என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கல்வித்துறை மூலம் பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவெடுத்து இடிக்கப்பட்டது.
    • ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாலிகானப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த அரசுப்பள்ளி கட்டிட சுவர்களில் விரிசல் அடைந்து இடிந்த நிலையில், பயன்படுத்த முடியாமல் இருந்ததால் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் பள்ளி கட்டடத்தை இடிக்க முடிவெடுத்து இடிக்கப்பட்டது.

    இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தொடரும் வகையில், அருகில் உள்ள இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்கிருந்து சிறிது தூரம் உள்ள மற்றொரு வீட்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து 3 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மொட்டை மாடி வகுப்பறைக்குச் சென்று அங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

    இது தொடர்கதையாக உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளி கட்டடத்திற்கு பதில் அங்கு தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை, இதனால் அரசு பள்ளியில் தொடக்க கல்வியை பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர்.

    எனவே உடனடியாக பாலிகானப்பள்ளி கிராமத்தில் புதிய அரசுப் பள்ளி கட்டடத்தை கட்டிக் கொடுத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எம்.ஜி.ஆரின் 106 - ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது.
    • வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டார்.

    மத்தூர், ஜன.23-

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் எம்.ஜி.ஆரின் 106 - ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்Lத்திற்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டி.எம். தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மத்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, தேவராசன், ஊத்தங்கரை அ.தி.மு.க. ஒன்றிய செயலார்கள் எக்கூர் வேடி, வேங்கன் ஆகிேயார் வரவேற்றார்.

    இக்கூட்டத்திற்கு ஊத்தங்கரை தொகுதி முன்னால் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.தென்னரசு முன்னால் எம்.எல்.ஏ.முனி வெங்கட்டப்பன், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. துணை பொது செயலாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். முன்னதாக தலைமை கழக பேச்சாளர் ஏ.வி.சி.கோபி பேசினார். இக் கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, அ.தி.மு.க. ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், இராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயமூர்த்தி, ஒன்றிய மீணவரணி செயலாளர் எம்.ஆர்.முனுசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டி.ஜெகன், தகவல் நுட்ப பிரிவு பூபதி, இளம் பாசறை பாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • விழாக்குழுவினர், கிராம மக்கள், வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதனிடையே சூளகிரி அருகே பேடப்பள்ளி கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி அந்த பகுதியில் உள்ள மைதானத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை அமைக்கும் பணியில் விழாக்குழுவினர் ஈடுபட்டனர். ஆனால் பேடப்பள்ளியில் எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முன்தினம் எருது விடும் விழா நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று எருது விடும் விழாவை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் விழாக்குழுவினர், கிராம மக்கள், வீரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதளியூர் பெருமாள் கோவில் அருகே சூதாடி கொண்டிருந்த 3 பேர் பிடிபட்டனர்.

    அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வீரசேகர் (வயது 30), ரஞ்சிதுகுமார் (36), பிரபு (28) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.1,950 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ராணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள நெக்குத்தி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 34).

    இவருக்கும் சிவகுமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. சிவகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இதேபோல ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ராணியின் சகோதரர் தம்பிதுரை கொடுத்த புகாரின்பேரில் தேன்கனி கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கி பேசினார்.
    • கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    ஓசூரில், அனைத்து பால் முகவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஓசூரில் தனியார் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கி பேசினார்.

    பொருளாளர் சதீஷ், துணைத்தலைவர் விஜயபாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் வேடியப்பன் வரவேற்றார்.

    இதில் சங்க வளர்ச்சி மற்றும் முகவர்களின் பிரச்சினைகள், குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மூத்த உறுப்பினர்கள் முத்து, முத்துசாமி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

    இதில், துணை செயலாளர்கள் நாகராஜ், மஞ்சு, கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் ஜீவா நன்றி கூறினார்.

    • வனப்பகுதியில் உள்ள முத்துராயசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • முத்தப்பசுவாமிகள் கோவி லை சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜார்கலட்டி கிராமத்தையொட்டி வனப்பகுதியில் உள்ள முத்துராயசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி, கங்கா பூஜை, கோபூஜை, கணபதி ஓமம் நடைபெற்றது. திப்பசந்திரம் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.

    மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புலிவாகனத்தின் மீது அமர்ந்து முத்தப்பசுவாமிகள் கோவி லை சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    விழாவில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, இருமத்தூர், பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இங்கு தென்னங்கன்றுகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டு கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு தென்னங்கன்று தரத்தைப் பொறுத்து ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்ததால், தென்னங்கன்றுகள் விலையும் சரிந்தது. இதனால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால், மீண்டும் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து அரசம்பட்டியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறியதாவது: -

    அரசம்பட்டி பகுதிகளில் காணப்படும் சிறந்த மண்வளம் காரணமாக தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்களும் சுவை நிறைந்து காணப்படும்.

    இதனால் வெளி மாவட்ட, மாநில விவசாயிகள் பலர் நேரடியாக வந்து கன்றுகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு தேங்காய் விலை வீழ்ச்சியால், தென்னங்கன்றுகள் விலை சரிந்தது. இருப்பினும் `தேங்காய் பூ' விற்பனையால் இழப்பை சமாளித்தோம். ஆனாலும், போதிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை.

    தற்போது பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பியும், மண்ணில் ஈரத்தன்மை குறையாமலும் உள்ளதால் விவசாயிகள் பலர் தென்னங்கன்றுகள் நடவு செய்ய மீண்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது உயரம், தரத்தை பொறுத்து ஒரு தென்னங்கன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விலைபோகிறது. நாள்தோறும் குறைந்தது 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும், தென்னையில் நோய் தாக்குதல் உள்ளிட்டவையால் விவசாயிகள் அடிக்கடி இழப்பினை சந்தித்து வருகின்றனர். எனவே, அரசம்பட்டியை மையமாக வைத்து, தென்னை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 முதல் 1984-ம் ஆண்டு வரை படித்த, முன்னாள் மாணவர்கள் 41 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்தனர்.

    நிகழ்ச்சியில் அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களான, கோவிந்தராஜ், செல்வராஜ், முஸ்பர்கான், ராமலிங்கம், ஆனந்த வடிவேல், புஷ்பவள்ளி, பழனி ஆகியோரை வரவைத்து, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர்.

    இதில் இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக், ஜோதி நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்பட பலர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

    • அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஜான்சிலட்சுமி தலைமை தாங்கினார்.
    • உயிர் உரங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மணவாரனப்பள்ளியில் விவசாயிகள் திறமை மேம்பாட்டுத் திட்டத்தில் பட்டுவளர்ப்பு குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது. இதில், மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டுப்புழுவியல் பயின்று வரும் மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிக்கு அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஜான்சிலட்சுமி தலைமை தாங்கினார்.

    இந்த பயிற்சியின் போது, பட்டுப்புழு வளர்ப்பு, கொட்டகை பராமரிப்பு, கிருமிநாசினி தெளித்தல், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சீராக்குதல் உள்ளிட்டவை குறித்தும், மல்பரி சாகுபடி, பசுந்தாள் உரத்தின் பயன்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள், வேப்பெண்ணெய் கலந்த ரசாயன உரம் பயன்படுத்துதல், உயிர் உரங்கள் குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    வெண்பட்டின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில், பலகலப்பின பட்டு விவசாயிகளை வெண்பட்டு விவசாயிகளாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கான களபயிற்சியை வனக்கல்லூரி மாணவிகள் வனிதா, ஸ்ரீவாணி, சுகன்யா, சுபாஷினி, ஷேபனா ஆகியோர் அளித்தனர். இதில் மணவாரனப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • கிணற்றுப் பகுதியில் சடலமாக இந்திராகாந்தி மிதந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரா காந்தி (வயது 52). இவரது கணவர் பெயர் காமராஜ். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இந்திராகாந்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இது தொடர்பாக அவரது கணவர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் அருகிலுள்ள கைவிடப்பட்ட விவசாய கிணற்றுப் பகுதியில் சடலமாக இந்திராகாந்தி மிதந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவலர்கள் இந்திராகாந்தியின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • துணை அமைப்பாளர்கள் பதிவகளுக்கான நேர்காணல் நடந்தது.
    • நேர்காணல் கிழக்கு மாவட்டசெயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், நடந்தது.

    கிருஷ்ணகிரி,-

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதிவகளுக்கான நேர்காணல் நடந்தது.

    கிருஷ்ணகிரி தேவராஜ் மாங்கூழ் தொழிற்சாலை வளாகத்தில், தி.மு.கவில் உள்ள 23 அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.

    இந்த நேர்காணல் கிழக்கு மாவட்டசெயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், மாநில விவசாய அணி துணை செயலாளர்கள்டேம்.வெங்கடேசன், அரியப்பன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணைசெயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர்கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதாநவாப்,பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராசன், சித்ராசந்திரசேகர், அஸ்லாம், கோதண்டன்ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    இதில், வழக்கறிஞர் அணி, வர்த்தகர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, கலை இலக்கியபகுத்தறிவு பேரவை, ஆத்திராவிடர் நலக்குழு, பொறியாளர் அணி, நெசவாளர் அணி,சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, மருத்துவர் அணி, மீனவர் அணி, விவசாய தொழிலாளர்அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, தொழிலாளர் அணி, அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி,விளையாட்டு மேம்பாட்டு அணி, தொண்டரணி பதவிக்கு விண்ணப்பித்திருந்த 250 -க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.

    வருகிற 26ம் தேதி மதியம் 2 மணிக்கு மகளிரணி, 2.30 மணிக்கு மகளிர் தொண்டரணி, 3 மணிக்கு இளைஞரணி, 3.30 மணிக்கு மாணவரணி, 4 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணிக்கான நேர்காணல ்நடைபெறுகிறது.

    ×