என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ம.க. கொடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர் காவல் நிலையத்தை பாட்டாளி மக்கள் கட்சியினர் முற்றுகை
- பா.ம.க கொடியை சேதப்படுத்திய மூவர் மீது மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர், சவூள்கொட்டாய் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் (வயது 43). இவர் நேற்று மாலை தனது காரில் மத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது மத்தூர் பகுதியை சேர்ந்த வசந்தி, சின்னமணி, தமிழ் ஆகிய மூவரும் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் மீது இரு சக்கர வாகனம் லேசாக உரசியுள்ளது. இதன் காரணமாக கார் உரிமையாளருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த பெண்மணி காரில் இருந்த பா.ம.க. கட்சி கொடியை பிடுங்கி சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் சந்திரன் பா.ம.க கொடியை சேதப்படுத்திய மூவர் மீது மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பின்னர் மத்தூர் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் அவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மத்தூர் போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.






