என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பள்ளி வளாகத் தில் சிறுமியை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தார்.
    • மாணவியின் கல்விக்கு உதவியாக ரூ 50 ஆயிரத்தை தபால் நிலைய அலுவலகத்தில் டெபாசிட்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 12-வது வார்டு பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ராணி(வயது 28). கணவரை பிரிந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வனிதா(8), தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    கடந்த நவம்பர் 18-ம்தேதி, பள்ளி வளாகத் தில் சிறுமியை நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 12-வது வார்டு கவுன்சிலர் பிரேமா சேகர் , 14-வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் கௌரி சென்னீரா ஆகியோர் மாணவியின் கல்விக்கு உதவியாக ரூ 50 ஆயிரத்தை தபால் நிலைய அலுவலகத்தில் டெபாசிட் செய்து அதற்கான வங்கி கணக்கு புத்தகத்தை பேரூராட்சிதலைவர் சீனிவாசன் முன்னிலையில், சிறுமியின் தாய் ராணி யிடம் வழங்கினர்.

    • சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
    • சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறவுள்ள காத்திருப்பு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பெருமாள், துணை செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாநில தலைவர் முகமதுஅலி சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாநில தலைவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீவன விலை உயர்வு, பால் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 2017&ம் ஆண்டு ஆவின் நிர்வாகம், ஆரம்ப சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யும் போதே, பாலில் உள்ள சத்து, கொழுப்பு கணக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் 5 ஆண்டுகள் கடந்து நடைமுறைப் படுத்தப்படவில்லை.

    கால்நடை தீவனங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் லாபகரமாக செயல்பட்ட ஆவின் மூலம் வழங்கப்பட்ட மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். நாள்தோறும் 1 கோடி லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும்.

    சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாள்தோறும் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
    • 900 மீட்டருக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பத்தல பள்ளி காய்கறி மார்க்கெட் பின்புறம் சாரல் நகர், செர்ரி ஹோம்ஸ், சுனில் நகர், சுவீட் ஹோம்ஸ்,பாவை கார்டன், விஷ்ணு நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக குண்டும், குழியுமாக இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அரைத்து செல்லவும், வேலைக்கு செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஆட்டோ, கார், போன்ற வாகனங்கள் இந்த பகுதிகளுக்குள் வர மறுக்கின்றன.

    மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வண்டி வந்து, செல்ல முடியாத அவலநிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக, குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த ஆண், பெண் என 60-க்கும் மேற்பட்டோர் குழந்தை குட்டிகளுடனும், பள்ளி சிறுவர்களுடனும் ஓசூர் தாலுக்கா அலுவலகத்திற்கு திரண்டு வந்து, அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், வெளியே சென்றிருந்த தாசில்தார் கவாஸ்கர் அலுவலகத்துக்கு திரும்பி வந்தார். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அவரை சூழ்ந்து தங்கள் பிரச்சினைகளை முறையிட்டனர். மேலும், தங்கள் பகுதிக்கு மெயின் ரோட்டிலிருந்து, பாவை கார்டன் வரை உள்ள 900 மீட்டருக்கு சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.
    • வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.

    இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து இந்த யானைகள் வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட யானைகள் கண்டகானப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

    அப்போது கூட்டத்தில் குட்டியுடன் சென்ற பெண் யானை ஒன்று திரும்பி வந்து வனத்துறையினரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது கீழே விழுந்து வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து மற்ற வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    கண்டகானப்பள்ளி கிராம பகுதியில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தருமபுரியில் உள்ள ஒரு கோவிலுக்கு நேற்று காரில் சென்றனர்.
    • ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    காவேரிப்பட்டணம்,

    திருப்பத்தூர் மாவட்டம், கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரும், இவரது நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21), கார்த்தி (21) ஆகியோருடன் தருமபுரியில் உள்ள ஒரு கோவிலுக்கு நேற்று காரில் சென்றனர்.

    அதிகாலை 5 மணியளவில், எர்ரஹள்ளி அருகே கிருஷ்ணகிரி -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கிருஷ்ணகிரி நோக்கி வந்த மற்றொரு கார் சாலை தடுப்பை தாண்டி, எதிர்திசையில் ஜெகன் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராஜ்குமார், கார்த்தி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ததனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
    • பல்வேறு வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மை செயலர் குமார்ஜெயந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் நத்தம் சிட்டா திருத்தம், இணையதள பட்டா மாறுதல், இணையதள வாரிசு சான்று, வருவாய் துறை கட்டிடங்கள், இ-அடங்கல் மற்றும் மின் ஆளுமை உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

    • 2,397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
    • கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட இயலாது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று 2,397 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

    பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2022-2023 - ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க. அடி வீதம் 23.12.2022 முதல் 06.05.2023 வரை மொத்தம் 135 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கனஅடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் வினாடிக்கு 20 கனஅடி வீதம் என மொத்தம் வினாடிக்கு 70 கனஅடி வீதம் மூன்று நாட்கள் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டும், நான்கு நாட்கள் மதகை மூடி வைத்தும் இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் மூலம் போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள பாரூர், அரசம்பட்டி, பென்டரஅள்ளி, கோட்டப்பட்டி, கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி ஆகிய 7 கிராமங்களைச் சார்ந்த நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1,583 ஏக்கர் நிலமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    எனவே, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறை யினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    மேலும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் கால நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) குமார், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் சையத் ஜாகீருதின், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தமூர்த்தி, தமிழ்செல்வி சுந்தரமூர்த்தி, சண்முகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சாலையோரமாக பெருமாள் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
    • கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள ஓடையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60).

    இவர் சைக்கிளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சென்று ஊர்,ஊராக போய் விற்று விட்டு வருவார்.

    இதற்காக தினமும் அதிகாலையிலேயே தனது சைக்கிளில் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார்.

    இன்றும் அதேபோல அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து வியாபாரம் செய்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார்.

    இந்நிலையில் ஓடையாண்டஅள்ளி-எச்சம்பட்டி பிரிவுசாலை அருகே சாலையோரமாக பெருமாள் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராயக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு கத்தியால் குத்தப்பட்டு குடல் வெளியே சரிந்த நிலையில் பெருமாள் கொல்லப்பட்டு கிடந்தார்.

    அவரது சைக்கிளும்,எடுத்து வந்த பொருட்களும் சாலையிலேயேகிடந்தன. இதையடுத்து பெருமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெருமாளை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துரையாற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவு போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    கருத்தரங்கில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் குறித்தும், கோதைநாயகி குறித்தும், மகாலிங்கம் குறித்தும், சின்னப்பபாரதி குறித்தும் படைப்பாற்றல், எழுத்தாற்றல், பண்மு கத்திறன், கவித்திறன் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துரையாற்றப்பட்டது.

    முன்னதாக அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசையுடன் திருக்குறள் நடனம் நிகழ்த்தப்பட்டது.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) பவானி, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் எழிலரசு, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன், அரசு ஆடவர் கலைக்கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பழனிவேலு, அரசு ஆடவர் கலைக் கல்லூரி விரிவுரையாளர் பேகம்,

    கலைமகள் ஆசிரியர் சி.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழறிஞருமான கோவிந்தசாமி, தமிழ் வளர்ச்சித் துறையின் தமி ழ்ச்செம்மல் விருதாளர்கள் கருமலைத் தமிழாழன், ராசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வேலைக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள லக்க சத்திரம் பகுதியை சேர்ந்தவர் திம்மக்கா (வயது 20).

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த திம்மக்கா கடந்த 19 -ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.

    இந்நிலையில் ஓசூர் பகுதியி சேர்ந்த சர்வேஷ் என்பவர் திம்மக்காவை கடத்தி சென்றுவிட்டதாக திம்மக்காவின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி அருகேயுள்ள கரடிக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. திம்மரெட்டிபகுதியை சேர்ந்த ராஜா (20) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தளி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

    இதேபோல கிருஷ்ணகிரி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.
    • நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மனநல நல்லாதரவு மன்றம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை 14416 விரிவாக்க மருத்துவ சேவை தொடக்க விழா நடந்தது.

    இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர். இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல நல்லாதரவு மன்றம் "மனம்" மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 அறிவித்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் மனம் என்று அழைக்கப்படும் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சமாளித்து வெற்றி பெறுகின்றனர். சிலருக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

    இந்த வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மனநலத்தை அறிவியல் அடிப்படையில் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் கூடுதலான நற்பயனை தரும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக மனநல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் "மனம்" என்ற செல்போன் எண்.6379793630 பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், நட்புடன் உங்களோடு மனநல சேவை எண்ணாக 14416 என்ற எண் மூலம் அனைவரும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    • கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் முடிந்தது.
    • நாள்தோறும், 100 பேருக்கு நேர்காணல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் முடிந்தது.

    கிருஷ்ணகிரி தாலுகாவில் காலியாக உள்ள, 15 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த, 2,246 பேரில், 1,590 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களுக்கு திறனறிதல் தேர்வு மற்றும் நேர்காணல் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

    நேர்காணலை கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், தனி தாசில்தார் விஜயகுமார், தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயன் ஆகியோர் நடத்தினார்கள்.

    இதில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிக்க சொல்லுதல், என்ற முறையில் தேர்வு நடந்தது. இதில், பங்கேற்றவர்களின் திறமைக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    நாள்தோறும், 100 பேருக்கு நேர்காணல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×