என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
- பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சதீஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வீசியுள்ளனர்.
- பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 3-வது தெருவில் வசித்து வந்தவர் வாஞ்சி (எ) சதீஸ் (வயது40). இவர் பைனான்ஸ் தொழில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (6). சதீசுடன் அவரது தாயார் லட்சுமியும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி, ராதா, கவிஸ்ரீ ஆகியோர் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் திடீரென ஒரு பயங்கர சத்தம் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது மர்மநபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கும், டி.எஸ்.பி. அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மர்மநபர்கள் காரில் வந்து சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியுள்ளனர். வீட்டின் கேட்டில் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.
பைனான்ஸ் தொழில் நடத்தி வந்த சதீஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சதீஸ் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் யார்? தொழில் போட்டியா? அல்லது வேறு எதுவும் காரணமாக என போலீசார் தீவிரமாக விசாரணை வருகின்றனர்.
பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






