மதன்ராஜ், தேன்மொழி மாதேஷ், சீனிவாசன், சக்திவேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நிலுவையில் உள்ளது.
- ராதாகிருஷ்ணனை மீண்டும் தருமபுரி சிறையில் போலீசார்அடைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நியூ டெம்பிள் அட்கோ பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் மீது திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல், கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நிலுவையில் உள்ளது.
பிரபல ரவுடியான ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க வலியுறுத்தி ஓசூர் உதவி கலெக்டரால் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு வந்துள்ளது. தற்போது இவ்வாறு இவர் நன்னடத்தைக்காக ஓராண்டு பிணைய பத்திரம் பெற்றுள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்தது. இதையடுத்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், நன்னடத்தை விதிகளை மீறிய குற்றத்துக்காக ராதாகிருஷ்ணனை உதவி கலெக்டர் சரண்யா முன்னிலையில் ஆஜர்படுத்தினார்.
இது குறித்து விசாரித்த உதவி கலெக்டர் சரண்யா ஏற்கனவே நன்னடத்தை விதியை மீறிய ராதாகிருஷ்ணனுக்கு நிலுவையில் உள்ள 6 மாத சிறை தண்டனையில் அடைக்கும்படி உத்தர விட்டார். அதன்பேரில் ராதாகிருஷ்ணனை மீண்டும் தருமபுரி சிறையில் போலீசார்அடைத்தனர்.
- வானவில் மன்றத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் திறனை பார்வையிட்டார்.
- சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சுழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் திறனை பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 166 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 106 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 296 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 568 பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் மனபான்மையை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துகள் குறித்து சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சுழலை உருவாக்குவது இதன் நோக்கமாகும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப பள்ளியில் இருந்தே அடிப்படை கல்வி அறிவு வழங்க வேண்டும். வானவில் மன்றத்தின் நோக்கத்தை செம்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் தாங்கள் தயார் செய்த அறிவியல் பூர்வமான பொருட்களை கொண்டு செயல் விளக்கங்களை செய்து காட்டினார்கள். மேலும், மாணவ, மாணவிகளே தயார் செய்த கைவினைப் பொருட்களை கலெக்டர் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
- சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன.
- நெய்வேலி ஜவகர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஓசூர்,
சி.பி.எஸ்.சி. பள்ளி களுக்கிடையே தென்மண்டல அளவில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி, மாணவிகளுக்கான கால்பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதகொண்டபள்ளியில் உள்ள, எம்.எம்.எஸ். சி.பி.எஸ்.சி. பள்ளியில் 2நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், உள்ளிட்ட சி.பி.எஸ்.சி.பள்ளிகளில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன.
இறுதி போட்டியில் நெய்வேலி ஜவஹர் சி.பி.எஸ்.சி.மேல்நிலைப்பள்ளியும், ஈரோடு சி.எஸ். அகடாமி மேல்நிலைப்பள்ளியும் போட்டியிட்டன. அதில் நெய்வேலி ஜவகர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மேலும் இந்த அணி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஒசூர் எம்.எல்.ஏ.. ஒய்.பிரகாஷ் கோப்பையை வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும் இதில்,ஓசூர் துணை மேயர் ஆனந்தய்யா, பள்ளி செயலாளர் எம்.மேரு, பள்ளியின் முதல்வர் பிரபு,பொருளாளர் ஆலிவர் சாலமன்,சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் விளையாட்டு பிரிவு ஆணையர் சைமன் ஜார்ஜ், மேற்பர்வையாளர் கமலராஜ், உள்பட பலர் கொண்டனர்.
- ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வர்பாபு வரவேற்றார். மாநில துணை தலைவர் நரசிம்மன், முன்னாள் மாநில தலைவர் சென்னப்பன், முன்னாள் மாநில சட்ட செயலாளர் நந்தகுமார், முன்னாள்மாவட்ட செயலாளர் அமர்நாத், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர்சி றப்புரையாற்றினார்கள்.
மாவட்ட தலைமை நிலைய செயலாளர் பிரபாகரன், மாவட்ட சட்ட செயலாளர் திம்மப்பா,செய்தி தொடர்பு செயலாளர் செந்தில்குமார், துணை தலைவர்கள் ஜெயராமன், வெங்கடாசலம், பரந்தராமன், இணை செயலாளர்கள் சின்னசாமி, ஜெயசந்திரன், ரவீந்திரநாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணிகளை வழங்க கூடாது. ஜூலை 1-ந் தேதியில் இருந்து முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். முடக்கி வைக்கப்பட்டள்ள இ.எல். சரண்டர் ஐ ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- தந்தையின் நிலத்தை பிரித்து கொள்வது தொடர்பாக ஜெயராமனுக்கும், பழனிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
- நிலத்தகராறில் விவசாயியை உறவினரை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேக்குப்பம் அருகேயுள்ள கீழாண்டி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பூவன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கோவிந்தம்மாளுக்கு ஜெயராமன் என்ற மகனும், இரண்டாவது மனைவி பச்சையம்மாளுக்கு பழனி என்ற மகனும் உள்ளனர்.
தந்தையின் நிலத்தை பிரித்து கொள்வது தொடர்பாக ஜெயராமனுக்கும், பழனிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இது தொடர்பாக காவேரிபட்டணம் போலீசில் பழனி புகார் கொடுத்து அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை பழனி கொல்லாகுடி அம்மன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஜெயராமனும், அவரது மகன்கள் 2 பேரும் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களை எடுத்து பழனியை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பழனி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் பழனி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு டேம் மற்றும் காவேரிபட்டணம் போலீசார் விரைந்து வந்து பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பழனியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்நிலையில் குருபரபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மகாராஜாக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் நேரில் வந்து இந்த படுகொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடிய ஜெயராமன் மற்றும் அவரது மகன்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தகராறில் விவசாயியை உறவினரை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் அருணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயறு வகைப்பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க 975 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் உளுந்து பயிர் மட்டும் 638 ஹெக்டேர் ஆகும்.
தற்போது நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் அதனைப் பயன்படுத்தி, தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயறுவகைப்பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முன்வர வேண்டும். பயறுவகைப் பயிர்களில் விதைப்பண்ணை அமைப்பதினால் மண்ணிற்கு தேவையான தழைச்த்து காற்றிலிருந்து நிலைப்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் தரம் மேம்படுகிறது.
மேலும் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாலும், ஊக்குவிப்பு மானியம் வழங்கப்படுவதாலும் லாபமும் பெற முடியும். எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






