என் மலர்
கிருஷ்ணகிரி
- குற்றம்சாட்டப்பட்ட மரியதாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சுதா உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி (வயது 24). இவர் கடந்த 28.09.2019 அன்று வீட்டின் அருகில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் அருகில் இருந்த முள்வேலியில் கை வைத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்த வள்ளி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து, ஒசூர் சிப்காட் போலீசார், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினார்கள்.
அதில் வள்ளியின் வீட்டிற்கு எதிரே உள்ள குடியிருப்புக்கு சென்ற மின்சார கம்பியை மற்றொரு வீட்டில் வசிக்கும் மின்ஊழியர் மரியதாஸ் (49), என்பவர், அந்த கம்பியை முள்கம்பி வேலியில் படும்படியாக கட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மரியதாஸை போலீஸார், கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட மரியதாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சுதா உத்தரவிட்டார்.
- வெயில் தாங்க முடியாமல் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டது.
- அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானையை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர், அய்யூர் வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. விவசாயிகள், வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர்.
அதில் ஒரு சில யானைகள் தனியாக பிரிந்து தினமும் உணவு, தண்ணீர் தேடி பெட்டமுகிளாலம் அய்யூர் சாலையிலும், தேன்கனிக்கோட்டை சாலையில் சுற்றி வாகனங்களை மறித்து வருகின்றன. அதில் கிரி என்ற 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வயது முதிர்வு காரணமாக நொகனூர் காட்டில் முகாமிட்டு அவ்வப்போது தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் வாகனங்களை வழி மறித்து வந்தது.
தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டி வந்த நிலையில் கிரி யானை உணவு தேடி இடம் பெயர்ந்து அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரியில் நேற்று மதியம் தண்ணீர் குடித்து நீண்ட நேரம் கரையோரம் நின்று கொண்டிருந்தது.
பின்னர் வெயில் தாங்க முடியாமல் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குளியல் போட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானையை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- கிருஷ்ணகிரியில் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நேற்று நடந்தது.
- கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆக்சிஜன் இருப்பு, கொரோனா வார்டுகளை பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி,
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா, 2020-ம் ஆண்டு இந்தியாவில் பரவ தொடங்கியது.
2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பரவ தொடங்கிய கொரோனா அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவியது. இதன் காரணமாக சுமார் 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா முதல் அலையில் பலர் உயிர் இழந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு கொரோனா வேகமாக பரவியது. இந்த 2-வது அலையில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர்.
கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி முதல் மற்றும் 2-வது டோஸ், பின்னர் பூஸ்டர் டோஸ்கள் போட அறிவுறுத்தப்பட்டன.
மேலும் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) கொரோனா பரவல் வெகுவாக குறைந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாள்தோறும் 6 ஆயிரம் பேர் நாடு முழுவதும் பாதிக்கப்படுகிறார்கள்.
உருமாறிய புதிய வகை வைரஸ் என சுகாதாரத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுகூதும் நேற்றும், இன்றும் கொரோனா தடுப்பு தயார் நிலை ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நேற்று நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆக்சிஜன் இருப்பு, கொரோனா வார்டுகளை பார்வையிட்டார். மேலும் கொரோனா பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்ட அவர், கொரோனா வார்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ, மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்தங்கும் மருத்துவ அலுவலர்கள் செல்வி, ராஜா, மாது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.
- கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.
ஓசூர்,
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகி யோரது உத்தரவிற்கிணங்க, ஓசூர் மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று இலவச திருமணம் நடத்தப்பட்டது.
ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த ஹர்ஷிதா என்ற மணப்பெண்ணிற்கும், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த விக்னேஷ் என்ற மணமகனுக்கும் கோவிலில் வைத்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.
மேலும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை மற்றும் பணியாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரவி, மாதேஸ்வரன், கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலக புதிய கட்டிடம், 14,800 சதுர அடியில், ரூ.5 கோடியே 30 லட்சத்து 70,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
- ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாகலூர் சாலை திட்டப் பகுதி 3 -ல், ரூ.5 கோடியே 30 லட்சத்து 70,000- மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோட்ட அலுவலக கட்டிடம் மற்றும் ஓசூர் சிப்காட் தீயணைப்பு மீட்பு பணிநிலையம் தரம் உயர்த்தப்பட்டதையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் குத்துவிளக்கேற்றி அலுவலக வளாகத்தை பார்வையிட்டார்.
விழாவிற்கு, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப்- கலெக்டர் சரண்யா, வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: இந்த வீட்டுவசதி வாரிய கோட்ட அலுவலக புதிய கட்டிடம், 14,800 சதுர அடியில், ரூ.5 கோடியே 30 லட்சத்து 70,000- மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
இதில் தூண் தாம் முதல் தளம் 1,400 சதுர அடி மற்றும் இரண்டு தளம் 7,400 சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல் தளம் அலுவலக வாடகை உபயோகத்திற்கும், 2-வது தளம் அலுவலக உபயோகத்திற்கு ஏற்ப சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு அரங்கு கனிணி பிரிவு, பதிவறை, உணவருந்தும் அறை மற்றும் கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு, கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையம் தரம் உயர்த்தப்பட்டதால், கூடுதலாக 1 தீயணைப்பு வாகனம் மற்றும் 12 பணியாளர்கள் மற்றும் சிறப்பு உபகரணங்கள் இந்த நிலையத்திற்கு கிடைக்கும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், ஓசூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மாது, ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளர் சுதீர், உதவி பொறியாளர் செந்தமிழ்செல்வி, தாசில்தார் சுப்பிரமணி, , மற்றும் வீட்டுவசதி பிரிவு அலுவலர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- செங்கல்பட்டு துணைப் பதிவாளர் உமாதேவியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, செங்கல்பட்டு துணைப் பதிவாளர் உமாதேவியை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், அரசு ஊழியர் சங்க மகளிர் அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். கூட்டுறவு சங்க இணைச் செயலாளர் பானுமதி நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தரக்குறைவாகவும், கண்ணியமற்ற முறையில் பேசியும், மாதாந்திர ஊதியப் பட்டியலில் கையொப்பமிடாமலும் மற்றும் துறை உயர் அதிகாரிகளையும் இழிவாக பேசி, அடாவடித்தனம் செய்யும், துணைப்பதிவாளர் (வீட்டு வசதி) உமாதேவியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வழங்கப்பட்டுள்ளது
- வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணபிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்தம் செய்யும் வாகனங்களுக்கு உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை வழங்குவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் மற்றும் மலக்கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்த விரிவான திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கழிவுநீர் அகற்றும் லாரிகள் மற்றும் டிரெய்லர்களில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணபிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இதற்கான கட்டணம் ரூ.2000 செலுத்த வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட வாகனங்களை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும்.
உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கிருஷ்ணகிரி நகராட்சியினரால் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் நீதிமன்றம் மூலமாக வழக்குபதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
- மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பூவதி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் மணி (வயது18) கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று மன வேதனையில் இருந்த மணி குருந்தொட்டாவூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இருவரிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- கடந்த 9-ம் தேதி இருவரிடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜ், பாசப்பாவை தாக்கி மிரட்டி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள எனுசோனை பகுதியை சேர்ந்தவர் பாசப்பா (வயது52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (53). இருவரிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இருவரிடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜ், பாசப்பாவை தாக்கி மிரட்டி உள்ளார்.
இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை திருடி சென்று உள்ளார்.
- ஓசூர் டவுன் போலீசார் மாருதியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் வரதம்மன் (வயது45). இவர் சொந்தமாக மொபைல் கடையை நடத்தி வந்தார்.
இவரது கடையில் வேலை பார்த்து வந்த ஓசூர் தாசரப்பேட்டை சேர்ந்த மாருதி (24) என்பவர் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை திருடி சென்று உள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் 45 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.
இது குறித்து வரதம்மன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் மாருதியை கைது செய்தனர்.
- நேற்று பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார்.
- எதிர்பாராதமாக ஏரியில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது50). இவர் நேற்று பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதமாக ஏரியில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட எப்.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
ஓசூரில் உள்ள ஆம் ஸ்டீல் என்ற தனியார் தொழிற்சாலை, சட்டப்படி பணி ஓய்வுபெற்றவர்களுக்கு, சட்டவிரோதமாக வேலை வழங்குவதை அதிகாரிகள் அனுமதிப்பதை கண்டித்தும், தமிழக அரசு தலையிட்டு சட்டமீறல்களை தடுத்து தொழிலாளிகளை பாதுகாக்க கோரியும், கிருஷ்ணகிரி மாவட்ட எப்.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம் நகர் அண்ணாசிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழு உறுப்பினர் மாதையன் தலைமை தாங்கினார். கண்ணன், மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில பொதுச்செயலாளர் எஸ்.சுந்தரம் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் வைத்தி, மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி உள்பட பலர் பேசினர். இதில், மாவட்ட, மாநகர, தொகுதி நிர்வாகிகள், பல்வேறு நிறுவனங்களின் எப்.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி நன்றி கூறினார்.






