என் மலர்
கிருஷ்ணகிரி
- பாட்டி சிறுவயதில் இருந்து இவரை காய்கறி வியாபாரம் செய்து வளர்த்து வந்தார்.
- பெரிய அளவிலான நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற வேண்டும். அரசும் சமூக ஆர்வலர்களும் தமக்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 25). எம்.காம். படித்துள்ளார். இவருக்கு தாய் தந்தை இல்லாத நிலையில் அவருடைய பாட்டி சிறுவயதில் இருந்து இவரை காய்கறி வியாபாரம் செய்து வளர்த்து வந்தார்.
பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மகேஷ் நீச்சல் போட்டி என் மீது அதிக ஆர்வம் கொண்டு கிராமத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள் கிணறுகளில் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மகேஷ் பின்னர் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.
தனது நீச்சல் திறமையை அறிந்த மகேஷ் தன்னுடைய திறமையை பாரா ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் தற்போது தீவிரமாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திடீரென்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்த நிலையில் மகேஷின் பொருளாதாரம் முடங்கியது. ஆனால் மனம் தளராத மகேஷ் தான் மாற்றுத்திறனாளி என்னும் குறையை கண்டுகொள்ளாமல் தான் வாழ்வில் தனது திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை புரிய வேண்டும் என நோக்கத்தில் தினமும் காலையில் முழு தன்னம்பிக்கையுடன் கண்விழித்து நாள்தோறும் தீவிரநீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் அவர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் பெரிய அளவிலான நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற வேண்டும்.
மேலும் தனக்கு உணவு மற்றும் உரிய பயிற்சி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக்கில் வெற்றி பெற முழு திறமையும் வெளிகொண்டுவர முடியும் என கூறுகிறார் மகேஷ்.
ஆனால் தினமும் ஒருவேளை சோற்றுக்காக மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில் மகேஷ்க்கு மேல் பயிற்சி பெற தனக்கு போதிய பொருளாதார வசதியும் நிதி வசதியும் தற்போது தனக்கு இல்லாத நிலையில் மற்றவர்களிடம் உதவி வேண்டி கையேந்தி காத்திருகிறார். மேலும் தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் தமக்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார்.
தனது கனவுக்காக வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து தனது திறமையின் மூலம் தன் தாய்நாட்டிற்காக சாதிக்க துடிக்கும் மாற்றி திறனாளி மகேஷின் கனவு நிறைவேறுமா?.
- ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
- குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.
ஓசூர்,
ஓசூரில், வழிகாட்டி தமிழ்நாடு மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ஒற்றை சாளர முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கினை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தொடங்கி வைத்து பேசியதாவது: -
முன்னேறி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 பெருநிறுவனங்கள், ஏராளமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களில் குண்டூசி முதல் விமான உதிரி பாகங்கள் வரை தயார் செய்யப்படுகிறது.
மேலும், கிரானைட் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களான மா, காய்கறிகள், கொய்மலர்கள் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய மலர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14 - ஆம் தேதி, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ரூ 4 கோடி முதல் 5 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், 15 சதவீதம் இந்த மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒற்றைச் சாளர முறையில் உணவு பாதுகாப்பு மருத்துவம், தீயணைப்பு, நகர கட்டமைப்பு, மின்சார உற்பத்தி, வேளாண்மை சார்ந்த தொழில்கள் குறித்து வரப்பெற்ற 367 மனுக்களில் 317 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை தங்குதடையின்றி வழங்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆகவே, தொழில் முனைவோர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி தொழில் தொடங்கி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் தீபக் ஜேக்கப் கருத்தரங்கில் பேசினார்.
- காசநோய் கண்டறியும் கருவியை கலெக்டர் தீபக் ஜேக்கப் திறந்து வைத்தார்.
- மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அதி நவீன முறையில் காசநோய் கண்டறியும் கருவியை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன முறையில் காசநோய் கண்டறியும் கருவி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் சளி பரிசோதனை செய்து 2 மணி நேரத்தில் சளியின் பரிசோதனை ஆய்வு முடிவை அறியலாம்.
இக்கருவியின் மூலம் பல்வகை கூட்டு மருந்து சிகிச்சை காசநோயை கண்டறியலாம்.
இக்கருவியில் நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சளி பரிசோதனை செய்து ஆய்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
காசநோய் கண்டறியப்பட்டால் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்ப டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து உள் நோயளிகள் மற்றும் வெளி நோயாளிகள் வருகை பதிவேடு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி டீன் ராஜஸ்ரீ, கா சநோய் பிரிவு துணை இயக்குனர் (பொறுப்பு) சுகந்தா, டாக்டர்கள் செல்வி, ஸ்ரீதர், அருண், கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
- 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.
போச்சம்பள்ளி சுற்று வட்டார சுமார் 20 கி.மீ. சுற்றளவுக்கு உள்ள கிராமங்களில் இருந்து நோயாளிகள் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையையே நாடுகின்றனர்.
இந்த போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனை அருகே அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி, பெண்கள் மேல்நிலைபள்ளி, நூலகம், தொட்க்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,பத்திர பதிவு அலுவகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் பள்ளிக்கூடங்களும் இயங்கி வருகின்றன. இந்த அரசு பொது மருத்துவனைக்கு செல்லும் தார் சாலை முழுவதுமாக பெயர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் இவ்வழியில் செல்வதால் மிகவும் அவதிப்படுகின்றனர். 108 வாகன ஊர்தி, ஆட்டோ ஆகியவை செல்வது சிரமமாக உள்ளது. உடனடியாக அரசு பெண்கள் மேல் நிலைபள்ளியிலிருந்து, தருமபுரி-திருப்பத்தூர் சாலை வரை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தெரிவிக்கையில் இன்னும் ஒரு மாதத்தில் ஒப்பந்தம் விட்டு புதிய தார்சாலை அமைப்பதாக தெரிவித்தார்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- தருமபுரி சாலையில் சென்ற போது இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி செம்மடமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் பாலக்குழி பகுதியில் மாத்திரை வாங்க நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு பின்னர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியை சேர்ந்த சியாத் அலி (வயது 60). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து தருமபுரி விடிவெள்ளி நகர் பகுதியில் வசித்து வந்தார். இவர் பொம்மிடி-தருமபுரி சாலையில் சென்ற போது இருசக்கர வாகனம் மோதி காயம் அடைந்தார்.தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொம்மிடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 13 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
- திருடு போன நகைகள் மதிப்பு ரூ. 1,70 லட்சம் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூர் ரோடு சித்தனபள்ளியை சேர்ந்தவர் ஜெபராஜ் லிவிங்க்ஸ்டன் (வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பனிக்குலத்துக்கு சென்றுள்ளார். இவர்கள் வீடு பூட்டிகிடந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
நேற்று ஊரில் இருந்து திரும்பிய ஜெபராஜ் லிவிங்க்ஸ்டன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடு போனதை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து ஹட்கோ போலீசில் ஜெபராஜ் லிவிங்க்ஸ்டன் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கைரேகை பதிவு செய்து பழைய குற்றவாளிகள் யாராவது இந்த திருட்டில் ஈடுபட்டனரா என விசாரித்து வருகின்றனர்.
திருடு போன நகைகள் மதிப்பு ரூ. 1,70 லட்சம் என்று கூறப்படுகிறது.
- காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான்.
- ஓசூரில் இந்த ஆண்டு தாஜ்மகால் பூக்கள் அதிகம் விற்பனையானது.
ஒசூர்,
உலகம் முழுவதும் இன்று காதலர்தினத்தை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். காதலர் தினம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிவப்பு ரோஜா தான்.
ரோஜா பலர்கள் உற்பத்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை கூடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்துவரும் விவசாயிகள், அதிக அளவில் காதலர் தினத்திற்காக ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்ப நிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது.
ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன. ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உருவெடுத்துள்ளது.
தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், கார்வெட் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் பயிரிடப்படுகின்றன. எனினும் தாஜ்மஹால் என்று சொல்லக்கூடிய 15 முதல் 30 சென்டி மீட்டர் நீலமுள்ள சிவப்பு ரோஜாக்களுக்கு சந்தையில் தனிமதிப்பு உள்ளதால் விவசாயிகள் சிவப்பு ரோஜாக்களையே அதிகம் சாகுபடி செய்வார்கள்.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்களின்போது ஓசூர் ரோஜா மலர்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பும், சந்தை வாய்ப்பும் இருந்து வருகிறது.
இன்று காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பல நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் ஆஸ்திரேலியா, குவைத், துபாய், பிரான்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி ஆயின.
இதில் தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய பூக்கள் சிங்கபூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரசு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகளவில் ரோஜா மலர்களை விவசாயிகள் அனுப்பினர். மும்பை வழியாக மட்டும் இந்த ஆண்டு 158 டன் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின.
கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் காதலர் தினத்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். பின்பு கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் காதலர் தினத்தை குறிவைத்து விவாசயிகள் ரோஜா மலர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் மேற்கொண்டனர்.
ஆனால் இந்த ஆண்டு அதைவிட அதிக அளவு மலர் உற்பத்தி ஆகியது. கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதலே காதலர் தினத்திற்கான ரோஜா மலர் ஏற்றுமதி தொடங்கியது.
தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முகூர்த்தங்களும், சுப நிகழ்ச்சிகளும் அதிகமாக உள்ளதால் உள்ளூர் சந்தைகளிலும் மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதாக கொய்மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கேரளா, மும்பை, டெல்லி, ஆந்திரா உள்பட இந்தியா முழுவதும்நேற்றுவரை ஓசூரில் இருந்து 1 கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் விற்பனை ஆயின. கொரோனாவுக்கு முன்பு 20 ரோஜா பூக்கள் கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது கடந்த 10-ந்தேதி அன்று ஒரு கட்டு 400 வரை விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கட்டு 200-க்கு விற்பனையானது. ஓசூரில் இந்த ஆண்டு தாஜ்மகால் பூக்கள் அதிகம் விற்பனையானது.
என்றனர்.
- விபசாரம் நடைபெ றுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
- இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் உள்ளன.
இங்கு வாடிக்கையா ளர்களை கவரும் வகையில் பேசி மசாஜ் சென்டருக்கு அழைத்து, இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைப்பதும், பின்னர் அவர்களிடம் நைசாக பேசி விபசாரம் நடைபெ றுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் போலீசார் சீதாராம்மேட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்தினர்.
அங்கு மசாஜ் சென்டர் என அழைத்து இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்த போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டியை சேர்ந்த துளசிராமன் (வயது 30), பெங்களூரு மங்கம்மனபாளையாவை சேர்ந்த ஸ்ரீநாத் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்குள்ள ஒரு மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிந்தது.
இதுதொடர்பாக ஓசூர் ராம் நகரைச் சேர்ந்த அர்ச்சனா (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
இளம்பெண்களை வைத்து விபசாரம் ஓசூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், ரிலாக்ஸ் மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை வரவழைக்கிறார்கள்.
பின்னர் அவர்களிடம் இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வைத்து அவர்களுடன் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது போன்ற மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைப்பதுடன், சம்பந்தப்ப ட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் சென்டர்களின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- யானைகள் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளது,
- யானை கிருஷ்ணப்பாவை துரத்தி உள்ளது. அப்போது அவரைத் துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு வந்துள்ளது,
இந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன, இந்த யானை கூட்டத்தை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே சாப்ராணப்பள்ளி கிராமத்தின் அருகில் னாயசரஅயிரசை மாவட்டம் பாலக்கோடு அருகே கோலியனூர் பகுதியை சேர்ந்த சிலர் ஆடுகளை மேய்த்து வருகின்றனர்,
நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு அதன் அருகே தூங்கிக் கொண்டிருந்தனர், நள்ளிரவில் ஐந்து யானைகள் வந்துள்ளது, அதைப் பார்த்த பாலக்கோடு அருகே உள்ள கூலியினூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (வயது 45)ீீ என்பவர் யானை கூட்டத்தை பார்த்து ஓடியுள்ளார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை கிருஷ்ணப்பாவை துரத்தி உள்ளது. அப்போது அவரைத் துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.
அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அந்த யானை திரும்பச் சென்றுள்ளது உடனே படுகாயம் அடைந்த வரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 50 கிலோ எடை கொண்ட 2 மூட்டைகளும், 10 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையும் என மொத்தம் 110 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
- அரிசியை பதுக்கி வைத்தவர் பெயர் சரவணன் (வயது 59), காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி பக்கமுள்ள மாட்டுவாயன்கொட்டாய் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றனர். அங்கு 50 கிலோ எடை கொண்ட 2 மூட்டைகளும், 10 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையும் என மொத்தம் 110 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த அரிசியை பதுக்கி வைத்தவர் பெயர் சரவணன் (வயது 59), காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
அவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை பெற்று, வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 80 யானைகளையும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
- விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடே துர்கம், சானமாவு ஆகிய வனப்பகுதிகளில் புகுந்து முகாமிட்டு உள்ளன.
இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன. வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் இரவு நேரங்களில் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து ராகி, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்தன.
இதனிடையே சானமாவு வனப்பகுதியில் நேற்று முன்தினம் 80 யானைகள் முகாமிட்டு இருந்தன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
அப்போது வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த 80 யானைகளையும் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தேன்கனிக்கோட்டை வனச்சரகம் பேவனத்தம் வனப்பகுதி சூரப்பன் குட்டை என்ற பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள் பாலேகுளி, திம்மசந்திரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து அங்குள்ள விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், ஜவளகிரி வனச்சரக அலுவலர் சுகுமார் ஆகியோர் தலைமையில் 40 பேர் கொண்ட வனக்குழுவினர் சூரப்பன்குட்டையில் இருந்து யானைகளை திம்மசந்திரம், நொகனூர் வனப்பகுதி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள், விவசாயிகள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம், இரவு நேரங்களில் வனப்பகுதியை யொட்டி விவசாய விளைநிலங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
- வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் திருமலை நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த அரிசி, காட்டிநாயனப்பள்ளி, பெத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் வாங்கி,அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது-. அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.






