என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், நிர்வாக குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, வங்கி பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.

    இது குறித்து அப்போதைய கூட்டுறவுத்துறை சரக துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் படி மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    மேலும் இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிர்வாக குழு உறுப்பினரான கால்வேஹள்ளி கிராமத்தை சேர்ந்த இந்திராணி (45) என்பவரை கைது செய்தனர்.

    • மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் சிறந்த ஆளுமைகளாக செயலாற்ற வேண்டும்
    • பிற மாநில மாணவர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று உயர்கல்வி பயில்வது போல் நமது மாநில கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும்

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

    கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர், பெருமாள் தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தனர். முன்னதாக, கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் வளர்ச்சிப் பற்றிய அறிக்கையை வாசித்தார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டமளித்து விழாப் உரையாற்றினார்.

    பின்னர் பல்கலைக்கழக அளவில் முதன்மைத் தேர்ச்சிபெற்ற மாண வர்களுக்கு பட்டம் வழங்கி பதக்கம் அணிவித்துப் பாராட்டினார்.

    தாளாளர் பெருமாள் தனது தலைமை உரையில், பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும், நாட்டிற்கும் சிறந்த ஆளுமைகளாக செயலாற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

    சிறப்பு விருந்தினர் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பேசும்போது, பிற மாநில மாணவர்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று உயர்கல்வி பயில்வது போல் நமது மாநில கிராமப்புற மாணவர்கள் முன்னேற வேண்டும் என வாழ்த்தினார்.

    கலை, அறிவியல், மேலாண்மை, வணிகவியல் ஆகிய புலங்களில் தேர்ச்சிபெற்ற சுமார் 800 இளங்கலை, 400 முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.

    இவ்விழாவில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறைத்தலைவர்கள், பேராசி ரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டி னை நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.

    • அவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் எடுத்துவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
    • இது குறித்து அம்ரிஷ் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த முதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் அம்ரிஷ் (வயது 43).

    வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் 24-ந் தேதி தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி பேசியுள்ளார். அம்ரிசிடம் பேசிய மர்மநபர், அம்ரிசின் வங்கி விவரங்களை பூர்த்தி செய்ய அவரது கம்ப்யூட்டரில் 'எனி டெஸ்க்' எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லியுள்ளார். அம்ரிசும் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த மர்ம நபர், அந்த செயலி மூலம் அம்ரிசின் கம்யூட்டரை பயன்படுத்தியுள்ளார். மொபைலில் பேசியவாறு அம்ரிசின் வங்கி விவரங்களை வாங்கி, அவரின் கண் முன்னே, அவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் எடுத்துவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த அம்ரிஷ் இது குறித்து அம்ரிஷ் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அம்மாசி என்ற விவசாயியை எதிர்பாராதவிதமாக யானை தாக்கியது.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் இன்றுகாலை ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்தது.

    அந்த யானை அங்குள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. அப்போது அம்மாசி என்ற விவசாயியை எதிர்பாராதவிதமாக யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது விவசாயியை தாக்கிய ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன்.
    • இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், சென்னை, சேலம் ,கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 65 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்த 1,365 பேரில், 339 பேருக்கு தேவையான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 5- வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 468 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய முகாமில் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இதுபோன்ற முகாம்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும். நானும் ஒரு பி.இ., பட்டதாரி. படித்து முடித்தவுடன், எத்தனையோ தகவல்களை தெரிந்து நேர்காணலுக்கு செல்லும் போது, சில இடங்களில் சோபிக்க தவறியது உண்டு. 10 நேர்காணலை சந்தித்து அதில், இரண்டில் தேர்வான நிலை இருந்தது. பெங்களூரில் பணியாற்றிய போது எனக்கு வேலை பிடிக்கவில்லை. பின்னர் வங்கி, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளிலும் பணியாற்றினேன். மும்பையில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட பணியில் சேர்ந்த போதுதான், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றேன். இன்று கலெக்டராக உங்கள் முன் பேசுகிறேன். எனவே வேலை கிடைக்கவில்லை என சோர்ந்துவிடாமல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டால், திருப்தியான பணியுடன் வெற்றியும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தொழில் பயிற்சி நிறுவனம், வேலைவாப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி முடித்த 46 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், அரசு மகளிர் கலைகல்லூரி முதல்வர் கோவிந்தராசு, கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி மன்றத்த தலைவர் காயத்ரிதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அவர் அளித்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இது போன்ற மோசடிகளில் படித்த இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் டவுன்சிப் துளிர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ண சர்மா(வயது 45). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 1-ந் தேதி ராமகிருஷ்ண சர்மாவை இன்ஸ்டாகிராம் வழியாக தொடர்பு கொண்ட நபர் பகுதி நேர வேலையாக 'டாஸ்க் கம்ப்ளீட்' என்ற செயலி மூலம் குறைந்த அளவில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள சில இணையதள லிங்குகளையும் அனுப்பியுள்ளார்.

    இதை நம்பிய ராமகிருஷ்ண சர்மா அந்த டாஸ்க் கம்ப்ளீட்டில், தன் விவரங்களை குறிப்பிட்டு, ரூ.100 முதலீடு செய்துள்ளார். அடுத்த, சில மணி நேரங்களில் இவர் பெயரில்

    உருவாக்கப்பட்ட கணக்குடன், ரூ.1000 ஆக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த செயலி மூலம் எவ்வளவு பணம் போடுகிறீர்கள் என இணையதள பக்கத்துடன் அனுப்பி உள்ளனர். அதில் குறிப்பிட்ட தொகையை கிளிக் செய்து ஆன்லைனில் அனுப்பியவுடன், ராமகிருஷ்ண ஷர்மா கணக்கில் சேர்க்கப்பட்டு, அதற்கான கூடுதல் தொகை இருப்புடன் காட்டியுள்ளது. மேலும் நிமிடத்திற்கு நிமிடம் இருப்பு தொகையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து தன்னிடம் இருந்த தொகைகளை 'டாஸ்க் கம்ப்ளீட்' மூலம் ராமகிருஷ்ண சர்மா அனுப்பியவாறு இருந்துள்ளார்.

    பிப்ரவரி மாதம் துவக்கம் முதல், தொடர்ந்து ஒரு வாரத்தில் தன்னிடம் இருந்த மொத்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்று ரூ.37 லட்சத்து 95 ஆயிரத்து 415 ரூபாயை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் அனுப்பிய இணைய தளம் பக்கம் முடங்கியது. இவரிடம் டெலிகிராம், வாட்ஸ் அப்பில் பேசியவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. ராமகிருஷ்ண சர்மா பெயரில் உருவாக்கப்பட்ட 'டாஸ்க் கம்ப்ளீட்' கணக்கும் முடங்கியது. இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அவர் அளித்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், இது போன்ற மோசடிகளில் படித்த இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு அவர்களின் பேராசையே காரணமாக அமைகிறது. எந்த முதலீடும் மிக குறைந்த நாட்களில் இரட்டிப்பு மடங்காக அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும். இது போன்ற தகவல்கள் வந்தால் முதலில் சைபர் க்ரைம் போலீசுக்கு தெரிவியுங்கள். போலீசார் அந்த எண்ணுடன் வாடிக்கையாளர் போல் தொடர்பு கொண்டு அவர்களை பிடிப்பதற்காவது பயன்படும். பணம் இரட்டிப்பாக்கலாம் என ஆசைகாட்டுபவர்களை நம்பி, யாரும் பணத்தை இழக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    • தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
    • ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி சென்று அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட உள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து கர்நாடக மாநிலத்திற்கு விரட்டினர்.

    இந்நிலையில் 20 காட்டு யானைகளும் முள்பிளாட் வனப்பகுதி அருகே சென்றபோது பல்வேறு குழுக்களாக பிரிந்தது. இதில் பிரிந்த நான்கு காட்டு யானைகள் கண்டகாணப்பள்ளியில் உள்ள ஏரியில் யானைகள் இறங்கி ஆனந்த குளியல் போட்டது.

    இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இந்த நான்கு காட்டு யானைகளையும் வனத்துறையினர் பாலதொட்டப்பள்ளி, அகலக்கோட்டை, ரங்கசத்திரம் ஆகிய கிராமங்கள் வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டி சென்று அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட உள்ளனர். இந்த பணிகளில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • பொக்லைன் மூலம் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியுள்ளனர்.
    • செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் சிந்தகம்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த நாரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிந்தகம்பள்ளி கிராமத்தில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை.

    ஊராட்சி மூலம் ஏற்கனவே அமைக்கப்பட்ட குறுகிய சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியதால், அப்பகுதியில், பொக்லைன் மூலம் குழி வெட்டி கழிவு நீரை வெளியேற்றியுள்ளனர்.ஆனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி அப்பகுதியிலுள்ள நெல் வயல்களில் பாய்ந்து, பயிர்கள் நாசமாகின. இதையடுத்து, சாக்கடை கால்வாயை அடைத்துள்ளனர். இதனால், கடந்த, ஆறுமாதங்களாக வெட்டப்பட்ட குழியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வட்டார மருத்துவ அலுவலர் சுசித்ரா தலைமையில், டாக்டர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் பாஸ்கர், செவிலியர் கீதா அடங்கிய மருத்துவகுழுவினர் சிந்தகம்பள்ளி அங்கன்வாடி மையத்தில், சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தினர்.

    இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுபுழுக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேட்டால் தவித்து வருகிறோம். கழிவு நீர் செல்ல வெட்டப்பட்ட குழியால் வீடுகளுக்கு செல்ல கூட பாதையில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சாக்கடை கால்வாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிரமராம்மா தேவி, மல்லிகார் ஜுன துர்கம் மலைகோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.

    இதனையடுத்து தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

    மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.

    விழாவில் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி முரளி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் நாகராஜ், குமரன் அகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    விழாவில் கோவில் திருவிழா கமிட்டியினர், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, காரண்டப்பள்ளி பஞ்சாயத்து ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.
    • ஆடிட்டர் மணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேசினார்.

    ஓசூர்,  

    ஓசூர்- டி.வி.எஸ் சாலையில், கொத்தூரில் அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆண்டுவிழா, நடைபெற்றது.

    விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உத்திரியம்மாள், ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும், ஆடிட்டர் மணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேசினார்.

    இதில், ,துணைத் தாளாளர் சிவானந்தா, பள்ளி செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலா ளர்களான லோகநாதன், வெங்கடரமணா குருகுலம் பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் விழாவையொட்டி, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு, கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தியும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியும் கூட்டத்தில் பேசினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு, கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சத்யா, மாவட்ட துணை செயலாளர் முருகன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

     கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயத் தேர்திருவிழா வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவினையொட்டி ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் வருகிற 18-ந் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். 

    ×