என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மின்பாதைகளில் பணியில் ஈடுபடும் போது உரிய உபகரணங்கள் கொண்டு மின்மாற்றிகளை எவ்வாறு இயக்க வேண்டும்.
    • மின்விபத்துகள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்னார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி உத்தரவின் போச்சம்பள்ளி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தலைமையில் காலாண்டு பாதுகாப்பு வகுப்பு பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சி வகுப்பிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு) ராஜா மின்சார வாரிய பணியார்களிடம் மின் விபத்து குறித்தும், பணியாளர்கள் மின்பாதைகளில் பணியில் ஈடுபடும் போது உரிய உபகரணங்கள் கொண்டு மின்மாற்றிகளை எவ்வாறு இயக்குவது, மின்விபத்துகள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்னார். முன்னதாக இப்பயிற்சி வகுப்பிற்கு மத்தூர் உதவி செயற்பொறியாளர் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதில் போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின், ஊத்தங்கரை உதவி செயற்பொறியாளர் மணி, பர்கூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜ் மற்றும் போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட உதவி பொறியாளர்கள், மின்பாதை மேற்பார்வையாளர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மத்தூர் உதவி பொறியாளர்கள் பெருமாள், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பல்வேறு பணிகளின் பதிவேடுகளையும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும். அவர், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
    • ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள், வரி வசூல் மற்றும் சுகாதார, தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் பதிவேடுகளையும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும். அவர், அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது, ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.18 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    தளி ஊராட்சி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி மற்றும் தளி ஊராட்சி ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 83 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் நகரபகுதியில் உள்ள அனைத்து வசதிகளுக்கு இணையாக கிராமபுறம் மற்றும் தளி போன்ற கடைகோடி மலைகிராம மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள், பஸ் வசதிகள், உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக தளி போன்ற மலை கிராம மாணவர்கள் பயன் பெறும் வகையில் முதல்&அமைச்சர் 2021-2022 புதியதாக அரசு கலைக்கல்லூரியும், தேன்கனிக்கோட்டையில் புதிதாக அரசு தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கி உள்ளார். இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. அதேப்போல இன்று தளி ஊராட்சி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி முதல் சின்னமேனகரம், பெரியமேனகரம் வழியாக குமார்னபள்ளி வரை ரூ.3 கோடியே 87 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும், மதகொண்டப்பள்ளி முதல் சாத்தனூர், கொத்தப்பள்ளி வழியாக கும்ளாபுரம் ரோடு வரைரூ.2 கோடியே 99 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும் பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தளி ஊராட்சியில் ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பில் தளி பேலாளம் சாலை முதல் காடுகெம்பத்பள்ளி வரையும், தளி முதல் தேவர்பெட்டா வரை ரூ.4 கோடியே 57 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து, சாலை பணிகள் என மொத்தம் ரூ.18 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுளளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசரெட்டி, உதவி செயற்பொறியாளர்கள் சிவசங்கரன், ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், நாகரத்தினம், உதவி பொறியாளர் மணிவண்ணன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • நேற்றிரவு விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
    • குருபிரகாஷ் அறை மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராயக்கோட்டை,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது39). இவரது மனைவி தீபா. இவருக்கு குருபிரகாஷ் (15), மனோ (14) ஆகிய 2 மகன்கள் உள்ளன. தீபா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆண்டு இறந்தார். குருபிரகாஷ் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறை தினமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த 10 நாட்களாக குருபிரகாஷ் வீட்டிற்கு வரவில்லை. தாய் இறந்ததால் குருபிரகாஷ் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

    நேற்றிரவு விடுதியில் இருந்த மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். பின்னர் இன்றுகாலை எழுந்துபார்த்த போது குருபிரகாஷ் அறை மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ராயக்கோட்டை போலீசாருக்கும், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், தாசில்தார் சரவணகுமார், டி.எஸ்.பி. சிவலிங்கம், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி நாகராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சதீஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வீசியுள்ளனர்.
    • பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3-வது தெருவில் வசித்து வந்தவர் வாஞ்சி (எ) சதீஸ் (வயது40). இவர் பைனான்ஸ் தொழில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (6). சதீசுடன் அவரது தாயார் லட்சுமியும் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி, ராதா, கவிஸ்ரீ ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது மர்மநபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கும், டி.எஸ்.பி. அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மர்மநபர்கள் காரில் வந்து சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியுள்ளனர். வீட்டின் கேட்டில் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

    பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சதீஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டியா? அல்லது வேறு எதுவும் காரணமாக என போலீசார் தீவிரமாக விசாரணை வருகின்றனர்.

    பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலையோரம் நிறுத்தி இருந்த தனியார் பள்ளி பஸ் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.

    காவேரிப்பட்டணம்:

    சேலம் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் ஐசக் (வயது65), எமரால்டு (40), ஜேசிசன்ஸ், பேரியல், கேப்ரியன் ஆகிய 5 பேரும் இன்று காலை காரில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 7.30 மணி அளவில் வந்த போது சாலையோரம் நிறுத்தி இருந்த தனியார் பள்ளி பஸ் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜெபராஜ் ஐசக் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    விபத்தில் பலியான ஜெபராஜ் ஐசக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எமரால்டு (40) பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்தது.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளி களுக்கு வழங்கினார்.
    • ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் தனி வீடுகள் கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பிலான பணி ஆணைகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையிலும், குடிசைப் பகுதிகளை மேம்படுத்தும் வகையிலும் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்த ஆணையிட்டுள்ளார்.

    மேலும் குடிசைகளை மாற்றுவது மட்டுமல்லாமல் குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வா தாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன்படி, இன்று முதல் அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அனைவருக்கும் வீடு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 105 பகுதிகளில் வசிக்கும் 11,300 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளி களுக்கு வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 70 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் தனி வீடுகள் கட்ட பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய வீடுகள் கட்டிக்கொள்ள அரசு மானியமாக கட்டிட நிலைகளை பொருத்து நான்கு தவணைகளாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் பாலாஜி, செந்தில்குமார், ஜெயகுமார், சந்தோஷ், உதவி பொறியாளர் (தமிழ்நாடு நகர்புர வாழ்விட் மேம்பாட்டு வாரியம்) மோகன் சக்திவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுவினி யோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்களின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும், தாலுகாவிற்கு ஒரு இடம் என மொத்தம் 8 இடங்களில் நடைபெற உள்ளது.
    • வருகிற 10-ந் தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்கு டன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந் தேதி (சனிக்கி ழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவினி யோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்களின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும், தாலுகாவிற்கு ஒரு இடம் என மொத்தம் 8 இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் வரட்டம்பட்டி, ஊத்தங்கரை குன்னத்தூர், போச்சம்பள்ளி கொட மாண்டப்பட்டி, பர்கூர் குருவி நாய னப்பள்ளி, சூளகிரி குடிசாதன ப்பள்ளி, ஓசூர் எஸ்.முதுகான ப்பள்ளி, தேன்கனி க்கோட்டை போடிச்சி ப்பள்ளி, அஞ்செட்டி சேசுராஜபுரம் ஆகிய கிராம ங்களில் நடைபெறு கிறது.

    எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம்.
    • கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    ஓசூர்,

    தமிழ் நாட்டில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ .தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து நேற்று ஒசூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் மத்திகிரி கூட்டு ரோடில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், நகரமைப்பு குழுதலைவர் எம். அசோகா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    மேலும் இதில், மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம். சீனிவாசன், இதில், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்ன கேசவன், அரப்ஜான் உள்பட பலர் பேசினர். மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் கே. சாக்கப்பா, துணைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன.
    • அந்த ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல்போட்டும் வருகின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதைத் தவிர கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் வருவது வழக்கம். ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஜவளகிரி, சான மாவு, போடூர்பள்ளம், ஊடேதுர்க்கம் என பல வனப்பகுதிகளில் பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகின்றன.

    இந்த ஆண்டும் வழக்கம் போல 100-க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அவை விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. தளி அருகே அய்யூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்கனவே 50 யானைகள் உள்ளன.

    அவற்றுடன் தற்போது வந்துள்ள கர்நாடக யானைகளில் இருந்து 20 பிரிந்து அங்கு சென்றுள்ளன. இந்த 70 யானைகளும் அய்யூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை சாமஏரியில் தண்ணீர் குடித்தும், குளித்தும் மகிழ்கின்றன. சாமஏரியில் தண்ணீர் குடிக்க வரும் யானைகள் கூட்டத்தை அந்த வழியாக செல்ல கூடிய பொதுமக்கள் பார்த்து செல்கிறார்கள்.

    மேலும் சிலர் செல்போன்களில் படம் பிடித்து வருகிறார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் யானைகள் கூட்டம் பல குழுக்களாக பிரிந்துள்ளன.

    சானமாவு காப்பு காட்டில் பாலேகொண்டா ஏரி பகுதியில் 50 யானைகள்

    முகாமிட்டுள்ளன. அவை அந்த ஏரியில் தண்ணீர் குடித்தும், ஆனந்த குளியல்போட்டும் வருகின்றன. இந்த யானைகள் எந்த நேரமும் ஓசூர்-ராயக்கோட்டை சாலையை கடந்து போடூர் பள்ளம் வனப்பகுதிக்குள் வரலாம் என்பதால் வனத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    மேலும் யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள ராமாபுரம், பீர்ஜேப்பள்ளி, பாத்தகோட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம் என்பதால் யானைகளின் நடமாட்டத்தை வனத்து றையினர் தீவிரமாக கண்கா ணித்து வருகிறார்கள்.

    வனப்பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் ஆடு, மாடுகளை மேய்க்க வர வேண்டாம். மேலும் இரவு நேரத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் காவலுக்கு யாரும் இருக்க வேண்டாம் என்றனர்.

    • சுற்றுசுழல் பாதுகாப்பு துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழகமாக மாற்ற ஒவ்வொரு மாணவனும் முன்வந்து துணி பை மற்றும் மஞ்சப்பை உபயோகிக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சுற்றுசுழல் பாதுகாப்பு துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடனம், நாடகம், ஒயிலாட்டம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ராமசந்தின், சதிஷ், பெருமாள், மற்றும் ஆசிரியர்கள் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினர்களாக சுற்றுசுழல் பாதுகாப்பு மாவட்ட பொறியாளர் வெங்கடேஷ், சூளகிரி தாலுகா சுற்றுசுழல் பாதுகாப்பு உதவி பொறியாளர் ரங்கசாமி மற்றும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், உதவி பி.டி.ஒ டென்சிங் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    தமிழ்நாடு மாசு கட்டுபாடுகலை குழு மதுரை அலங்காநல்லூர் மற்றும் சென்னையில் இருந்து வருகை தந்தனர். பிளாஸ்டிக் ஒழித்து சுகாதாரமான தமிழகமாக மாற்ற ஒவ்வொரு மாணவனும் முன்வந்து துணி பை மற்றும் மஞ்சப்பை உபயோகிக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

    முடிவில் வட்டார சுற்றுசுழல் அதிகாரி சூளகிரி தாலுகாவை பிளாஸ்டிக் பை , பிளாஸ்டிக் கப் , பிளாஸ்டிக் பொருட்களை அதிரடியாக ஒழிக்க போவதாக உறுதி கூறினார்.

    • பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
    • சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது36). இவர் இருசக்கர வாகனத்தில் சிங்காரபேட்டை- ஊத்தங்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிங்கார பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×