என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி ஊராட்சி ஒன்றியத்தில்  ரூ.18.83 கோடி மதிப்பில் புதிய   தார் சாலைகளுக்கு பூமிபூஜை
    X

    தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.18.83 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகளுக்கு பூமிபூஜை

    • அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.18 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    தளி ஊராட்சி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி மற்றும் தளி ஊராட்சி ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 83 இலட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் நகரபகுதியில் உள்ள அனைத்து வசதிகளுக்கு இணையாக கிராமபுறம் மற்றும் தளி போன்ற கடைகோடி மலைகிராம மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள், பஸ் வசதிகள், உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக தளி போன்ற மலை கிராம மாணவர்கள் பயன் பெறும் வகையில் முதல்&அமைச்சர் 2021-2022 புதியதாக அரசு கலைக்கல்லூரியும், தேன்கனிக்கோட்டையில் புதிதாக அரசு தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கி உள்ளார். இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. அதேப்போல இன்று தளி ஊராட்சி ஒன்றியம், கலுகொண்டப்பள்ளி முதல் சின்னமேனகரம், பெரியமேனகரம் வழியாக குமார்னபள்ளி வரை ரூ.3 கோடியே 87 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும், மதகொண்டப்பள்ளி முதல் சாத்தனூர், கொத்தப்பள்ளி வழியாக கும்ளாபுரம் ரோடு வரைரூ.2 கோடியே 99 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கும் பூமிபூஜை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தளி ஊராட்சியில் ரூ.7 கோடியே 40 லட்சம் மதிப்பில் தளி பேலாளம் சாலை முதல் காடுகெம்பத்பள்ளி வரையும், தளி முதல் தேவர்பெட்டா வரை ரூ.4 கோடியே 57 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து, சாலை பணிகள் என மொத்தம் ரூ.18 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுளளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசரெட்டி, உதவி செயற்பொறியாளர்கள் சிவசங்கரன், ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், நாகரத்தினம், உதவி பொறியாளர் மணிவண்ணன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×